யாழ்.குப்பிளான் காளியம்பாள் அலங்கார உற்சவம் விமரிசையாக ஆரம்பம். updated 26-05-2015


யாழ்.குப்பிளானில் எழுந்தருளி அருளாட்சி புரியும் புதுமைகள் நிறைந்து புதுப் பொலிவுடன் காட்சி தரும் காளி அம்பாள் திருக்கோவில் வருடாந்த அலங்கார உற்சவம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை(22.5.2015) ஆரம்பமாகி எதிர்வரும் (31.5.2015) வரையுள்ள பத்துத் தினங்கள் சிறப்பாக இடம்பெறவுள்ளது.


நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு சர்வலோக நாயகியான காளிகா தேவிக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபப் பூசையும், சுவாமி வீதியுலாவரும் பேரருட் காட்சியும் நடைபெற்றது.
நேற்றைய தினம் இரண்டாம் நாள் உற்சவம் முதல் தினமும் மாலை 06 மணிக்கு அன்னைக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று அம்பாள் வீதியுலா வரும் தெய்வீகக் காட்சியும் இடம்பெறும்.


10 ஆம் நாளான எதிர்வரும் 31 ஆம் திகதி காலை 10 மணிக்கு விஷேடமாக காளிகா தேவிக்கு 108 சங்காபிஷேகமும் அதனைத் தொடர்ந்து அன்னதானமும் இடம்பெறும். அடுத்த மாதம் 01 ஆம் திகதி விசாகப் பொங்கல் உற்சவமும் நடைபெறுமென ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.


நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையைத் தொடர்ந்து காலாகாலமாக வைகாச விசாகத்தை இறுதிநாளாகக் கொண்டு இடம்பெற்று வந்த காளி அம்பாள் ஆலய அலங்கார உற்சவம் தவிர்க்க முடியாத காரணங்களால் ஆவணி மாதத்திற்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் காளியம்பாளின் மீளா அடியவர்களின் எண்ணத்திற்கும், விருப்புக்கும் ஏற்ப ஆலய பரிபாலன சபையின் ஏகோபித்த தீர்மானத்துக்கமைய இந்த வருடம் முதல் மீண்டும் வைகாசி விசாகத்தை இறுதி நாளாகக் கொண்டு இவ்வாலய அலங்கார உற்சவம் நடாத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.


வழமையாகப் பெருமளவு சனக் கூட்டம் கலந்து கொள்ளும் இவ்வாலய அலங்கார உற்சவத்தின் முதல்நாளான நேற்று முன்தினம் பரிபாலன சபை எடுத்த திடீர் தீர்மானம் காரணமாகக் குறைந்தளவு மக்கள் கூட்டமே உற்சவத்தில் பங்கேற்றதைக் காண முடிந்தது.
இதேவேளை இதுவரை காலமும் சைவாகம ஜோதி சி.கிருஷ்ணசாமிக் குருக்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த அலங்கார உற்சவக் கிரியைகள் இந்த வருடம் கிரியா கலாபமணி சிவஸ்ரீ கி.வைத்தீஸ்வரக் குருக்கள் மற்றும் பிரம்மஸ்ரீ வை.கிருஷ்ணானந்தசர்மா ஆகியோரால் நிகழ்த்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:-ரவி.