செம்மண்ணின் நீங்காத நினைவுகள் அமரர் முத்துதம்பி முருகையா.

 

அமரர் முத்துதம்பி முருகையா.

எம்மோடு வாழ்ந்த பலர் இன்று எம்மோடு இல்லை. அவர்களில் சிலர் நினைவுகளிலிருந்து மறக்க முடியாதவர்களாக இருக்கின்றார்கள் அவர்களில் ஒருவர் தான் அமரர் முத்துத்தம்பி முருகையா. எல்லோரும் அவரை அன்பாக ஆண்டி என்று அழைப்பார்கள். குப்பிழான் பத்தகல் மண்ணில் காலடி வைக்கும் போது அவரின் நினைவுகள் ஒரு கணம் வந்து போகும். சில வருடங்களுக்கு முன்பு வரை அவர் ஏதோ ஒரு இடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்று நினைத்தோம். ஆனால் அவரை காலன் 20 வருடங்களுக்கு முதலே கொண்டு சென்று விட்டான் என்று கேள்விபட்டு மனதில் ஒரு இனம்புரியாத சோகம்.


குப்பிழான் மண்ணில் மறக்கபட முடியாத ஒரு மனிதர். தனது நகச்சுவை கலந்த பேச்சினால் எல்லோரையும் அன்பால் ஈர்த்த மனிதர். சிறுவர் பெரியவர்கள் என்றில்லாமல் எல்லோருடமும் நட்பாய் பழகும் அவரின் சுபாவம் எல்லோரையும் கவர்ந்தது. அவரை தூரத்தில் கண்டவுடன் மனதில் இருந்த கவலைகள் போய்சிரிப்பு தான் வரும். அப்படிப்பட்ட நகைச்சுவையாளனை எம் மண் இழந்து விட்டது.


சிறந்த ஒரு நாடக கலைஞர். தனது நகைச்சுவை நாடகங்களின் மூலம் சமூக விளிப்புணர்வை ஏற்படுத்தியவர். லெனின் சன சமூக நிலையம் உருவாக்கத்தில் அவரின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது. குப்பிழான் பல நோக்கு கூட்டுறவு சங்கம் போன்ற பொது அமைப்புகளில் அங்கத்தவராக இருந்து பொது விடயங்களில் அக்கறை காட்டினார். அவர் தனது வாழ்நாளில் புகைப்பிடித்தல் மதுப்பழகத்திற்கு தன்னை ஈடுபடுத்தவில்லை. அவர் பிறந்து வாழ்ந்த பத்தகல் மண்ணில் கசிப்பு என்ற கொடிய விசம் ஒவ்வொரு குடும்பங்களின் வாழ்வையும் அழித்து வந்தது. அந்த மண்ணிலிருந்து கசிப்பை ஒழிக்க முயற்சி செய்தார். அவர் தனது வாழ்நாளில் பணத்தை சம்பாதிக்கவில்லை ஆனால் நல்ல பெயரை சம்பாதித்தார்.


இறுதியாக தமிழீழ போராட்டத்தில் போராளிகளுக்கு தேவையான உதவிகள் பலவற்றை செய்து போராட்டத்திற்கு தனது தார்மீக ஆதரவை கொடுத்தார். இந்த பங்களிப்பில் தனது குடும்பத்தையும் இணைத்தார். யாழ்ப்பாண இடப்பெயர்வின் பின் வன்னிக்கு இடம்பெயர்ந்து வன்னி மண்ணில் தனது இறுதிக்காலம் வரை வாழ்ந்தார்.


அவர் நம்மோடு இன்று இல்லாவிட்டாலும் அவரின் நினைவுகள் என்றும் எம்மோடு வாழும்.