செம்மண் சுடர் புலவர் மணி விசுவாம்பா விசாலாட்சி மாதாஜி அம்மையார் - குப்பிழான் வெப் இணையத்தின் இரங்கல் செய்தி. updated 06-03-2016


ஈழ மணி திருநாட்டின் வடபகுதியில் அமைந்துள்ள தனி சைவ கிராமம் குப்பிழான். எமது கிராமம் தமிழுக்கும் சைவத்துக்கும் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. அப்படிப்பட்ட மண் வாசனையுள்ள மண்ணில் உதித்தவர் தான் செல்வி விசாலாட்சி அவர்கள். சைவத்திற்கும் தமிழுக்கும் சமூகத்திற்கும் பல்வேறு சேவைகளை ஆற்றியுள்ளார். ஆன்மீகவாதியான மாதாஜி அவர்கள் மனிதர்களிடம் அன்பு கருணை உள்ளம் கொண்டவர். மக்கள் சேவையே மகேசன் சேவை என்று வாழ்ந்தவர். கிளிநொச்சி குரு குலம் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய அனாதை இல்லம் போன்றவைகளில் தாய் தந்தையை இழந்த பிள்ளைகளுக்கு தாய் போல் இருந்து பல்வேறு சேவைகள் செய்தார்.

2008 ஆண்டுக்கு பிறகு தான் பிறந்த மண்ணிலிருந்து இறுதிவரைக்கும் எமது குப்பிழான் கிராம மக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்து வந்தார். அவரிடம் எந்த சொத்துக்களும் இருக்கவில்லை. அவரின் சொத்துக்கள் அவரின் புத்தகங்களும் அவரினால் உருவாக்கப்பட்ட பிள்ளைகளுமே.

தன்னால் நடக்க முடியாத கட்டத்திலும் சமூகத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற தாகம் அவரிடமிருந்து அடங்கவில்லை. அறநூல் நிலையம் ஒன்று அமைக்க வேண்டும் அறநெறி பாடசாலை சிறப்பாக இயங்க வேண்டும் என்ற எண்ணங்கள் அவரின் இறுதி நேரம் வரை இருந்தது. தன்னிடம் யாரும் உதவி கேட்டு வந்தால் தன்னிடம் இருப்பதை எல்லாம் கொடுத்துவிட்டு தான் பட்டினி கிடப்பார். இவைகள் அவரிடம் இருந்த அற்புதமான பண்புகள் சாதாரண மனிதர்களை விட அபூர்வமான ஒருவருராக விளங்கினார்.

இப்படியான மனிதர்கள் இந்த உலகில் பிறப்பது அரிது. அவர் எம்மண்ணில் பிறந்தது எம்முன்னோர்கள் செய்த பெரும்பாக்கியம். இப்படியான மனிதர்கள் காலத்திற்கு காலம் தோன்றுவதனால் தான் உலகம் இன்னும் தர்ம வழியில் பயணித்த்துக் கொண்டு இருக்கின்றது. பல்துறை சார்ந்த ஆழுமை கொண்ட ஒருவராக விளங்கினார். அவரை முழுமையாக பயன்படுத்திக் கொள்வில்லை என்ற ஆதங்கம் எம்மிடம் இப்பவும் உள்ளது.

அவர் சைவத்துக்கும் தமிழுக்கும் சமூகத்துக்கும் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு பங்களிப்பை செய்துள்ளார். அவர் தமக்கென வாழாது சமூகத்திற்காக வாழ்ந்த அந்த நீண்ட பயணம் இன்றுடன் முடிவடைந்துள்ளது. மீளாத்துயில் கொள்ளும் அம்மையாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.


ஒம் சாந்தி சாந்தி சாந்தி

ந.மோகனதாஸ்
குப்பிழான்வெப்