ஈழத்தின் மூத்த ஆன்மீகவாதியும், குப்பிளான் தந்த பெண் புலவருமான விசுவாம்பா விசாலாட்சி மாதாஜி அம்மையாரின் பூதவுடல் திருமுறை ஓத தீயுடன் சங்கமம் (Photos)  updated 07-03-2016


ஈழத்தின் மூத்த ஆன்மீகவாதியும்,குப்பிளான் தந்த பெண் புலவருமான விசுவாம்பா விசாலாட்சி மாதாஜி அம்மையாரின் பூதவுடல் இன்று திங்கட்கிழமை(07-03-2016)  பிற்பகல் 2.30 மணியளவில் அக்கினியுடன் சங்கமமானது. 

வடலூர் இராமலிங்க வல்லாளரிடம் ஞான சமயதீட்சை பெற்று 'மாதாஜி' என்ற திருநாமம் கைவரப் பெற்ற இவர் எல்லோராலும் மாதாஜி அம்மா என அன்புடன் அழைக்கப்பட்டார். இதுவரை 30 இற்கும்  மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ள  அம்மையார் ஓய்வு பெற்ற ஆசிரியர் என்பதுடன் முதுபெரும் ஈழத்துப் புலவராகவும் விளங்குகிறார்.  பல விருதுகளையும், பட்டங்களையும் பெற்றுள்ள அம்மையார் ஈழத்துச் சித்தர் தவத்திரு சிவயோக சுவாமிகளைத் தமது மானசீகக் குருவாக அடைந்து உபதேசம் பெற்றவருமாவார். 

 

 

இறுதி அஞ்சலி நிகழ்வில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும்  சிறு வயதில் அம்மையாரிடம் கல்வி பயின்ற  மாணவருமான சிவஞானம் சிறிதரன், வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், குப்பிளான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தின் தற்போதைய அதிபர் கே. காராளசிங்கம், முன்னாள் அதிபர்  ரி.தவராஜா உட்பட  ஆன்மீகவாதிகள் ,அம்மையாரிடம் கல்வி பயின்ற பல்வேறு துறை சார்ந்தவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள். 


 

அதனைத் தொடர்ந்து  அம்மையாரது வாழ்வும் பணிகளும் குறித்த நினைவஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நினைவஞ்சலி நிகழ்வு முன்னாள் இந்துசமயக் கலாசாரத் திணைக் களத்தின் உதவிப் பணிப்பாளரும், பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையின் முன்னாள் விரிவுரையாளருமான சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது தலைவர் மற்றும்  தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானம் சார்பாக மூத்த ஆன்மீகவாதி கா.சிவபாலன், குப்பிளான்  சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலயத் தலைவர் சி.குணலிங்கம், குப்பிளான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலயத்தின் அணுக்கத் தொண்டரும்,சமூக சேவையாளருமான நா.கணேசலிங்கம், குப்பிளான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரும்,  இணுவில் இந்துக் கல்லூரியின் ஆசிரியருமான தில்லையம்பலம் சசீதரன், வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், உடுவில் மான்ஸ் தமிழ்க் கலவன் பாடசாலையின் அதிபரும், இலக்கிய ஆர்வலருமான இரா.ஜெயக்குமார், உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாசாலையின் ஆசிரியர் கணேசபிள்ளை  கிருபாகரன், சுயாதீன ஊடகவியலாளர் செ -ரவிசாந் ஆகியோர் கலந்து கொண்டு  அம்மையாரது ஆன்மீக வாழ்வு தொடர்பிலும், அவருடன் பழகிய  தமது அனுபவப் பகிர்வுகளையும் பகிர்ந்து கொண்டனர்.

 

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று திங்கட்கிழமை காலை முதல்  குப்பிளானில்  அமைந்துள்ள அன்னாரின் உறவினரது 
இல்லத்தில் நடைபெற்று  தகனக் கிரியைகளுக்காகக் குப்பிளான் காடாகடம்பை இந்துமயானத்துக்குப்   பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு திருமுறை ஓத அவரது புகழுடல் அக்கினியுடன் சங்கமமானது. 

 

செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:-  செ.ரவிசாந்.