கண்ணீர் அஞ்சலி

ஊர்பற்றாளர் அமரர் பொன்னம்பலம் ஜெகநாதன்

குப்பிழான் கிராமத்தை ஆழமாக நேசித்த ஊர்பற்றாளர் அமரர் பொன்னம்பலம் ஜெகநாதன் அவர்கள். அன்னாரின் இழப்பு எமது கிராமத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். அன்னார் எமது கிராமத்தின் வளர்ச்சியில் முக்கியமான பங்கான நிதிப்பங்களிப்பை வழங்கி ஊரின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றினார்.

2ம் ஈழப் போரின் போது யாழ் குடா நாடு பெரும் இடப்பெயர்வை சந்தித்தது. இடம்பெயர்ந்தவர்கள் மீண்டும் ஊருக்கு திரும்பியபோது குப்பிழான் கற்கரை கற்பக விநாயகர் ஆலயம் பெரும் சேதத்துக்குள்ளாகியிருந்தது. ஆலயத்தின் சித்திரதேர் சிதைவடைந்த நிலையில் இருந்தது அதை திரும்ப நிர்மானிப்பதற்கு பெருமளவு நிதி தேவைப்பட்டது. என்ன செய்வதென்று தெரியாமல் எல்லோரும் கவலைப்பட்டு கொண்டு இருந்த நேரம் தானாக முன்வந்து ஆலயத்தின் சித்திர தேரை தனது சொந்த செலவில் அமைத்துக் கொடுத்து மீண்டும் சித்திர தேரில் எம்பெருமான் பவனிவர உறுதுணையாக இருந்தவர் அமரர் பொ.ஜெகநாதன். சிறவயதில்ஆலய சூழலிலேயே தனது பெரும் காலப் பகுதியை செலவழித்தார். இதனாலோ என்னவோ ஆலயத்தின் மீதும் பிள்ளையார் மீதும் ஆழமான பற்றுக் கொண்டிருந்தார்.

ஆலய உற்சவத்தின் போது 10 நாட்களும் அடியார்கள், எழை எழிய மக்களுக்கு அன்னதானம் வழங்கி தனது சமூகத்திற்கான பணியை செய்தார். கவனிபாரின்றி இருந்த குப்பிழான் காடா கடம்பை இந்து மயானத்தை தனது நன்பர்களோடு இணைந்து சிறப்பாக அமைத்துக் கொடுத்துள்ளார். அதைவிட மேலும் சில வேலைத்திட்டங்களுக்கு நிதிப்பங்களிப்பை வழங்கியுள்ளார். அவர் கடும் சுகவீனமுற்றிருந்த போதும் கற்கரை கற்பக விநாயகர் ஆலய திருப்பணியில் மீண்டும் தனது பங்களிப்பை வழங்க தயாராக இருந்தார். அவரின் மறைவுச் செய்தி கேட்டு நாம் எல்லோரும் என்ன செய்வதென்று தெரியாது கலங்கி நிற்கின்றோம்.

எனது பால்ய நண்பனான அமரர் ஜெகநாதன் அவர்கள் சிறு வயதில் எம்மோடு இணைந்து கிட்டிப்புல்லு, கிளித்தட்டு விளையாடுவார். எம்மோடு இணைந்து சில பல குறும்புகளும் செய்வார். குறம்புகள் செய்து அகப்படும்போது தான் மட்டும் தப்பி, தன் நலனை மட்டும் நோக்காது எமக்காக் சண்டை பிடிப்பார். தனக்கு எது கிடைத்தாலும் எமக்கும் தந்து தானும் சேர்ந்து சாப்பிடுவார். . அமரர் ஜெயா நட்புக்கு துணையாகவும், மற்றவர்களோடு பகிர்ந்துண்ணும் சிறந்த மனப்பாங்கும் சிறுவயதில் அவரிடம் இருந்தது.

ஒவ்வொரு கால கட்டத்திலும் புதிய நண்பர்கள் வருவார்கள் அதன் பிறகு அவரின் நட்பு கிடைக்காவிட்டாலும். அவரோடு இணைந்து செய்த குறும்புகள் இன்றும் பசுமையாக உள்ளது. எதோ இனம்புரியாத நட்பின் வலி, அவரோடு சேர்ந்து நொங்கு பிடுங்கி சாப்பிட்ட ஞாபகங்கள் நெஞ்சை வருடுகின்றது. எவன் படைத்தானோ அவன் மீண்டும் எடுத்துக் கொண்டான் இது உலக நியதி என்றாலும் மனதுக்கு இவைகள் புரிவதில்லை.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்திக்கின்றோம். அவரின் இழப்பினால் துயரிற்றிருக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

ந.மோகனதாஸ்
குப்பிழான் வெப்