யாழ்.குப்பிளான் கன்னிமார் கௌரியம்பாள் ஆலய புதிய சித்திர வெள்ளோட்ட விழா வெகுவிமரிசை: செய்திக் கட்டுரை. updated 30-04-2015


காசிவாசி செந்திநாதையர் போன்ற மகான்கள் திரு அவதாரம் செய்தமையால் யாழ்ப்பாணக் குடாநாட்டில் குப்பிளான் கிராமம் உயர்ந்து விளங்கும் ஒரு திருப்பரங்குன்றம் எனப் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையால் விதந்து போற்றப்பட்ட சிறப்பினையுடையது. அத்தகு குப்பிளான் மண்ணில் வீரமனைக் குறிச்சியில் எழுந்தருளி வீற்றிருந்து அருள் பாலிக்கும் கன்னிமார் கௌரியம்பாளுக்குப் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சித்திரத் தேர் வெள்ளோட்ட விழா இன்று புதன்கிpழமை(29.04.2015) காலை 11 மணிக்கு ஆரம்பமாகிச் சிறப்பாக இடம்பெற்றது.


தேரடியில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து தேருக்கு முடி சூட்டும் நிகழ்வும்,ஏனைய கிரியை வழிபாடுகளும் ஆகம விதிமுறைகளுக்கமைவாக முறைப்படி இடம்பெற்றது.தேரடி வைரவர் தேர் பீடத்தில் வீற்றிருக்க, தேர் நிர்மாணம் செய்த ஸ்தபதி ரதகலாசூரி செல்லையா பாலச்சந்திரன் தேர்ப் பீடத்தின் அருகில் நின்றிருக்க இரதம் மெல்ல மெல்ல அசைந்தாடி வந்த காட்சி அற்புதமானது. இந்த வெள்ளோட்ட நிகழ்வில் குப்பிளான் பிரதேசத்தைச் சேர்ந்த அடியவர்கள் மாத்திரமன்றி அயற்கிராமங்களைச் சேர்ந்த அடியவர்கள், புலம்பெயர் அடியவர்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டு ஆண்கள் ஒரு புறமும், பெண்கள் மறுபுறமும் தேர் வடம் தொட்டிழுத்தனர்.


இந்த அழகிய சித்திரத் தேர் குப்பிளானைச் சேர்ந்த நல்லுள்ளம் படைத்த திரு,திருமதி பொன்னையா நாகலிங்கம் குடும்பத்தினரின் பல இலட்சம் ரூபா நிதியுதவியில் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 30 ஆண்டு கால எனது கனவு இன்று தான் நிறைவேறியிருக்கிறது. அம்பாளுக்குப் புதிதாக அமைக்கப்பட்ட சித்திரத் தேர் வெள்ளோட்டம் காண்பதைக் கண்டு என்னுள்ளம் பூரிப்படைகிறது எனக் களிப்புடன் கூறினார் புலம்பெயர்ந்து வாழும் வீரமனைப் பகுதியைச் சேர்ந்த எல்லோராலும் ‘செல்வம்’ என்று அன்போடு அழைக்கப்படும் அன்பர். இதே போன்று ஏனைய அடியவர்களும் புதிய சித்திரத் தேர் வெள்ளோட்டம் கண்டு பக்திப் பரவசத்தில் திளைத்தனர். அரோகராக் கோசம் எழுப்ப சிலர் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தமையையும் அவதானிக்க முடிந்தது.


இவ்வாலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த்திருவிழா எதிர்வரும் 02 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு இரதோற்சவமும்,மறுநாள் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறும்.
தேர்த் திருவிழாவன்று மாலை மஹோற்சவ காலத்தில் இடம்பெற்ற பேச்சு நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நிகழ்வு இடம்பெறவுள்ளதாகவும் ஆலய பரிபாலன சபைத் தலைவர் சோ.பரமநாதன் தெரிவித்துள்ளார்.


செய்திக் கட்டுரையாக்கம் மற்றும் படங்கள்:-செ.ரவிசாந்.