அழகிய கிராமம் குப்பிழான். நிழல்பட காட்சித் தொகுப்பு. updated 12-09-2015

குப்பிழான் அழகிய விவசாய பூமி பார்க்கும் இடமெங்கும் பச்சை பசேலென காட்சி தரும் இயற்கை அழகு. பச்சை நிறத்திற்கு அழகு சேர்ப்பது செம்மண். நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளால் பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் நாம் வாழ்ந்து வருகின்றோம். ஆனாலும் பெற்ற தாயையும் பிறந்த பொன்நாட்டையும் யாரும் மறந்துவிடுவதில்லை. அந்த மண்ணில் நாம் வாழ்ந்த காலம் கொஞ்சகாலம் என்றாலும் அந்த வாழ்வு எமக்கு எவ்வளவோ சந்தோசத்தை கொடுத்திருக்கின்றது. இன்று புலம்பெயர்ந்து வாழும் பெரும்பாலனவர்கள் தமது சிறுவயதில் அல்லது இளமை காலத்தில் அங்கு தான் வாழ்ந்திருக்கின்றார்கள்.

வாழ்வின் பெரும்பாலான வயதின் நிகழ்வுகளை இலகுவாக எல்லோரும் மறந்துவிடுகின்றார்கள். ஆனால் பருவ வயது வாழ்வை யாரும் மறக்கமாட்டார்கள். அவைகள் என்றும் பசுமை நிறைந்த நினைவுகளாகவே இருக்கும். நாம் எமது பால்ய நண்பர்களை சந்திக்கும் போதும் எப்போதும் கதைப்பது அந்த இளமைக்கால வாழ்வை பற்றி தான். நினைவில் வரும் பாடல்களும் அந்த காலத்தில் வந்த பாடல்கள் தான். நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலை காரணமாக பெரும்பாலனவர்கள் புலம்பெயர நேரிட்டது. புலம்பெயர் வாழ்வு எல்லாவற்றையும் தந்தாலும் எதையோ இழந்து விட்டோம் என்ற ஏக்கம் எல்லோரிலும் உள்ளது. எமது கிராமம் அதே இடத்தில் புதியனவாக காட்சி தருகின்றது. ஊர் என்பது தனிய நிலங்கள், வீடுகள், தெருக்கள் மட்டுமல்ல. மனிதர்கள் தான் பிரதானம் அதாவது சுற்றம், சொந்தம், நண்பர்கள். இன்று ஒவ்வொருவரும் பல மைல்களுக்கப்பால் வாழ்ந்து வருகின்றோம். இனி எந்தக் காலத்திலும் உண்மையான குப்பிழான் என்ற ஊரை பார்க்க முடியாது. இன்று நாம் விடுமுறையில் ஊருக்கு செல்கின்றோம் ஆனால் அங்குள்ளவர்களுக்கு எங்களை யாரென்று தெரியாது எங்களுக்கு அவர்களை யார் என்று தெரியாது. சுற்றுலா பிரயாணிகள் போல் நாம் பிறந்து வாழ்ந்த ஊரை பார்த்துவிட்டு வருகின்றோம்.


இனி என்றுமே காண முடியாத உண்மையான எமது ஊரை மன நினைவுகளோடே தரிசிக்க முடியும். ஆனாலும் முழுமையாக பழமைகளை இந்த காட்சியினூடாக கொண்டு வரமுடியவில்லை காரணம் ஊரின் தோற்றங்கள் மாறிவிட்டன. கடந்த 30 வருடங்களில் பல மாற்றங்கள். இடப்பெயர்வுகளால் பழைய பதிவுகள் அழிந்துவிட்டன. குறிப்பாக சொல்லப்போனால் இயற்கை அழகோடு குன்றின் மீது இருந்த கன்னிமார் கோவிலும் அதனோடு இருந்த குறிஞ்சிக்குமரன் சனசமூக நிலையமும் இப்போது வேறு தோற்றத்தில் இருக்கின்றது. சம தரையான யாழ் குடா நாட்டில் மலைகளையோ குன்றுகளையோ காண்பது அரிது. சமதரையான குப்பிழானில் குன்றில் இருந்த ஒரு பகுதி தான் குறிஞ்சிக்கமரன். இப்படி காலவோட்டத்தில் பௌதீக ரீதியான மாற்றங்களும் இடம்பெற்றுள்ளன.

புதிய பாடல்கள், இடைக்கால பாடல்கள், பழைய பாடல்கள் என்று 3 பிரிவுகளாக இந்த காட்சிகள் விரிகின்றன.

புதிய பாடல்கள்

 

 

இடைக்கால பாடல்கள்

 

 

பழைய பாடல்கள்