தொண்டு விழைந்த துறவி புலவர் விசாலாட்சி அம்மையார்.


குப்பிளான் கிராமத்தில் பிறந்தவர் புலவர் விசாலாட்சி அம்மையார் அவர்கள். தன்னலமற்ற தொண்டினை விழைந்த அவர், விசுவாம்பா, மாதாயி என்ற பெயர்களில் போற்றப்பட்டார். குப்பிளானின் செம்மண் சுடராக ஒளிர்ந்தார்.
தமிழும் சைவமும் தழைத்து வளரும் குப்பிளானில் பல அறிஞர்களும் புலவர்களும் காலத்துக்குக் காலம் தோன்றிப் பெருமை சேர்த்தனர். அவர்களின் வரிசையில் தனித்துவம் மிக்கவராக துறவு வாழ்வில் திளைத்தவர் அம்மையார்.


குப்பிளான் விக்கினேஸ்வரா வித்தியாசாலையில் தனது ஆரம்பப் படிப்பைத் தொடங்கி, வேறு சில பள்ளிகளிலும் படித்து, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் புலவர் பரீட்சைப் படிப்பை மேற்கொண்டார். பல இடங்களில் ஆசிரியப் பணிபுரிந்தபோதிலும் அனாதைச் சிறுவர்களின் படிப்பிலும் முன்னேற்றத்திலும் அவர் மனம் அதிகம் ஈடுபட்டது. கிளிநொச்சியிலுள்ள குருகுலத்திலும் பிற இடங்களிலும் பணிபுரிந்தார்.


பொது நலம் விழைந்து நின்ற இந்தச் செம்மனச்செல்வியின் வாழ்வு ஏழ்மையில் தோய்ந்தது. இன்னல்களைச் சந்தித்தது. ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டது. உள்ளே சிவ சிந்தனையையும் வெளியே சிவ சின்னங்களையும் தாங்கி இப்பெருமாட்டி வாழ்வில் அமைதி கண்டார். மூதறிஞர் க. சி. குலரத்தினம் எழுதிய சி. செந்திநாதையர் பற்றிய நூலின் மூன்றாம் பதிப்புக்கு இவர் அளித்த முன்னுரையிலிருந்து இதனை அறியலாம்.


‘நாமும் குப்பிளான் வாசி. சைவம் வளர்த்தோரை நேசிப்பவள். வறுமைக்கோட்டில் சிவ சின்னங்களைத் தோன்றாத் துணையாக, செல்வப் பொருளாகக் கொண்டவள். எமது தந்தையார் (சீனியர் சின்னையா) எழுத்து வாசிப்பு வாசைன இல்லாதவர். ஆனால் சிறந்த சிவபக்தர்.’


தந்தையைப் போல் தாயும் இறை பக்தி கொண்டவர். இவர்களின் புண்ணிய் பலனாக் பிறந்தவர் (12-11-1931) விசாலாட்சி அம்மையார். அவர், தன்வாழ்வைச் சிவபக்தியில் செலுத்தி, சிவ சிந்தனையில் நின்று, சீலத்துடன் வாழ்ந்தார். 05-03-2016-ல் சிவபதமடைந்து சிவானந்தப் பேறு பெற்றார். இன்று அவர் எம்முடன் இல்லையாயினும் எம் இதயங்களில் என்றென்றும் ஒளி சிந்தி வாழ்வார்.


‘பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல்
சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன்’.
- காரைக்கால் அம்மையார்

 


-கலாநிதி க. கணேசலிங்கம்