ஈழத்தின் மூத்த ஆன்மீக வாதியும், குப்பிளான் தந்த பெண் புலவருமான புலவர் மணி மாதாஜி அம்மையாரின் வாழ்வும் பணிகளும். updated 05-03-2016


ஈழத்தின் மூத்த ஆன்மீக வாதியும், குப்பிளான் தந்த பெண் புலவருமான  புலவர் மணி விசுவாம்பா விசாலாட்சி மாதாஜி அம்மையார் தனது 85 ஆவது வயதில் இன்று சனிக்கிழமை ( 05-03-2016) யாழ்.போதனா வைத்தியசாலையில் காலமானார். கடந்த சில நாட்களாக நோய்வாய்ப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இன்று சிவபேறடைந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் வைத்தியசாலையில் இருந்த படி என்னுடன் தொலைபேசியில் கதைத்த அம்மையார் இன்று எம்முடன் இல்லையென்பதை எண்ணும் போது என்னால் இன்னமும் நம்ப முடியவில்லை. அவரது இழப்பை எண்ணி என் மனதை என்னாலேயே தேற்றிக் கொள்ள முடியாமலுள்ளது. ஆனால், என்ன செய்வது? இயற்கையின் நியதி இதுவன்றோ.....?


1931 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் திகதி சீனியர் சின்னையா, உமையம்மை  தம்பதியருக்குச் செல்வப் புதல்வியாகப் பிறந்த விசாலாட்சி அம்மையார் தனது ஆரம்பக் கல்வியைக் குப்பிளான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை புன்னாலைக் கட்டுவன் அமெரிக்க மிஷன் பாடசாலையிலும், உயர் கல்வியை ஏழாலை அரசினர் பாடசாலையிலும் பெற்றார். 

1955 ஆம் ஆண்டில் ஈழத்துச் சித்தர் தவத்திரு சிவயோக சுவாமிகளைத் தமது மானசீகக் குருவாக அடைந்து உபதேசம் பெற்றார். திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரியின் அப்போதைய அதிபர் சைவப் பெரியார் மு. ஞானப்பிரகாசம் அவர்களிடம் சைவசித்தாந்தம் பயின்ற அம்மையார் பிரவேச பண்டிதர், பாலர் பண்டிதர் பரீட்சைகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்றார். 1960 ஆம் ஆண்டு தென்னிந்தியாவின் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் புலவர் பயிற்சி முடித்த அம்மையார் வடலூர் இராமலிங்க வள்ளலாரிடம் ஞானசமய தீட்சை பெற்று ' மாதாஜி' எனும் திருநாமம் கைவரப் பெற்றார். இதன் பின் தூய துறவறத்தில் தன் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்தார். 

1964 ஆம் ஆண்டில் இலங்கை திரும்பிய மாதாஜி அம்மையார் ஏழாலை ஆத்மஜோதி நா.முத்தையா அவர்களின் அழைப்பின் பேரில் மலையகம் முழுவதும்   சைவப் பிரசங்கம் மூலம் ஆன்மீக நெறி பரப்பினார். 1965 ஆம் ஆண்டு காலப் பகுதியில் மலையகத்தின் நாவலப்பிட்டிப் பகுதியில் தாமரை வல்லித் தோட்டத்திலும், மாசிவலைத் தோட்டத்திலும், 1975 ஆம் ஆண்டு கிளிநொச்சி இந்து மகாவித்தியாலயத்திலும், 1986 ஆம் ஆண்டு ஊரெழு கணேச வித்தியாலயத்திலும் சிறப்பான வகையில் ஆசிரியப் பணியாற்றினார். 

1972 ஆம் ஆண்டில் கிளிநொச்சி குருகுலம் சென்று அங்குள்ள மாணவிகளின் விடுதி மேற்பார்வையாளராக வேதனமின்றிக் கடமையாற்றினார். அக்காலங்களில் கிளிநொச்சி, வவுனியா போன்ற மாவட்டங்களில் சைவப் பிரசாரத்திலும் ஈடுபட்டார்.

1995 ஆம் ஆண்டில் சிரமத்திற்கு மத்தியில் கொழும்பு சென்று சைவம், தமிழ் சார்பான பல நூல்களை எழுதி வெளியிட்டார். அக்காலகட்டத்தில் இந்துசமய கலாசார அமைச்சின் அழைப்பின் பேரில் இலங்கை வந்திருந்த தவத்திரு கிருபானந்தா வாரியார் சுவாமிகளிடம் ஆசிர்வாதமும் விருதும் பெற்றமை தன்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத திருப்பு முனை எனப் பல சந்தர்ப்பங்களில் கூறியிருக்கிறார். 

1997 ஆம் ஆண்டில் இந்தியாவின் திருச்சி மாநிலம் சென்ற மாதாஜி அம்மையார் அங்குள்ள திரு ஈங்கோய் மலை ஸ்ரீ லலிதா சமாஜத்தில் ஸ்ரீவித்தியா மோகினி அவர்களிடம் சந்நியாசம் பெற்று ஆன்மீக ஞானியானார்.

 2003 ஆம் ஆண்டில்  துர்க்கா துரந்தரி சிவத்தமிழ்ச் செல்வி பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டியின் அழைப்பின் பேரில்  தெல்லிப்பழை துர்க்காபுரம் மகளிர் இல்லத்திற்குச் சென்ற அம்மையார் அங்குள்ள மகளிர் இல்லச் சிறார்களுக்குச் ஆன்மீகக் கல்வியைப் புகட்டினார். இக் காலப் பகுதியில் இவரது தமிழ் சமயப் பணிகளைப் பாராட்டி கொழும்புத் தமிழ்ச் சங்கத்தால் "முதுபெரும் புலவர் " எனும் சிறப்புப் பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார். 2008 ஆம் ஆண்டில் சிவத் தமிழ்ச் செல்வியின் மறைவுக்குப் பின்னர் தனது சொந்த மண்ணான குப்பிளானில் கால்பதித்தார். சைவத்தின் காவலரான ஆறுமுக நாவலரின் நன் மாணாக்கரான  குப்பிளான் சைவசித்தாந்த காலாநிதி காசிவாசி செந்திநாதையர் திருவுருவச் சிலையின் அருகே அமைந்த சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலய மணிமண்டபத்தில் தங்கியிருந்து தனது முதுமையையும் பொருட்படுத்தாது மாணவர்களுக்கு அறநெறி சார்ந்த வகுப்புக்களை நடாத்தியதுடன் தனது வாழ்வின் இறுதிவரை சொக்கவளவு சோதிவிநாயகர் அறநெறிப் பாடசாலையின் ஆலோசகராகவுமிருந்து திறம்படச் செயற்பட்டார். அதுமட்டுமன்றித் தன்னை நாடி வருபவர்களை அன்புடன் வரவேற்றுப் பல ஆன்மீக நற்சிந்தனைகளையும்  வாரி வழங்கியுள்ளார். அத்துடன்  இலங்கை வானொலி மூலமாகவும் ஆன்மீகச் சிந்தனைகள் பல வழங்கியுள்ளார் . இவர் குப்பிளான் சொக்கவளவு சோதி விநாயகரில் கொண்டிருந்த பக்தியும், நம்பிக்கையும் அளவிடற்கரியது.

இதுவரை ஏறக்குறைய முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை அம்மையார் எழுதி வெளியிட்டுள்ளார். இவற்றில் சிறுவர் ஞானத் தமிழ் நாடகம், சிவவிரத மான்மியக் கதைகள், சிவராத்திரி புராண படனம், கந்தபுராண அமுதம், நல்லூர்க் கந்தன் நான்மணிக் கோவை, குப்பிளான் சோதி விநாயகர் கவசமணி மாலை முதலானவை குறிப்பிடத்தக்கவை. 1965 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டுவரை இவரது கட்டுரைகள் பல வீரகேசரி, ஈழநாடு, தினகரன், தினபதி, தினக்குரல், வலம்புரி போன்ற பத்திரிகளிகளிலும், பல சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. 

கடந்த 12-11-2011 அன்று தனது எண்பதாவது அகவையைப் பூர்த்தி செய்த ஆன்மீக அன்னை மாதாஜி அம்மையாரின் சமய சமூக சேவைகளைப் பாராட்டி 04-02-2012 அன்று  குப்பிளான் ஊரவர்கள் சிலர் எடுத்த முயற்சியின் பலனாக முத்துவிழாவும் முத்து விழாச் சிறப்பு மலர் வெளியீடும் செய்தமை தனது வாழ்நாளில் மறக்க முடியாத தருணம் என அடிக்கடி கூறுவார். 

இவரது சைவத் தமிழ்ப் பணிகளைப் பாராட்டிக் கடந்த வருடம்  குப்பிளான் விக்கினேஸ்வரா மன்றம்-பிரித்தானியா  "செம்மண் சுடர்" விருது வழங்கிக் கெளரவித்திருந்ததுடன் வேறு பல விருதுகளைப்  பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இந்த விருது  அவர் வாழும் காலத்திலேயே எமது கிராமம் சார்பாக வழங்கப்பட்ட மிக உயர்ந்த கெளரவமாகவே நான் கருதுகிறேன்.  

எப்போதும் நெற்றியில் திருநீறும், கழுத்தில் உருத்திராக்கமும் தரித்து முப்போதும் விநாயகர், சிவபூசை செய்து வழிபட்ட  மாதாஜி அம்மையார்  தமது பேச்சாலும், எழுத்தாலும் பல பெரியார்களினதும், ஞானிகளினதும் பாராட்டைப் பெற்ற பெருமைக்குரியவர். தன் வாழ்நாள் முழுவதும் தூயதுறவறம் காத்த மாதாஜி அம்மையார் என் நல் வாழ்விற்கும்  வழிகாட்டியாக இருந்த காரணத்தால் நான் அவரை என் ஆத்மார்த்த  குருவாக எப்போதோ தேர்ந்தெடுத்து விட்டேன். அவர் என் வாழ்வின் வளர்ச்சிக்காகச் சொன்ன புத்திமதிகள் ஒவ்வொன்றும் மிகவும் பெறுமதியானவை. அவரது புத்திமதிகள் ஒவ்வொன்றும் இப்போதும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. என் எதிர்கால இலட்சிய வாழ்விற்கு அவரது புத்திமதிகள் ஒவ்வொன்றும் நிச்சயம் பயன்படும் என்பதில் சந்தேகமில்லை.

எமது கிராமத்துக்கு மட்டுமல்ல ஈழத்தின் மூத்த பெண் புலவராகவும் விளங்கிய புலவர் மணி விசுவாம்பா விசாலாட்சி மாதாஜி அம்மையாரின் ஆன்மீக வழிகாட்டுதலை இன்றைய தலைமுறையினரில் பலரும் பெறத் தவறி விட்டனர் எனவே நான் கருதுகிறேன். அந்த வகையில் பார்க்கும் போது எனக்கு அந்தப் பாக்கியம் கிடைத்ததை என் வாழ்வின் பெரும் பேறாகவே கருதுகிறேன். அன்னாரது ஆத்மா எல்லாம் வல்ல சோதி விநாயகனின் திருவடி நீழலில் இன்புற்றிருக்கப் பிரார்த்திக்கின்றேன்.

கட்டுரையாக்கம் :- 
செல்வநாயகம் ரவிசாந்.
(இளம் ஊடகவியலாளர்)
வீரமனை, குப்பிளான்.