குப்பிழான் கற்கரை கற்பக விநாயகர் ஆலய வருடாந்த உற்சவம் 2017 பற்றிய ஒரு் சிறப்பு பார்வை. updated 09-08-2017


குப்பிழான் கற்கரை கற்பக விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 29-07-2017 சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து 10 நாட்கள் உற்சவம் நடைபெற்று 07-08-2017 திங்கட்கிழமை தீர்த்த உற்சவத்துடன் இந்த வருட உற்சவம் இனிதே நிறைவு பெற்றது.
திருவிழாக்களில் முக்கியமாக மஞ்ச திருவிழா சிறப்பாக இடம்பெற்றாலும் 80க்கு முதலிருந்த சிறப்பை காண முடியவில்லை. அன்றைய நாட்களில் 5ம் திருவிழாவென்றால் ஊரே விழாக்கோலம் பூணும். அதே போல் வேட்டைத் திருவிழாவும் களை இழந்து காணப்படுகின்றது. இது ஒரு சம்பிரதாயத்துக்கு நடைபெறும் ஒரு விழாவாகவே பார்க்க முடிகின்றது.

 


சப்பறத் திருவிழா மிகவும் விமர்சையாக இடம்பெற்றது. பெருமளவு பக்தர்கள் புடை சூழ மேள தாள வாத்தியங்களுடன் எம்பெருமான் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதி உலா வந்தார். அப்போது வான வேடிக்கைகள் இடம்பெற்றது. விசேட மேள கச்சேரிகளும் இடம்பெற்றது. இன்று யாழ் குடா நாட்டில் பல கோவில்களில் சுவாமி தூக்குவதற்கு கூட ஆட்கள் இல்லாத சூழ்நிலை காணப்படுகின்றது. மோட்டார் வாகனங்களின் வருகையினால் போக்குவரத்து இலகுவாக்கப்பட்டு பெரிய கோவில்களுக்கு மட்டுமே மக்கள் செல்கின்றனர். ஒவ்வொரு கிராம கோவில்களின் திருவிழாக்கள் சிறப்பாக அமையும் போது அவர்களும் இங்கு வருவதை ஊக்குவிக்க கூடியதாக இருக்கும். ஆகவே ஒவ்வொரு திருவிழாக்களும் சிறப்பாக அமைய ஆலய பரிபாலன சபை நடவடிக்கை எடுக்க வேண்டும். நிதி ஒரு பிரச்சனை என்பதால் திருவிழா செய்யும் அடியவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அல்லது காலை மாலை என்று பிரித்து மேலும் பலரை உள் கொண்டுவருவது எமது ஆலய விழாக்கள் சிறப்பாகவும் பெருமளவு மக்கள் பங்க பற்றுவதை உறுதிசெய்யும்.

 


கடந்த 8 நாட்களாக சமய சொற்பொழிவுகளும் நடைபெற்று வந்தது. சிவத்திரு பாலசண்முகன், சிவத்தமிழ் வித்தகர் சிவ மகாலிங்கம், சிவத்தமிழ் சொல்லளகர் மலீசன், சைவப்புலவர் சத்தியதாசன், திருமுறை செல்வர் விநாயகமூர்த்தி, சைவப் புலவர் முகுந்தன் போன்ற பேச்சாளர்கள் சமய சொற்பொழிவாற்றினர்.

ஆலய இரதோற்சவம் கடந்த 06-08-2017 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. காலை 5.00 மணிக்கு திருப்பள்ளியெளுச்சியுடன் ஆரம்பமானது. காலை 6.30 மணிக்கு தம்ப பூசையும், 8.00 மணிக்கு மூலஸ்தான பூசையும், காலை 9.00 மணிக்கு வசந்த மண்டப பூசையும் இடம்பெற்றது. எம்பெருமான் தனது சகோதரனோடு தாமரை மலர்களால் ஆலங்கரிக்கப்பட்டு அடியார்களுக்கு காட்சி தந்த அந்த அற்புத காட்சியை காண்பதற்கு ஆயிரம் கண் வேண்டும் பராபரமே. பத்தர்கள் புடைசூழ அந்தணர்கள் வேதம் ஓத எம்பெருமான் உள்வீதி வலம் வர ஆரம்பித்தார். அடியார்களின் தோழில் ஆடி அசைந்து வர, பூமாரி பொழிய மெல்ல மெல்ல உள் வீதியை சுற்றி வந்தார். அதன் பின்னர் தேரில் பவனி வருவதற்காக தேர் இருப்பிடத்தை நோக்கி நகர்ந்தார். மணிகள் ஒலிக்க, அரோகரா கோசத்துடன், அடியார்கள் ஆனந்த கண்ணீர் மல்க விநாயகன் தேர் ஏறினார். பலரும் பல்வேறு வேண்டுதலுக்காக கற்பூர சட்டி அங்கப்பிரதட்சணம் செய்வது வழமை. பெருமளவான கற்பூர சட்டிகள் அடுக்கப்பட்ட காட்சி எல்லோர் மனதையும் மெய்சிலிர்க்க செய்தது. சிதம்பரத்தில் ஓடாத தேரை திருபல்லாண்டு பாடி ஓட வைத்தார் சேந்தனார் என்பது பண்டைய வரலாறு. நமது ஆலயத்திலும் தேர் இழுப்பதற்கு முதல் திருப்பல்லாண்டு பாடி தான் ஒவ்வொரு முறையும் தேரை இழுப்பார்கள்.

 

 

ஆண்கள் தேங்காய் உடைத்து அங்க பிரதட்சணம் செய்ய, பெண்கள் கற்பூரசட்டி மற்றும் விழுந்து கும்பிட்டு தமது நேர்த்திக் கடனை நிறைவேற்றினார்கள். ஆட்ட காவடிகள் கன்னிமார் ஆலயத்திலிருந்து புறப்பட்டு வந்து ஆலயத்தை வந்தடைந்தது. தாளங்களின் ஒலிகளுக்கு ஏற்ப காவடிகளின் ஆட்டங்கள் கண்கொள்ளா காட்சியாக இருந்தது. கனடாவிலிருந்து வருகை தந்த புலம்பெயர் உறவு திரு ரூபன் அவர்களால் தூக்கு காவடி எடுக்கப்பட்டது. தூக்கு காவடி வீரபத்திரர் ஆலயத்திலிருந்து புறப்பட்டு எம்பெருமான் சந்நிதியை வந்தடைந்தது.


மதியம் 12 மணியளவில் பேச்சுப் போட்டி, கூட்டுப் பிரார்த்தனை போட்டியில் பங்கு பற்றியவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டது. ஆலய பரிபாலன சபை தலைவர் திரு சின்னராசா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஆலய பிரதம குரு சிவாச்சாரியார் வைத்தீஸ்வர குருக்கள் ஆசியுரை வழங்கினார். கலாநிதி உலகநாதர் நவரட்ணம் அவர்களும் திரு தம்பிஜயா கணேசநாதன் (வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியேட்சகர்) அவர்களும் சிறப்புரை வழங்கினர். நன்றியுரையை திரு ஏரம்பமூர்த்தி நிர்மலன் (பரிபாலன சபை செயலாளர்) அவர்கள் வளங்கினார். திரு நவரட்ணம் அவர்கள் தனதுரையில் குப்பிழான் கிராமத்தில் மாணவர்களிடையே சைவ சமய விழுமியங்களை பண்புகளை வளர்ப்பதற்காக ஆலய நிர்வாகம் எடுத்துக் கொண்ட இந்த முயற்சிக்கு தான் பாராட்டுகிறேன் என்றும் இப்படியான முயற்சிகளுக்கு தானும் தன்னால் இயன்ற ஊக்கத்தை தருவதோடு நிதி உதவிகளை பெற்று தருவதற்கு முயற்சிப்பதாக குறிப்பிட்டார்.

 


தொடர்ந்து திரு கணேசநாதன் அவர்கள் தனதுரையில் சைவத்திலும் தமிழிலும் வளர்ந்து நிற்கின்றது குப்பிழான் கிராமம். தற்போது யாழ் குடாநாடு எங்கும் குற்றங்களை ஒழிக்கும் செயல்பாடுகள் இடம்பெற்று வருகின்றது. வாள்வெட்டு கலாச்சாரம் போதைபொருள் கலாச்சாரம் யாழ் குடாநாடு எங்கும் இடம்பெற்று வருகின்றது. குப்பிழான் கிராமத்தையும் அது எட்டிப்பார்க்க முயற்சிக்கின்றதோ என்று தென்படுகின்றது. ஆனால் குப்பிழான் மக்கள் அனைவரும் இணைந்து முழுமூச்சுடன் இதனை தடுப்பதற்கு முயலவேண்டும். குப்பிழான் கிராமம் சமய விழுமியங்களில் ஒழுக்கத்தில் சிறந்து விளங்கிய கிராமம். போதைப் பொருட்கள் தேவையில்லாத சண்டைகள் போன்றவற்றை தவிர்த்து குப்பிழான் கிராமத்தை வளர்க்க அனைவரும் பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். திரு கணேசநாதன் அவர்கள் எமது கிராமத்தை ஆழமாக நேசிப்பவர். குல தெய்வமான கற்கரை விநாயனை வணங்கிவிட்டு தான் தனது முக்கிய வேலைகளை கவனிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


இந்த நிகழ்வில் திரு இராமநாதன் மோகன் அவர்கள் ஆலய நிர்வாகத்தால் கௌரவிக்கப்பட்டார். திரு மோகன் அவர்கள் கற்கரை கற்பக விநாயகர் ஆலயத்தின் வளர்ச்சிக்கு பெருமளவு பங்களிப்பை செய்துள்ளார் அதைவிட கிராமத்தின் பல துறைகளிலும் தனது நிதிப்பங்களிப்பை வழங்கியுள்ளார்.
கடந்த பொதுக் கூட்டத்தில் கற்பக விநாயகர் அறக்கொடை நிதியம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிதியமானது சமூகத்தில் நலிவடைந்த மாணவர்களுக்கும், மக்களுக்கும் உதவி செய்வதற்கும், நமது சமயத்தை வளர்ப்பதற்கும் ஆரம்பிக்கப்பட்டது. திரு செந்தமிழ்செல்வன் மற்றும் கலாநிதி நவரத்தினம் போன்றவர்களின் ஆலோசனைக்கு அமைய இந்த நிதியம் ஆரம்பிக்கப்பட்டது.

 


திரு வைரவநாதன் மற்றும் திரு சபாரத்தினம் ஆகியோரின் வழி காட்டுதலில் கடந்த 10 நாட்களாக அன்னதான நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.


இந்த வருட மகோற்சவத்தில் பங்கு பற்றுவதற்காக பெருமளவு புலம்பெயர் மக்கள் வருகை தந்திருந்தனர். ஆலய சுற்றாடலும் ஆலயமும் மகோற்வத்தை முன்னிட்டு அதற்கு முன்னைய நாட்களில் சுத்தம் செய்யப்பட்டு அழகாக காட்சி தந்தது. ஆலய சுற்றுப் பகுதிகள் வர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கண்களுக்கு விருந்தளித்தது. அடியவர்கள் வீதி உலா வரும் பொழுது குளிர்மையாக இருப்பதற்காக முன்னைய காலங்களில் அமரர் நல்லதம்பி அவர்கள் 10 நாட்களும் வெளிவீதியில் தனது ரக்ரர் மூலம் தண்ணீர் தெளித்து தொண்டுகள் செய்து வந்தார். கடந்த ஆண்டு அவர் இறைவனடி சேர்ந்தபடியால் அவரது புதல்வன் இப்பணியை செய்துள்ளார்.