யாழ்.குப்பிளான் காளியம்பாள் ஆலய சங்காபிஷேக உற்சவம் இன்று வெகுவிமரிசை. updated 31-05-2015


சைவமும் தமிழும் சலசலத்து ஓடும் குப்பிளான் பதியில் வீற்றிருந்து தன்னை நாடி வரும் அடியவரின் துயர் நிக்கி வாழ வைக்கும் காளியம்பாள் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் இறுதிநாளான சங்காபிஷேக உற்சவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (31.5.2015) காலை 10 மணி முதல் சிறப்பாக இடம்பெற்றது.


இந்த ஆலயத்தின் அலங்கார உற்சவம் கடந்த 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி இடம்பெற்று வந்த நிலையிலேயே பத்தாம் நாளாகிய இன்றைய தினம் சங்காபிஷேக உற்சவம் நடைபெற்றது. காலை 10 மணிக்கு சர்வலோக நாயகியான காளியம்பாளுக்கு கும்பபூசை மற்றும் விசேட அபிஷேக பூசைகள், 108 சங்காபிஷேகம் என்பன இடம்பெற்று அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபப் பூசை ஆரம்பமாகியது.


இதன் போது பெண் அடியவர் ஒருவர் ஊஞ்சற் பாட்டு இசைக்க அம்பாளை ஊஞ்சலில் வைத்து ஆடிய காட்சி உருகாத மனங்களையும் உருக வைத்தது.இதன் போது சில அடியவர்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக,அரோகராக் கோஷத்துடன் குறையிரந்து தொழுதமையையும் காண முடிந்தது. வசந்த மண்டபப் பூசையைத் தொடர்ந்து பக்தர்கள் புடை சூழ அம்பாள் அலங்கார ரூபினியாக ஆலயத்தை வலம் வந்த காட்சி கண்டு அடியவர்கள் பேருவகை அடைந்தனர்.அம்பாள் இருப்பிடம் வந்தடைந்ததைத் தொடர்ந்து பகல் 1 மணியளவில் தானங்களில் சிறந்த தானமாகிய அன்னதானம் அடியவர்களுக்கு வழங்கப்பட்டது.


இன்றைய சங்காபிஷேக உற்சவம் வெளிநாட்டில் புலம் பெயர்ந்து வாழும் ப.சிவனேசன் குடும்பத்தின் உபயமாக இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை நாளை திங்கட்கிழமை விசாகப் பொங்கல் உற்சவம் இடம்பெறவுள்ளதாக ஆலய பரிபாலன சபை தெரிவித்துள்ளது.


செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:-செ.ரவிசாந்.