செம்மண் சுடர் சண்முகம் வைத்தீஸ்வரனின் (ஓயா அண்ணை ) இறுதி யாத்திரை நிகழ்வில் பெரும் தொகையான மக்கள் கலந்து கொண்டு உணர்வு பூர்வ அஞ்சலி (Photos)

 

குப்பிளான் வடக்குத் தெற்கு விவசாயிகள் சம்மேளன முன்னைநாள் தலைவரும் , குப்பிளான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலய முன்னைநாள் உபதலைவரும் ,குப்பிளான் கிராம முன்னேற்றச் சங்கத்தின் முன்னைநாள் பொருளாளருமான செம்மண் சுடர்- அமரர்.சண்முகம் வைத்தீஸ்வரன்(ஓயா அண்ணை ) கடந்த மாதம்- 27 ஆம் திகதி புதன்கிழமைஅமரத்துவமடைந்த நிலையில் உழைப்பாளருக்கு விழாவெடுக்கும் உன்னதமான சர்வதேச தொழிலாளர் தினமான இன்று ஞாயிற்றுக் கிழமை( 01-05-2016) அன்னாரின் இறுதிக் கிரியைகள் மற்றும் இறுதி யாத்திரை நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன .

காலை- 8 மணிக்குக் குப்பிளான் சிவபூமி ஞான ஆச்சிரமத்திற்கு அருகாமையிலுள்ள அவரது இல்லத்தில் இறுதிக் கிரியைகள் இடம்பெற்று முற்பகல் -9.45 மணியளவில் அவரது பூதவுடல் தாங்கிய பேழை அவரது இல்லத்திலிருந்து குப்பிளான் விவசாயிகள் சம்மேளனம் வரை ஊர்வலமாகச் சுமந்து செல்லப்பட்டு அங்கு நினைவஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன .

குப்பிளான் தெற்கின் முன்னாள் கிராம சேவையாளரும் , குப்பிளான் கன்னிமார் கெளரியம்பாள் ஆலயத்தின் தற்போதைய தலைவருமான சோ. பரமநாதன் தலைமையில் இடம்பெற்ற நினைவஞ்சலி நிகழ்வில் முறையே குப்பிளான் விவசாயிகள் சம்மேளனத்தின் தலைவரும், குப்பிளான் உருளைக் கிழங்குச் சங்கத்தின் தலைவருமான செ -நவரத்தினராசா, இந்துசமய கலாசாரத் திணைக்களத்தின் முன்னாள் ஓய்வு நிலை உதவிப் பணிப்பாளரும் , பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் முன்னாள் விரிவுரையாளருமான சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம், குப்பிளான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலயத் தலைவர் க.சின்னராசா , கணக்காளர் கு.சுரேஷ்,உடுவில் பிரதேசப் பெரும்பாக உத்தியோகத்தர் குலோத்துங்கன் , யாழ்.மாவட்டக் கமநல சேவைகள் திணைக்கள ஆணையாளர் திருலிங்கநாதன் , யாழ்.மாவட்டக் கமக்கார அமைப்புக்களின் அதிகார சபைத் தலைவர் திரு-தியாகலிங்கம் , கண்டி நாவலப் பிட்டியிலிருந்து வருகை தந்த அமரர்- சண்முகம் வைத்தீஸ்வரனின் (ஓயா அண்ணை ) இளைய மகன் கல்வி கற்பிக்கும் பாடசாலையில் அதிபராகவுள்ள திரு-முத்தையா, குப்பிளான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையத்தின் முன்னாள் தலைவரும், சுன்னாகம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் முன்னாள் தலைவருமான நா.சிவலிங்கம் உரையாற்றியதுடன் குப்பிளான் குறிஞ்சிக் குமரன் விளையாட்டுக் கழகத்தின் சார்பாக நிகழ்வைத் தலைமை தாங்கி நடாத்திய சோ. பரமநாதன் சிறு குறிப்புரையை வழங்கினார்.அதனைத் தொடர்ந்து குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகத்தின் தலைவர் தி.மதன், குப்பிளான் வடக்குப் பகுதியின் முன்னாள் கிராம சேவகர் செம்மண் சுடர் எஸ்.ஞானசபேசன் , வலிகாமம் கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் திரு-இளங்கோ, வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், குப்பிளான் உழைப்பாளர் சங்கத்தின் தலைவரும் , குப்பிளான் விவசாயிகள் சம்மேளத்தின் பொருளாளருமான இ.இன்பநாயகம், குப்பிளான் கேணியடி ஞானவைரவர் ஆலயத்தின் தலைவரும், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் ஓய்வுநிலைப் பாதுகாப்பு உத்தியோகத்தருமான நா. கணேசலிங்கம், இணுவில் இந்துக் கல்லூரியின் ஆசிரியர் தி.சசிதரன் ஆகியோர் நினைவஞ்சலி உரைகள் ஆற்றியதைத் தொடர்ந்து அவரது குடும்பம் சார்பாக அன்னாரது நெருங்கிய உறவினரான செ - ஞானகணேசன் நன்றியுரை நிகழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து நினைவஞ்சலி உரைகள் ஆற்றிய அனைவரும் அன்னாரது பூதவுடலுக்கு மலர் மாலை அணிவித்துத் தமது அஞ்சலியைச் செலுத்தியதைத் தொடர்ந்து பொதுமக்கள் மலரஞ்சலியும் , இறுதி அஞ்சலியும் செலுத்தினர். அத்துடன் அன்னாருக்கு மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து ஒலிபெருக்கி வாகனத்தில் சிவபுராண இசை எழுப்பியவாறு முச்சக்கர வண்டி வாகனம் முன்னே செல்ல அன்னாரது பூதவுடல் குப்பிளான் காடகடம்பை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அக்கினியுடன் சங்கமமானது.

இன்று இடம்பெற்ற அவரது இறுதி அஞ்சலி நிகழ்வுகள் மற்றும் இறுதி யாத்திரை நிகழ்வுகளில் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் , அயலவர்கள், அதிபர்கள் , ஆசிரியர்கள், குப்பிளானின் பல்வேறு பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் , பொதுமக்கள், பல்வேறு கிராமங்களின் விவசாய சம்மேளனங்களின் பிரதிநிதிகள், அயற் கிராமத்தவர்கள் எனப் பெரும் எண்ணிக்கையான மக்கள் கூட்டம் அலையெனத் திரண்டு கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இதேவேளை, உடுவில் பிரதேச செயலக முன்னாள் செயலரும் ,இந்துசமயப் பேரவையின் முன்னாள் உபதலைவரும் , குப்பிளான் மண்ணுக்குப் பெருமை சேர்த்தவருமான அமரர் ஆ . மகாலிங்கம் அவர்களின் இறுதி யாத்திரை நிகழ்வுகளில் கலந்து கொண்ட பெரும் தொகையான மக்கள் கூட்டத்துக்குப் பின்னர் அதிக தொகையான மக்கள் கூட்டம் கலந்து கொண்ட இறுதி அஞ்சலி நிகழ்வு இதுவென இறுதி யாத்திரை நிகழ்வில் கலந்து கொண்ட கிராமத்து மூத்தோர்கள் சிலர் சுட்டிக் காட்டினர்.

 

செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள் :- செ -ரவிசாந்.