என் ஆத்ம குரு  மாதாஜி அம்மாவுக்கு இறுதி மடல் 

 

வறுமையுள்ள குடும்பத்தில் பிறந்த போதும் 

வாழ்க்கை நெறி தவறாது வாழ்ந்து காட்டிய வித்தகி 

உருக்குலையாது சைவநெறி வாழச் 
சந்நியாசம் பூண்ட பெருந்தகை
'நீறில்லா நெற்றி பாழ்' எனும் கூற்றிற்கமைய  
நெற்றியில் இலங்கு திருநீறும் 
கழுத்தில் உருத்திராட்ச மாலையும் தரித்து 
யாழ்.மண்,கிளிநொச்சி,வவுனியா மலையகம் என 
ஊருராய் சைவ சமய பிரசாரம் செய்த தாயே! 
குன்றாது சைவம்,தமிழ் வாழக் 
குறைவில்லாத நூல்கள் வெளியீடாக்கிய அறிவின் அட்சய பாத்திரமே 
குப்பிளான் சொக்கவளவு சோதி விநாயகரில் 
தீராத பக்தி கொண்டு 
மகான் காசிவாசி செந்திநாதையரின் வழி  நின்று 
நீங்கள் செய்த நற்பணிகள் எத்தனை? எத்தனை?

வேலைப் பளு காரணமாக பலவேளைகளில் 
பொழுது சாய்ந்த பின்னர் உங்களை நாடி வரும் வேளையில்  
மனம் கோணாமல் இன்முகத்துடன் வரவேற்று 
இரு மணித்தியாலங்களுக்கும் குறையாமல் 
நற்புத்திமதிகள் பல கூறும் என் ஆத்மகுருவே மாதாஜி அம்மா !
உங்கள் இழப்பை என்னால் நம்ப முடியவில்லை 
உங்கள் இழப்பை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை 
என் இருவிழிகள் நீர் ததும்ப 
சொல்லாமற் போனது சொக்கநாதரிடம் தானோ !
மண்ணுலகுச் சேவை மாண்புறச் செய்தமை போதுமென்று 
விண்ணுலகுச் சேவைக்கென்று உங்களை அழைத்தாரோ?
அர்த்தமுள்ள உங்கள் வாழ்வின் சுவடுகளை நீள நினைந்திருப்போம் 
உடலை விட்டு உங்கள் உயிர் பிரிந்தாலும் 
உள்ளத்தில் உங்கள் நினைவு என்றும் 
உதயசூரியனாய் நின்றொளிரும் -அதனால் 
உள்ளத்தில் நீங்கள் என்றும் ஒளிச்சுடராய் குடிகொண்டு 
வழிகாட்டி வாழ்வளிக்க வரமொன்று தாருமம்மா...!!!

கவியாக்கம்:- குறிஞ்சிக் கவி செ- ரவிசாந்,
வீரமனை ,குப்பிளான் .

 

குறிப்பு:- இந்தப் புகைப்படம் கடந்த 04-02-2012 இல் குப்பிளான் சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலய மணி மண்டபத்தில் அம்மையாரின் முத்துவிழாவில் வாழ்த்துப் பா வழங்கப்பட்ட போது எடுக்கப்பட்டதாகும்.
மற்றையது அம்மா இந்த வருட ஆங்கிலப் புதுவருடத்துக்காகத் தனது கையொப்பத்துடன் தந்த வாழ்த்துக் கவிதை.