சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் கற்கரை கற்பக விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம். updated 06-08-2014

எமது கிராமத்தின் பெருங்கோயிலான கற்கரை கற்பக ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் 01-08-2014 வெள்ளிக்கிழமை ஆரம்பமானது. வழமை போன்று காலை, மாலை திருவிழாக்கள் சிறப்பாக இடம்பெற்றுவருகின்றன. வர்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஆலயமானது விழாக்கோலம்பூண்டு காட்சி தருகின்றது.


4ம் திருவிழா சிறப்பம்சமாக சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த எமது மண்ணின் கலைஞர்கள் இன்னிசை பாடல்களை பாடி எல்லோரையும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தினர். இந்த இசைக் குழு தான் குப்பிழான் பதிகங்கள் என்ற இறுவெட்டை இசையமைத்து வெளியிட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 5ம் திருவிழாவாகிய மஞ்சத் திருவிழா இம்முறை விமர்சையாக நடைபெற்றது. நாதஸ்வர, மேள, தாள இசை முளங்க எம்பெருமான் தனது சகோதரனோடு மஞ்சத்தில் வலம்வந்த அந்த அற்புத காட்சி அடியர்களை மெய்சிலிர்க்க வைத்தது. இரண்டு முறை பலத்த மழை பெய்தபொழுதும் விழா முன்பைவிட மிக சிறப்பாக அமைந்ததாக அடியார்கள் எமக்கு தெரியபடுத்தினார்கள். 80க்கு முன்னைய காலங்கள் போல் 4ம் 5ம் திருவிழாக்களை போட்டி போட்டுக் கொண்டு நடாத்தினர்கள் என்பது இந்த உற்சவத்தின் சிறப்பம்சமாகும்.இம்முறை சிறுவர்கள் சிறுமியர்களுக்கிடையே சமய அறிவுப்போட்டி, பேச்சுப்போட்டி, மாலை கட்டும் போட்டி என்பன நடாத்தப்பட்டது. இந்த போட்டிகள் அமரர் வைத்திலிங்கம் சிவபாதம் ஞாபகார்த்தமாக நடாத்தப்படுகின்றது. அமரர் சிவபாதம் இந்த ஆலயத்திற்கு செய்த சேவைகள் அளப்பரியது. அவர் செய்த சேவைகளை வார்த்தைகளால் சொல்லமுடியாது. அவரின் தன்னலமற்ற சேவைகளுக்கு பழைய நிர்வாகம் உரிய கௌரவம் கொடுக்கவில்லை என்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். உற்சவங்கள் விமர்சையாக நடைபெற்றுக்கொண்டு வருகின்றது. எதிர்வரும் சனிக்கிழமை இரதோற்சவம் ஆகும். அந்த நாளில் சிவபூமி ஆச்சிரமத்திலிருந்து சிவத்தமிழ் வித்தகர் திருவாளர் சிவமகாலிங்கம் தலைமையில் அடியார்களின் பஜனை ஊர்வலம் நடைபெறவுள்ளது.