எமது கிராமத்து வாழ்க்கை முறையானது காலத்துக்கு காலம் உலக மாற்றத்திற்கு ஏற்றவாறு பல்வேறு மாறுதல்களை சந்தித்தித்து உள்ளது. இன்று எமது வாழ்க்கை முறை விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக முற்று முழுதாக மாறிவிட்டது. உலகமே எமக்கு முன்னால் நிற்கின்றது. கைத்தொலை பேசியில் ஆரம்பித்த எமது தொடர்பாடல் இன்று பேஸ்புக் வரை வந்து நிற்கின்றது. உணவு பழக்க வழக்கங்களும், பொழுது போக்கு அம்சங்களும் முற்றிலுமாக மாறி விட்டது. அன்றைய வாழ்வில் எமது கிராமம் தான் உலகம், திருமணங்கள் ஊருக்குள்ளேயே நடைபெற்றன. எல்லோரும் இரத்த சொந்தங்கள் தான். கூத்துக்களும், நாடகங்களும் தான் பொழுது போக்கு அம்சங்கள். சாமையும், குரக்கனும் தான் பிரதான உணவுகள். அந்த வகையில் திருமதி தங்கமுத்து தம்பித்துரை அவர்கள் 1950 ஆண்டு காலப் பகுதியை மையமாக வைத்து அன்றைய வாழ்க்கை முறையையும், அவர் மண் மீது கொண்ட பாசத்தையும் கவிதை வரிகள் மூலம் உங்களுக்கு தருகிறார். தொடர்ந்து அவரின் கவிதைகள் இங்கே இடம்பெறப்போகின்றது. அவரின் ஆழமான வரிகள் ஒரு முறைக்கு பல முறை படித்தால் அந்த நாள் உங்கள் கண் முன்னே வரும்.

 


செம்மண் நினைவினிலே

மண்ணின் சிறப்பு
செம்மண் நினைவினிலே என்னுயிர் உருகிறதே
பெற்றதாய் நிகர் பிறந்த ஊரே
நற்றவம் செய்த நான் பிறந்தேன்
உற்றார் சுற்றமோடு உறவாடி மகிழ்ந்தோம்

தென்னங் கீற்றில் தென்றல் தடவும்
மடற் பனையில் மாந்தி மதுவை
கூட்டமாய்க் காக்கா கத்திப் பறக்கும்
வாட்டம் அறியா வளமிகு மண்ணது

மஞ்சு தொடும் மரத மரத்திலே
அஞ்சுகம் ஒன்றாய்க் கொஞ்சிப் பேசும்
சாலையோரம் சோலையாய் மரங்கள்
கிளைகள் ஓச்சிக் கவினாய் மிளிரும்

ஊதிச் சுவைக்கும் புகையிலைச் செடியும்
பாசிப் பயறும் பூசினிக் கொடியும்
வெங்காயமிது வெறுங்காய மல்ல
உங்காயத்திக்கு உருசி கொடுக்கும்
வெங்காயம் வளரும் வளமிகு பூமி

ஆலைகள் நிறைந்த அழகுறு பூமியில்
வேலைகள் செய்வோர் ஓயாதுழைப்பார்
உருட்டி எடுக்கு சுருட்டுத் தொழிலில்
ஊதியம் பெறுவோர் ஆயிரம் ஆயிரம்

கல்விக் கூடத்திலற் கற்றுத் தேறியோர்.
பல்கலை கற்றோர் பாவலர் நாவலர்
சொல்லின் செல்வர்கள் சிந்தனையாளர்கள்
பல நூற்றுவர் பிறந்த வளர்ந்த மண்

சித்தாந்தவித்தகர் செம்மணச்செல்வர்
காசிவாசி செந்திநாதையர் அவர்கள்
அவதரித்த ஆன்மீகப் பூமி
சிவகாமியம்மையைச் சித்தத்திற் கொண்ட
சரவணைச் சித்தர் சமாதியடைந்த ஊர்

சங்கீத வித்தவான் செல்லத்துரை முதல்
பீதம்பரனும் வேலையாவும் பொன்னையாவுமென
அண்ணாவிமார் அன்றாடிய கூத்தை
எண்ணி இன்று இனிக்குது நெஞ்சம்.

சொர்க்கமே என்றாலும் சொந்த ஊர் போலாகுமோ
நிமிர்ந்து நிற்கும் தொடர்மாடியிலிங்கே
பஞ்சு மெத்தையிற் படுத்துறங்கினும்
முற்றத்திற் பாயை முழுதாய் விரித்து
சுற்றத்தார் கூடிச் சுவைக்கக் கதை பேசி

வேப்பங் காற்று மெதுவாய் வீச
அங்காந்து நாம் அமர்ந்து தூங்கும்
இங்கிதம் எங்கே இருக்குது இங்கே
சொந்த ஊரது சொர்க்கம் அல்லவா

குளிர் பெட்டியில் ஓரமாய் இருந்த
ஓரேஞ்சுச் சாற்றை ஒரு தடிக்குச்சியால்
உறிஞ்சிப் பருகினும் அங்கு
கற்பகத் தருவின் கருப்பந் நீரில்
மாங்காய்த் துண்டை மட்டமாய் வெட்டி
உறிஞ்சிக் குடிக்கும் உருசிக்குவருமா
சொந்த ஊரது சொர்க்கமல்லவா.

எட்டு மாதம் முன் வெட்டி உரித்த
பெட்டைக் கோழியை அவுணில் சுட்டு
தின்று சுவைப்பினும் அங்கு
பனங்கிழங்கை பக்குவமாய்க்கல்லி
வேகவைத்திட வேலி மட்டையை
சாவடியின்றி முறித்த வந்து
கூடி நாங்கள் தீயை மூட்டி
வெந்தணலில் வேகவைத்து
உண்டு சுவைக்கும் உருசிக்குவருமா
சொந்த ஊரது சொர்க்கம் அல்லவா

கூத்துப் பார்க்கக் கூடி இருக்கையில்
அண்டை வீட்டு அகிலா தூங்கையில்
வண்டிக் கொழுப்பால் மீசை வைத்து
விழுந்த சிரித்து வேடிக்கை பார்க்கும் எம்
சொந்த ஊரது சொர்க்கம் அல்லவா

அண்ணாவி பீதாம்பரனார் அன்ற
மேடையில்
ஆடு ஒன்றைத் தன் காலிற் கட்ட
இடித்த ஆடு இடறி விழுத்த
துடித்தவர் எழுந்து அறுத்து விடவே
கூட்டத்துள் ஆடு ஓட்டமாய் ஓட
கூச்சலிட்டு நாம் குதூகலித்த எம்
சொந்த ஊரது சொர்க்கம் அல்லவா.

   பகடு நடக்கும் மண்

பனிபடர் பூமியில் நனிகுளிர
பகடுநடந்த பண்பட்ட மண்ணை
நினைத்துப் பார்க்கிறேன் இதயம் மகிழுது
பேனா தானே உழுது பார்க்குது

அந்திப் பகலபாய் அயராதுரைக்கும்
உழவர் வாழும் செம்மண் பூமி
எருது பூட்டி பண்படுத்தி
பயிர் நாட்டி மகிழ்வர் உழவர்

தினைப் புனத்தில் தின்னும் குருவிகளை
வளைக்கையால் வனிதையர் துரத்த
கிள்ளை மொழி பேசும் சின்னஞ் சிறுவர்கள்
கல்லை எடுத்துக் கவண் வீசித் துரத்துவர்

கஞ்சிக் கலயம் தலையிற் சுமந்து
வஞ்சி வரும் வனப்பைப் பார்த்துக்
கொஞ்சும் உள்மோடு காளையவன்
மிஞ்சிய பசியை மெல்ல மறந்து

கஞ்சியை உண்டு களிக்கும் காட்சி
நெஞ்சை வருடுது நினைவை மீட்டுது
பஞ்சமின்றிப் பகிர்ந்துண்டு வாழ்ந்த எம்
ஊரை நினைந்து உள்ளம் குளிருது

சங்கரப்பா வீட்டில் சாமையடி என்றால்
எங்களுக்கெல்லாம் ஒரே கொண்டாட்டம்
சூடு மிதித்து வைக்கோற் போரில்
சொல்லியடிப்போம் குத்துக் கரணம்

காளை மாட்டை வண்டியில் பூட்டி
கூடை கூடையாய் மரக்கறி ஏற்றி
சதங்கை குலுங்கச் சவாரியோட்டும்
பொன்னையர் குடுமி அவிழ்ந்து குலைந்து
மரக்கறிக்கூடையில் மாட்டிய காட்சியை
என்றும் நினைந்து சிரித்து மகிழ்கின்றேன்.  கம்பித்தோட்டம்

அன்றைய சம்பவம்........
அன்று ஒருநாள் கம்பித்தோட்ட காணிக்குள் என்
தம்பியும் அவர் நண்பர்களும்
எட்டு மூலைப் பட்டமொன்று
கட்டி ஏற்றினர் காற்றில் பறந்தது
விட்டு நூலை விட்டு விட்டு
ஏற்றிய பட்டம் ஏறிய போது
காற்றுக் கொஞ்சம் சுழற்றி வேகமாய்
மூசி வீச அறுந்தது பட்டம்
பறந்து நூலுடன் பனையிற் தொங்கவே
விரைந்து ஓடினர் பட்டம் எடுக்க அப்போ

பாத்திக்குள் வெங்காயம் பசுமை மாறிட
பத்துப்பேரும் மிதித்து நசுக்கிட
தோட்ட காரன் கண்டு துரத்த
ஓட்டம் பிடித்தனர் ஒன்றாய்க் கூடி
வாங்கடா உங்களை விடமாட்டேன் என
துரத்தி வந்த தோட்ட காரர்
தடுக்கி விழுந்தார் தரையில் சாய்ந்தார்.
படுத்தவர் கிடக்க பார்த்து பார்த்து
எடுத்தனர் ஓட்டம் எடுக்க பட்டம்
கிளுவை நிறைந்த கிடுகு வேலியில்
ஏறினான் பாலன் எடுக்க முயன்றான்
கொக்கை தடியால் கொழுவி இழுக்கையில்
பட்டம் கிழிய பதறிய பாலன்
கால் தடுமாறி கீழே வீழ்ந்த
சம்பவம் இன்றும் நெஞ்சை வருடுது.