உழைப்பாளர் மனதில் நீங்கா இடம்பிடித்த உத்தமனுக்கு நினைவில் பாமாலை 

 

பிறப்புண்டென்றால் இறப்புண்டு என்பது 
இயற்கையின் நியதி எனில் 

உலகத்தைப் புதுப்பித்துக் கொண்டிருக்கும் 
உழைப்பாளருக்கு விழாவெடுக்கும் 
மே ஒன்றில் உங்களின் இறுதி யாத்திரை நிகழ வேண்டும் என்பது 
இறைவன் வகுத்த நியதியே . 

ஓயாமல் முதுமை வரை 
ஓய்வின்றி உழைத்த பெருமகன் 
எங்கள் உள்ளங்களில் நீங்காத இடம் பிடித்த 
வைத்தீஸ்வரன் எனும் சிவன் நாமமுடைய உயர் மகன் 
குப்பிளான் விவசாயிகள் சம்மேளனத்தின் தலைவராகவும் 
குப்பிளான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலயத்தின் உபதலைவராகவும் 
குப்பிளான் கிராம முன்னேற்றச் சங்கத்தின் முன்னாள் பொருளாளராகவுமிருந்து  
மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதை மனதில் நிறுத்திச் 
சிக்கல் பல வந்த போதும் சிறிதும் மனம் கோணாமல் 
சேவையாற்றிய அருமந்த தொண்டன் 
வெந்தபுண் போல எங்கள் மனம் வெதும்படச் செய்துவிட்டே 
விண்ணுலகம் சென்றீரோ ?

செம்மண் வளம் மிகுந்த 
குப்பிளான் மண் செய்த தவத்தால் 
வந்துதித்த எப்போதும் 'ஓயாத அண்ணை'  
அனைவராலும் ஓயா அண்ணை என அன்புடன் அழைக்கப்பட்டவரே 
குல தெய்வமாம் கற்கரைக் கற்பக விநாயகர் திருவருளினால் 
உற்றார், உறவினர், நண்பர்கள் சாட்சியாகக் 
குலமகளாம்  தன் தாய் மாமன் மகளைத் தன் வாழ்க்கையைத் துணையாக ஏற்று  
பதினாறு செல்வங்களில் ஒன்றான சந்தானப் பேற்றினைக் 
குறைவின்றிப் பெற்று 
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து காட்டினீர் ஐயா ....
வானுறையும் தெய்வத் திருவடியில் உங்கள் ஆத்மா 
கருத்தொன்றிச் சாந்தி பெற்றிட பிரார்த்திக்கிறோம் ஐயா .....

சொந்த மண்ணை விட்டு இடம்பெயர்ந்து 
மீண்டும் எம் மண்ணை நாடி வந்த ஆரம்பத்தில்  
அரசாங்கத்தால் செயற்படுத்தப்பட்ட மரநடுகைச் செயற்திட்டத்தில் முன்னின்று செயற்பட்டவரே  
குப்பிளான் விவசாயிகள் சம்மேளனம் சொந்தக் கட்டடத்தில் 
இயங்க வேண்டுமென்பதற்காக 
அல்லும் பகலும் அயராது உழைத்தவரே 
முன்னாள் உடுவில் பிரதேச செயலாளராக விளங்கி 
எம் மண்ணுக்குப் பெருமை சேர்த்த 
மகாலிங்கம் எனும் மாண்புடைப் பெருமை கொண்டவரிடம் 
விவசாயிகள் சம்மேளனத்தின் தற்போதைய தலைவருடன் 
வேறு சிலரும் சேர்ந்து விண்ணப்பம் செய்து 
அதில் வெற்றியும் கண்டவரே 
எமது கிராமத்தின் அனைத்து விவசாயிகளையும் 
ஊக்குவிக்கும் வகையில் 
வியத்தகு பல திட்டங்கள் தீட்டி
விருப்போடு விவசாயம் செய்யத் துணை நின்றவரே 
விவசாயிகள் சம்மேளனத் தலைவராக 
ஒன்பது வருடங்களுக்கும் மேலாகக் குறைவின்றிப் பணியாற்றிய 
உங்கள் பிரிவில் எங்கள் இதயங்கள் துயர் பிழியும் 
செம்மை மிகுந்த எங்கள் செம்பாட்டு மண்ணும் துயர் பகிரும் 

உங்கள் குரல் கேட்டால் போதும் அங்கே 
மயான அமைதி நிலவும் 
உங்கள் தோற்றம் கண்டால் எல்லோர் இதயங்களும் தலை வணங்கும் 
எல்லையற்ற உங்கள் அன்பால் மனைவி ,மைந்தர் மனம் மகிழும் 
உத்தமனே எங்குற்றீர்  உகுக்கின்றோம் நாம் கண்ணீர்
 உலகமே உவந்தேற்றும் விவசாயத் தொழிலையே 
வாழ்வாதாரத் தொழிலாக்கி
மண்ணிலே நல்ல வண்ணம் வாழ்ந்து
மாண்புடனே மகத்தான பணிகள் பல புரிந்தவரே 
எண்ணியதை எண்ணியாங்கு செய்து முடிக்கும் ஏற்றமிகு செயல் வீரரே 
உங்களுக்கு இறுதி விடை தர 
ஊரெல்லாம் ஒன்று கூடி கண்களில் நீர் பெருக நிற்பதை அறிவீரோ 
மண்ணுலகுச் சேவை மாண்புறவே 
போதுமென்று விண்ணுலகுச்  சேவைக்கு உங்களைச் சதி செய்து அழைத்தனரோ !
அர்த்தம் நிறைந்த உங்கள் வாழ்வின் சுவடுகளை நீள நினைந்திருப்போம் 
அரன் பொன்னடி நிழற் கீழ் உங்கள் ஆத்மா இன்புற்றிருக்கப் பிரார்த்திக்கின்றோம் 

 

 


கவியாக்கம் :- செல்வநாயகம் ரவிசாந்,
(ஊடகவியலாளர்)
வீரமனை ,குப்பிளான் .