எமது ஊரின் பொன்விழா

 

 

 

 

 

 

 

 

 

 

 

குப்பிளான் விக்னேஸ்வரா மகா வித்தியாலய பரிசளிப்பு விழா, சரஸ்வதி சிலை திறந்துவைப்பு- updatd 20-10-2014


யாழ். குப்பிளான் விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவும், சரஸ்வதி சிலை திறப்பு விழாவும் நேற்றுமாலை (17.10.2014) நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் திரு. தம்பிராஜா தவராஜாவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், சிறப்பு விருந்தினராக வைத்தியக்கலாநிதி கணேசலிங்கம் சுஜந்தன், கௌரவ விருந்தினராக உடுவில் கோட்டக்கல்விப் பணிப்பாளர் தில்லைநாதன் தர்மலிங்கம் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.


நிகழ்வில் ஆசியுரையினை சைவாகம ஜோதி சி.கிருஷ்ணசாமி குருக்கள் வழங்கினார். இதனைத் தொடர்ந்து சரஸ்வதி சிலை திறப்புவிழா இடம்பெற்றது. சிங்கப்பூரில் வசிக்கின்ற குப்பிளான் விக்னேஸ்வரா வித்தியாலய பழைய மாணவர் கிருஷ்ணர்இப்பாடசாலையில் சரஸ்வதி சிலையினைக் கட்டுவதற்கு அனுசரணை வழங்கி உதவியிருந்தார்.


புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் சரஸ்வதி சிலையினை திறந்து வைத்து உரையாற்றினார். தொடர்ந்து பிள்ளைகளுக்கான பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், பரிசளிப்பு விழாவும் இடம்பெற்றது.


அத்துடன் சிங்கப்பூரில் வசிக்கும் கிருஷ்ணன் அவர்களின் உதவியின்கீழ் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் அப்பகுதியைச் சேர்ந்த 200பேருக்கு உலருணவுப் பொதிகளும் வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர். 

-செய்திக் கட்டுரையாக்கம்: Globaltamilnews.com

யாழ். குப்பிளான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலய பரிசளிப்பு விழாவில் தீபாவளி நன்நாள் சிறக்க 50 வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள்: ஒரு பார்வை

யாழ்ப்பாணம் குப்பிளான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தின் கிராம உதய பொன்விழா ஆண்டின் பரிசளிப்பு விழாவும் சரஸ்வதி சிலை திறப்பும் 17.10.2014 அன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதன் போது குப்பிளானைச் சேர்ந்த சுமார் 50 வறிய குடும்பங்களுக்கு எதிர்வரும் தீபாவளி நன்நாள் சிறக்க உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

சிங்கப்பூர் நாட்டில் வசிக்கும் குப்பிளான் மண்ணின் மைந்தன் கந்தையா கிருஸ்ணனின் 97 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 2000 ரூபா பெறுமதியான அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் விருந்தினர்களாகக் கலந்து கொண்ட வடமாகாண சபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், உடுவில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் தில்லைநாதன் தர்மலிங்கம், மற்றும் பிரபல சிறுகதை எழுத்தாளர் குப்பிளான் ஐ.சண்முகன், ஓய்வு பெற்ற குப்பிளான் வடக்கு கிராம சேவகர் எஸ்.ஞானசபேசன், கிராமசேவகர் சோ.பரமாதன், சமூக சேவையாளர் நா.கணேசலிங்கம், கணக்காளர் கு.சுரேஸ், குப்பிளான் வடக்குக் கிராம சேவகர் என்.நவசாந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வழங்கி வைத்தனர்.

குறித்த உதவித் திட்டத்தைப் பெற்றுக் கொண்ட மக்கள் மகிழ்ச்சியுடன் வீடு சென்றமையைக் காணக் கூடியதாகவிருந்தது.

மேற்படி உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான பழைய மாணவர் சங்க உறுப்பினர் தில்லைநாதன் சசிதரன் கருத்துத் தெரிவிக்கையில்,

இலண்டன் குப்பிளான் விக்கினேஸ்வரா மன்றம் தீபாவளி நன்நாளை முன்னிட்டு நலிவுற்ற மக்களுக்கான உடுபுடவைகளைக் கடந்த 2009 ஆம் ஆண்டு வழங்க ஆரம்பித்தது.

பின்னர் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இடம்பெயர்ந்து சிங்கப்பூர் நாட்டில் வதியும் க.கிருஸ்ணன் ஐயா வறிய மக்களுக்கான உலர் உணவுப் பொருட்களை வழங்க முன்வந்தார். அந்த வகையில் குறித்த உதவித் திட்டம் வழங்கும் நிகழ்வை வருடா வருடம் தொடர்ந்தும் ஏற்பாடு செய்து நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளோம் என்றார்.

இதேவேளை குறித்த உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொடிது கொடிது வறுமை கொடிது… அதனிலும் கொடிது இளமையில் வறுமை என்றார் ஒளவைப் பிராட்டி… முன்னைய காலத்தில் தங்கள் இளமைக்காலத்தில் ஊரில் வறுமையுடன் வாழ்ந்தவர்கள் பின்னர் தம் கடின உழைப்பால் புலம்பெயர்ந்து வெளிநாடு சென்றார்கள். இவ்வாறு வெளிநாடு சென்றவர்களில் பலரும் தாம் உண்டு தம் வேலை உண்டு என இருந்து விடுகின்றனர். ஒரு சிலர் தான் எந்த ஊரு என்றாலும் அது நம்ம ஊரைப் போல வருமா? என்று தாம் பிறந்து வளர்ந்த ஊர் மீதும் அங்கு வாழும் மக்கள் மீதும் உண்மையான பற்றும் பிடிப்பும் வைத்துள்ளனர்.

வெளிநாடு சென்றவுடன் தங்களின் பெற்றோர்களையே மறந்து விடும் நன்றி கெட்ட மனிதாபிமானமற்ற மனிதர்கள் மத்தியில் நலிவுற்ற மக்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மையுடைய நல்லுள்ளங்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். அவர்கள் மனிதருள் தெய்வம் என்றே கூற வேண்டும்.

அந்த வகையில் 97 ஆவது அகவையில் தடம் பதிக்கும் மண்ணின் மைந்தர் கந்தையா கிருஸ்ணன் ஐயாவின் இவ்வாறான மனிதாபிமானம் மிக்க பணி தொடர வேண்டும். புலம்பெயர்ந்து வாழும் ஏனைய உறவுகளும் தமது ஊர் நலன் சார்ந்து சிந்தித்துச் செயற்பட வேண்டும்.

 

 

செய்திக் கட்டுரையாக்கம்: செ.ரவிசாந்-