குப்பிளான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி இன்று விமரிசை (Photos) updated 03-02-2016


குப்பிளான் மகா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுநர் போட்டி இன்று புதன்கிழமை(03-2-2016) பிற்பகல் -1.30 மணி முதல் குப்பிளான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ள விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்றது .

வித்தியாலய அதிபர் க.காராளசிங்கம் தலைமையில் இடம்பெற்ற  நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு விளையாட்டு நிகழ்வைச் சம்பிராதய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார். 

 

விருந்தினர்கள் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலயத்திலிருந்து மைதானத்திற்கு மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து மாணவர்களின் அணிநடை மரியாதை  இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து மாணவர்களின் 100 மீற்றர், 200 மீற்றர், 400 மீற்றர் ஓட்டங்கள், பழம் பொறுக்குதல், மாணவர்கள் குழுவாக இடைவெளியில் ஓடுதல், 400 மீற்றர் ஆண்,பெண்களுக்கான அஞ்சலோட்டம், இடைவேளை உடற்பயிற்சிக் கண்காட்சி, தரம் -1,2 மாணவர்களுக்கான சங்கீதக் கதிரை, ஆண்,பெண்களுக்கான கயிறிழுத்தல் போட்டி,விநோத உடை   போன்ற பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து பழைய மாணவர்களுக்கான 400 மீற்றர் ஓட்டம், பழைய மாணவிகளுக்கான பந்துப் பரிமாற்றம் ஆகிய போட்டி நிகழ்வுகளும், பெற்றோர்களுக்கான பந்துப் பரிமாற்றம் போட்டி நிகழ்வும்  இடம்பெற்றன. 

விநோத உடைப் போட்டியில் கலந்து கொண்ட சிறுவனொருவன்   " சிறுவர்களாகிய எமக்குப் போதையற்ற உலகம் ஒன்றை உருவாக்கித் தாருங்கள்"  எனும் பேரில் எழுதப்பட்ட  சுலோகம் ஒன்றைத் தாங்கியிருந்ததுடன் மது போதைகளால் சமுதாயம்   எதிர் நோக்கின்ற பாதிப்புக்கள் தொடர்பில் தனது உள்ளக் கிடக்கைகளையும் வெளிப்படுத்தினார்.இடைவேளையின் போது  இடம்பெற்ற  பாடசாலை மாணவிகளின் இசையும் அசைவுடனும் கூடிய உடற்பயிற்சி நிகழ்வும் கண்களுக்கு விருந்தளித்தது.

பழைய மாணவர்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் கெளரவ விருந்தினராகக் கலந்து கொண்ட புலம்பெயர்ந்து ஜேர்மனியில் வசிக்கும் மூத்தவரான திருமேனி பஞ்சாட்சர தேவன் அவர்களும் கலந்து கொண்டு ஓடியமை கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது. 

பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தவிர்க்க முடியாத காரணத்தால் இடை நடுவில் வேறொரு நிகழ்விற்குச் செல்ல வேண்டியிருந்த காரணத்தால் அவருக்குப் பதிலாக வலி.தெற்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தி.பிரகாஷ் அவர்களும் கனடா குப்பிளான் விக்கினேஸ்வரா மன்றத்தின் தலைவர் நா.பாலசுப்பிரமணியம்,வலிகாமம் கல்வி வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி- கோசலை குலபாலசிங்கம்  ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசிக்கும் இராசா சிவானந்தா குமார் , ஜேர்மனியில் வசிக்கும் திருமேனி பஞ்சாட்சர தேவன்  ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகவும் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களையும்,வெற்றிக் கேடயங்களையும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தனர்.விருந்தினர்களின் உரைகளும் நடைபெற்றன.

இறுதியில் சுப்பையா இல்லம்(மஞ்சள்) - 323 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தையும், சுந்தரசர்மா இல்லம்(பச்சை ) -304 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தையும், தம்பிராசா இல்லம்(சிவப்பு) -251 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தையும் தட்டிக் கொண்டன.

 

குறித்த நிகழ்வில் பாடசாலையின் முன்னாள் அதிபர் ரி.தவராஜா, முன்னாள் உப அதிபர் திருமதி-விஜயராணி கிருபாரூபன், பாடசாலையின் பழைய மாணவரும், இணுவில் இந்துக் கல்லூரியின் ஆசிரியருமான தில்லையம்பலம் சசிதரன்,அயற் பாடசாலை  அதிபர்கள், வித்தியாலய மாணவர்கள், ஆசிரியர்கள் ,பழைய மாணவர்கள், பெற்றோர்கள், ஊரவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு மாணவர்களின் விளையாட்டுத் திறமைகளைக் கண்ணாரக் கண்டு களித்தனர். 

குறித்த இல்ல மெய்வல்லுநர் போட்டிக்கான அனுசரணையை குப்பிளான் விக்கினேஸ்வரா மன்றம்-சுவிஸ் வழங்கியிருந்ததுடன் வெற்றிக் கேடயங்களுக்கான அன்பளிப்பினைக் குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகமும் வழங்கியிருந்தது. விளையாட்டு நிகழ்வினை வழமை போன்று குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழக இளைஞர்களே முன்னின்று நடாத்தியமையும் குறிப்பிடத்தக்கது.  

செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள் :-செ -ரவிசாந்.