யாழ் மாவட்ட ரீதியாக நடைபெறுகின்ற உதைபந்த தொடரின் இன்றைய அரை இறுதிப் போட்டியில் புங்குடுதீவு நசரேத் அணியை வெற்றி கொண்டு இறுதிச் சுற்றுக்குள் நுளைந்தது குப்பிழான் குறிஞ்சிக் குமரன் விளையாட்டுக் கழகம். updated 28-10-2016


யாழ் மாவட்ட ரீதியாக நடைபெற்ற இந்த உதைபந்தாட்ட தொடரில் 60 க்கு மேற்பட்ட கழகங்கள் பங்குபற்றியிருந்தன. இந்த போட்டியில் பங்கு கொண்ட பெரிய கழகங்களையெல்லாம் வெற்றி கொண்டு இறுதிப் போட்டிக்குள் நுளைந்தது எமது குப்பிழான் குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக் கழகம். கடந்த 3 தசாப்தங்களாக மாவட்ட ரீதியில் நடைபெற்ற போட்டிகளில் முதன் முறையாக இறுதிச் சுற்றுக்குள் நுளைந்தது இதுவே முதல் தடவையாகும்.

 

இன்றைய போட்டியின் தொகுப்பு.

மெலிஞ்சிமுனை  இருதயராஜா வி.கழகம் நடாத்தும் மாவட்ட ரீதியிலான உதைபந்தாட்ட தொடரின் இன்றைய அரையிறுதி ஆட்டத்தில் புங்குடுதீவு நசரேத்மற்றும் குறிஞ்சிக்குமரன் அணிகள் பலப்பரீட்சையில் இறங்கின. 

போட்டி ஆரம்பம் முதலே இரு அணிகளும் கோல் பரப்பை ஆக்கிரமித்தனர். ஆனாலும் கோல் வாய்ப்புகள் வீணடிக்கப்பட்டன. சிறப்பான தடுப்பாட்டத்தால் இரு அணிகளும் முற்பாதியில் எதிரணிக்கு கோல் கணக்கை பூச்சியமாகவே ஆக்கின. தொடர்ந்த இரண்டாம் பாதியிலும் தடுப்பாட்டமே தொடர்ந்தது. எனினும் சளைக்காமல் போராடிய இரு அணிகளாலும் எதுவித கோல்களையும் பெற்றுக் கொள்ள முடியவில்லை. கோல் கணக்கு பூச்சியமாகவே ஆட்டம் நிறைவுற்றது. 

வெற்றியை தீர்மானிக்கும் தண்ட உதை முடிவில் #குறிஞ்சிக்குமரன் சார்பாக கோல் காப்பாளராக செயற்பட்டு அற்புதமான இரண்டு கோல்களை தடுத்த ரிதுஷன் (கோவிந்து) மூலம் 4:2 என்ற கோல் கணக்கில் குப்பிளான் குறிஞ்சிக்குமரன் அணி வெற்றி பெற்று இறுதிக்குள் நுழைந்தது.

மிக வேகமாக வளர்ந்து வரும் குறிஞ்சிக்குமரன் அணியினர் மறுபுறத்தே பல்வேறு இடர்களுக்கு மத்தியிலேயே போட்டிகளில் பங்கு பற்றுகின்றனர். முக்கியமாக பொருளாதார நெருக்கடி பெரும் பிரச்சனையாகவுள்ளது. ஒவ்வொரு போட்டிகளிலும் பங்கு பற்றுவதற்கு நுளைவுச் சீட்டுக்கு பெருமளவு பணம் செலுத்த வேண்டிய தேவையுள்ளது. அதை விட போட்டிகள் தூர இடங்களில் நடைபெறுவதால் வாகனங்கள் வாடகைக்கு பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். வீரர்கள் சிறப்பாக விளையாட அவர்களுக்கு தேவையான உணவு உட்பட பல தேவைகளை நிறைவேற்றவேண்டியுள்ளது.


இதை நிறைவேற்றுவதற்கு கழகத்திடம் எந்த வித பொருளாதார வசதிகளும் இல்லை. மற்றைய ஊர் கழகங்களுக்கு பெருமளவு நிதிகள் புலம்பெயர் தேசங்களிலிருந்து வந்து குவிகின்றன. எமது வீரர்களுக்கும் போதிய வசதிகளை செய்து கொடுத்தால் எமது கழகம் வடமாகாணத்திலேயே பெரிய அணியாக உருவாகும் என்பதில் ஜயமில்லை. ஆகவே விளையாட்டுத்துறையில் ஆர்வமுள்ள புலம்பெயர் உறவுகளிடமிருந்து உதவிகள் அவர்களை சென்றடைய வேண்டும். விளையாட்டுத்துறையில் எமது கிராமம் வெற்றிக் கொடி நாட்ட வேண்டும்.