யாழ்.குப்பிளான் கன்னிமார் கௌரியம்பாள் ஆலய சப்பறத் திருவிழாவில் கற்பூரச் சட்டிகள் ஏந்தி வந்த மாதர்கள். யாழ் குப்பிளான் வீரமனை கன்னிமார் கௌரியம்பாள் ஆலய எட்டாம் திருவிழாவான சப்பறத் திருவிழா இன்று வெள்ளிக்கிழமை (01.4.2015) சிறப்பாக இடம்பெற்றது.


இரவு 7 மணிக்கு வசந்த மண்டபப் பூசைகள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து சுவாமி உள்வீதி வலம் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து தவில், நாதஸ்வர இசை முழங்க கௌரியம்பாள் பலவர்ண மின்;விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அழகிய முத்துச் சப்பறத்தில் எழுந்தருளிய காட்சியை எளிதில் வர்ணிக்க முடியாது. உலகத்துக்கே தாயாக விளங்கும் அன்னை ஆதி பராசக்தியிடம் வரங்கள் கேட்டு திருமணாமாகாத கன்னிப் பெண்களும், சுமங்கலிப் பெண்களும் கற்பூரச் சட்டி சுமந்து தமது நேர்த்திக் கடன்களை நேர்த்தியுடன் நிறைவேற்றினர். இரவு 09.30 மணியளவில் அம்பிகை தனது இருப்பிடத்தைச் சென்றடைந்தாள்.


இவ்வாலய மஹோற்சவத்தின் முக்கிய நிகழ்வான இரதோற்சவம் நாளை சனிக்கிழமை (02.5.2015)காலை 06.30 மணிக்கு விசேட அபிஷேக பூசைகளுடன் ஆரம்பமாகி காலை 09.30 மணிக்கு வசந்த மண்டபப் பூசையும் அதனைத் தொடர்ந்து முற்பகல் 10.30 மணிக்கு அம்பாள் புதிய சித்திரத் தேரினில் பவனி வரும் அருட் காட்சியும் நடைபெறும். அம்பாளுக்குப் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரதோற்சவத்தை முன்னிட்டுக் குப்பிளான் கிராமமே விழாக் கோலம் பூண்டுள்ளது.


இதேவேளை நாளைய புதிய சித்திரத் தேர் உற்சவத்தை முன்னிட்டு யாழ்.தினக்குரல் பத்திரிகையில் குப்பிளானைச் சேர்ந்த சுவிஸ் வாழ் ஏ.வரதராசனின் அனுசரணையில், ஒரு பக்கச் சிறப்பு மலர் வெளிவரவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:-செ.ரவிசாந்.