குப்பிளான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலய கால்கோள் விழாவில் ஊர்ப்பற்றாளர் கந்தையா கிருஷ்ணனின் நிதிப் பங்களிப்பில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் (Photos)
updated 16-01-2015


குப்பிளான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் முதலாம் தரத்தில் மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான கால்கோள் விழாவும் கற்றல் உபகரணங்கள் வழங்கலும் நேற்று முன்தினம் வியாழக்கிழமை(14-1-2016) முற்பகல் 10.30 மணி முதல் பாடசாலையின் கிருஷ்ணன் மண்டபத்தில் அதிபர் கே.காராளசிங்கம் தலைமையில் இடம்பெற்றது .

விழாவில் வலிகாமம் கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் கந்த சத்தியதாசன்,குப்பிளான் விக்கினேஸ்வரா மன்றம் கனடா கிளையின் தலைவர் ந.பாலசுப்பிரமணியம் ,நீர்வேலி சி.சி.த.க பாடசாலையின் அதிபரும் பழைய மாணவருமான தி.ரவீந்திரநாதன் ,குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகத் தலைவர் தி.தினேஷ் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர் .

வலிகாமம் கல்வி வலயத்தின் ஆலோசனைக்கமைய பொங்கல் நிகழ்வு பாடசாலையின் சரஸ்வதி திருவுருவச் சிலைக்கு முன்பாக நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து விருந்தினர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர் .தொடர்ந்து பாடசாலையில் இவ்வருடம் தரம்-1 இல் புதிதாக இணைந்து கொள்வதற்காக வருகை தந்த  மாணவர்கள் தரம்-2 மாணவர்களால் ரோஜாப் பூக்கள் வழங்கி வரவேற்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் புதிய அதிபராகப் பொறுப்பேற்றுள்ள  கே.காராளசிங்கம் ,வலிகாமம் கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் கந்த சத்தியதாசன்,குப்பிளான் விக்கினேஸ்வரா மன்றம் கனடா கிளையின் தலைவர் ந.பாலசுப்பிரமணியம் ,நீர்வேலி சி.சி.த.க பாடசாலையின் அதிபரும் பழைய மாணவருமான தி.ரவீந்திரநாதன் ,பாடசாலையின் முன்னாள் உப அதிபர் திருமதி-விஜயராணி கிருபாரூபன் ,தற்போது புதிதாக உப அதிபர் பதவியைப் பொறுப்பேற்றுள்ள எஸ்.ஆதவன் ஆகியோர் உரையாற்றினர்.


விழாவில் முக்கிய அம்சமாகப்  பாடசாலை வளர்ச்சிக்குப் பல்வேறு வகையிலும் உதவி வருகின்ற புலம்பெயர்ந்து சிங்கப் பூரில் வசிக்கும் ஊர்ப் பற்றாளரும் ,பழைய மாணவருமான கந்தையா கிருஷ்ணனின் நிதிப் பங்களிப்பில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன .குறித்த கற்றல் உபகரணங்கள் கந்தையா கிருஷ்ணனின் மருமகனான   தில்லைநாதன் ரவீந்திரன் மூலமாக வழங்கி வைக்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து புதிதாக இணைந்து கொண்ட மாணவர்களுக்குப் பாடசாலைச் சமூகம் சார்பாகப் புத்தகப் பைகளும் ,இலங்கை வங்கி-புன்னாலைக் கட்டுவன் கிளையினால் ஒருதொகைப் பணம் வைப்பிலிடப்பட்ட சேமிப்புப் புத்தகங்களும் வழங்கி வைக்கப்பட்டன.விழாவில் மாணவர்களின் கலைநிகழ்வுகளும் நடைபெற்றன .

செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்  :-செ -ரவிசாந்.