இது எங்கள் மண் என்ற உணர்வுடன் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைக்  கிராமப் புறப்  பாடசாலைகளில்  அனுமதிக்க முன் வர வேண்டும் :வலிகாமம் கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் கந்தசத்தியதாசன் (Photo) updated 17-01-2016


பிரபலமான நகர்ப் புறப்  பாடசாலைகளில் சேர்த்தால் தான் தம்முடைய  பிள்ளைகள்  கற்றுக் கொள்ளும் என்கிற தப்பான அபிப்பிராயம் தற்போது சமூதாயத்தில் புரையோடிப் போயுள்ளது.பெற்றோர்கள் தங்கள்  பிள்ளைகளின் கற்றல் செயற்பாட்டில் அதிக கவனமெடுத்தால் அந்தப் பிள்ளை எந்தப் பாடசாலையில் வேண்டுமானாலும் கல்வியைப் பெற்றுக் கொள்ளும் என்பதை ஒவ்வொரு பெற்றோர்களும் உணர வேண்டும்.இது எங்கள் மண் ,நாங்கள் கல்வி கற்ற பாடசாலை  என்ற உணர்வுடன் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைக்  கிராமப் புறப்  பாடசாலைகளில்  அனுமதிக்க முன் வர வேண்டும். பெற்றோர்கள்,மாணவர்கள் ,அதிபர்,ஆசிரியர்களின்  அர்ப்பணிப்பு பாடசாலையை உயர் நிலைக்கு இட்டுச் செல்ல உறுதுணையாகவிருக்கும். 

குப்பிளான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் தரம்-1 இல்  புதிதாக மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான கால் கோள் விழாவும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் கடந்த வியாழக்கிழமை (14-01-2016) காலை பாடசாலையின் கிருஷ்ணன் மண்டபத்தில் அதிபர் கே.காராளசிங்கம் தலைமையில் இடம்பெற்ற போது  பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

ஏதோ எங்கள்  பிள்ளைகளைப் பாடசாலையில் சேர்த்து விட்டோம்.இனி அதிபர்,ஆசிரியர்களுடைய பொறுப்பு எனப் பெற்றோர்கள் பொறுப்புணர்வின்றிச் செயற்படக் கூடாது.மாதத்தில் ஒரு தடவையாவது பாடசாலைக்கு  வருகை தந்து ஆசிரியர்கள்,அதிபருடன் தங்கள் பிள்ளைகளின் வளர்ச்சி தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ள வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் காட்டும் அக்கறையை அவர்களின் உடல் ,உள ஆரோக்கியத்திலும் காட்ட வேண்டும்.

தற்போது மேலை நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய பாடசாலையின் பழைய மாணவர்கள்,கிராம அபிமானிகள் ஆகியோர் தங்களின் கடும்  உடலுழைப்பினால் பெற்ற பணத்தை   பாடசாலையின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்துவது வரவேற்கத்தக்கது.அவர்கள் இன்னும் பல உதவிகளைப் பாடசாலைக்குச் செய்வதற்கு ஆயத்தமாகவிருக்கிறார்கள் .ஆனால், பாடசாலையில் புதிதாகத் தரம்-1 இல் இணைந்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை போதாது.

புலமைப் பரிசிலில் சித்தி பெற்ற எனது மகனை நான் நகர்ப் புறப் பாடசாலைகளுக்கு அனுமதித்ததில்லை.எமது கிராமப் புறப் பாடசாலையொன்றிலேயே மகனைக் கற்பதற்காக அனுமதித்திருக்கிறேன்.அதே போன்ற எண்ணம் ஒவ்வொரு பெற்றோர்களிடமும் உதயமாக வேண்டும்.கிராமப் புறப் பாடசாலைகளில் கற்கின்ற மாணவர்களுக்கு பல்வேறு வகையிலான திறமைகள்,தலைமைத்துவங்களைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.இன்று இந்தப் பாடசாலையில் படித்த பலரும் சமூதாயத்தில் உயர் பதவிகளில் பிரகாசித்து வருகின்றமையை நான் அறிவேன்.

வலிகாமம் கல்வி வலயத்தில் ஏறக் குறைய 35 இற்கும் மேற்பட்ட சேவைக் கால ஆசிரியர்கள் பாடசாலை தோறும் சென்று ஆசிரியர்களின் கற்பித்தல் ,மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை நாள்தோறும் கண்காணித்து வருகிறார்கள்.இந்தச் செயற்பாட்டைச் சிறப்பாகச்  செய்வதற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் எங்களை நெறிப்படுத்தி வருகிறார். 

நான் சிறுவயதாகவிருக்கும் போது குப்பிளான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தின் முன் வீதியால் பல தடவைகள் சென்றிருக்கிறேன் .அவ்வாறு சென்ற காலப் பகுதியில் இந்தப் பாடசாலையின் சிறப்பும்,இந்தப் பாடசாலையில் கற்றுக் கொண்டிருந்த மாணவர்கள் தொடர்பிலும் நான் அறிந்து வைத்திருந்தேன் .ஆனால் ,இந்த நாட்டிலே ஏற்பட்ட யுத்த அனர்த்தங்கள்,இடப் பெயர்வுகள் காரணமாக இந்தப் பாடசாலையின் கட்டடடங்கள் பல உடைந்து சிதறிய நிலையில் மீண்டும் இந்தப் பாடசாலை எதிர்பாராத வளர்ச்சி  நிலைகளைச் சந்தித்து வருகிறது.எமது வலயத்தால் நாங்கள் செய்ய வேண்டிய ஆசிரியர் வளங்கள் போன்றவற்றை நாங்கள் கொடுத்தாலும் கூட இந்தப் பாடசாலையில் கற்பதற்காகச் சேர்ந்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவுள்ளது.

நான் இன்று கலந்து கொண்ட வேறொரு பாடசாலையின் கால்கோள் விழாவில் ஒரு பாடசாலையில் 70 மாணவர்களை அனுமதிக்கலாம் எனக் கல்வித் திணைக்களம் ஒரு வரையறையைச் செய்தாலும் கூட அதற்கப்பாலும் 10 மாணவர்களைச் சேர்க்க வேண்டுமென முண்டியடித்து நாங்கள் பாடசாலைக்குப் பணம் தருகிறோம் எனப் பெற்றோர்கள்  தங்கள் பிள்ளைகளைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள்.ஆனால் ,இவ்வாறான பாடசாலைகளில் கல்வி கற்பதற்கு அவ்வாறான பெருந் தொகைப் பணத்தைச் செலுத்த வேண்டியதில்லை.அந்தப் பாடசாலையில் முதலாம் தரத்தில் மாணவர்களை இணைத்துக் கொள்வதற்குப் பிள்ளைகளுடன்  பெற்றோர்களும் வருகை தந்தார்கள் .ஆனால் ,இங்கு ஓரிரு பெற்றோர்களின் வருகையைத்  தான் காண முடிகிறது.இந்த நிலை மாற வேண்டும் எனவும்  அவர் மேலும் தெரிவித்தார்.

செய்தித் தொகுப்பு  :-செ -ரவிசாந்.