சொப்பனம் சுகமா ?

அஞ்சுகம் பல ஆரவாரத்துடன் அங்கு கொஞ்சித் தின்னும் தினைப் புனங்களும் பச்சைப் பசேலெனப் பசிய தாறுடன் வண்ணமாய் நிற்கும் வெங்காயம் நிறைந்த கம்பித் தோட்டக் காணிக்குள் என் தம்பியும் தாரணியுமெனப் பத்துப்பேர் கூடியே எட்டுமூலைப் பட்டம் ஒன்று கட்டி ஏற்றினோம் காற்றில் பறந்தது.

விட்டு நூலை விட்டு விட்டு ஏற்றிடப் பட்டம் ஏறியபோது காற்றுக் கொஞ்சம் சுழற்றி வேகமாய் மூசி வீசிட அறுந்தது பட்டம் பறந்து நூலுடன் பனையிற் தொங்கவே பாத்திக்குள் வெங்காயம் பசுமை மாறிட பத்துப் பேரும் மிதித்து நசுக்கிட தோட்டக் காரர் கண்டு துரத்த நாம் ஓட்டம் பிடித்தோம் ஒன்றாய் கூடி.

வாங்கடா உங்களை விடமாட்டேனென வாங்கிட மூச்சு வேகமாய் ஓடித் துரத்தி வந்த தோட்டக்காரர் தடுக்கி விழுந்தார் தரையிற் சாய்ந்தார் படுத்தவர் கிடக்கப் பார்த்துப் பார்த்து எடுத்தோம் ஓட்டம் எடுக்கப் பட்டம் கிளுவை நிறைந்த கிடுகு வேலியில் ஏறினான் பாலன் எடுக்க முனைந்தான்.

கொக்கைத் தடியால் கொழுவி இழுக்கையில் பட்டம் கிழியப் பதறிய பாலன் கால் தடுமாறிக் கீழே விழுகையில் பாலா. . . . என்று கதறிய படியே ஓடி நீட்டினேன் கையை அப்போ எழுந்தேன் கண்டது சொப்பனந்தானே சின்ன வயதுச் சொப்பனம் என்னைச் சிரிக்க வைத்த சொற்பம் சுகமே.

உள்ளம் கவர்ந்தது எது?

கவிதை புனையக் குவியும் உள்ளமொடு கையிற் பேனாவைக் கடிதென எடுத்தேன் பைய நெஞ்சு பரபரத்தது செய்ய மண்ணது செழிப்புடன் பயிர் உய்ந்து வளர்ந்து ஊதியம் கொடுக்கும் ஊதிச் சுவைக்கும் புகையிலை முதல் பூசினிக் செடியும் புடோலும் வளரும் வெங்காயம் இது வெறுங்காயம் அல்ல உங்காயத்தை உறுதியாய் வளர்க்கும் உருசியும் மணமும் உறுதியாய் கொடுக்கும் செய்ய மண்பூமி செல்வப்பூமி தினைப் புனத்தில் தினை தின்னும் குருவிகளை வளைக்கையால் வனிதையர் துரத்த கஞ்சிக் கலயம் தலையிற் சுமந்து வர வஞ்சி வரும் அழகைப் பார்த்து அவன் மிஞ்சிய பசியையும் மறந்து அவன் கொஞ்சிய உளமொடு கஞ்சி உண்டு களித்திருக்கும் கண்ணியப் பூமி கல்லுப் பாதையில் கடகட என மாட்டு வண்டியில் மரக்கறி ஏற்றி கூடிப் பலரும் குதூகலத்துடன் சதங்கை ஒலியுடன் சந்தைக் கேகும் காட்சி இன்றும் கண்ணில் தெரியுது முக்கனிச் சாறெடுத்து முப்போதும் பூசை முறையாய் நடக்கும் கோயில் நிறைந்த மண் முத்தமிழ் வித்தகர் முதுபெரும் ஞானி சித்தாந்த வித்தகர் செந்திநாதையர் தவழ்ந்து தடம் பதித்த பூமி உத்தமர் கலைஞர் உபாத்தியாயர் பலர் உதித்த உன்னதப் பூமி குப்பிழாய் செடி குவிந்து வளர்ந்ததால் குப்பிழான் என்னும் பெயர் பெற்ற - என்னூர் உள்ளங் கவர்ந்த உத்தமப் பூமி எப்போது ?

கொட்டும் பனியும் குளிரும் வாட்ட முட்டி எண்ணம் மோதி வெடிக்க கட்டுடலைக் கவனமாய்ப் போர்வைக்குள் விட்டு நீட்டிப் படுப்பார் சிலரும் பட்டு வந்த கடனை அடைக்கவும் வீட்டு வாடகை வாகனச் செலவென போட்டுக் கணக்குப் பெருஞ் சலனத்துடன் இரண்டு வேலை இயந்திரமாய் செய்து உருண்டு உறவுக்காய் உழைப்பவர் சிலரும் மேலை நாட்டு மோடி வாழ்வை நாடித் தம்மை மறந்த சிலரும் பத்திரிகை வானொலி பலப்பல சாதனம் சித்தம் மகிழ்ந்து சிரித்திருங்களென எத்தனை எமக்கு எடுத்து உரைப்பினும் சிட்டாய் உள்ளம் சிறகடித் தங்கு தத்தித் தவழ்ந்து தடம் பதித்து கட்டித் தழுவி முத்தமிட்டு ஏட்டைத் தொடு முன் எம் மண்ணைத் தொட்டு சுட்டு விரலைச் சுழற்றி ஆனா (அ) எழுதி அழித்து எழுதிய மண்ணில் ஆலய மணியின் அருளொலி எழுப்ப காலையில் சேவல் கூவ எழுந்து தத்தம் கடமைக்கு தாம் தாம் சென்று புத்தம் புதிய புத்துணர்வுடனே மெத்த மகிழ்ந்து மேனியாய் வாழ்ந்த சொந்த மண்ணின் செந்தூர மடியில் முகம் புதைத்து அகம் மகிழ்ந்து தலை சாய்த்து நான் படுப்பது எப்போ? உற்றார் உறவு ஊர் மக்களுடன் சற்றே இருந்து சங்கதி பேசி பசித்தோர் முகம் பார்த்து அவர்க்கு புசிக்கக் கொடுத்துப் பார்ப்பது எப்போ? ஷெல்கள் கொட்டிச் சரிந்த கோயில் திருத்தி நற்பணி புரிந்து பணிவது எப்போ? படிப்பை நிறுத்திய பிள்ளைகள் தம்மை கூட்டி அவரை படிக்கச் செய்து- அவர் கல்வியில் சிறப்பதைப் பார்ப்பது எப்போ? கருணைக் கடலாம் கணபதி கழல் பணிந்து அவன் அருள் பெறுவது எப்போதெப்போ?

எண்ணமே வாழ்வு

சீரிய எண்ணம் சிறப்பைத்தரும். பாரினில் அவரை பரிமளிக்கச் செய்யும். எண்ணங்கள் எப்பொழுதும் தூய்மையானதாகவும், வீட்டுக்கும், சமூகத்திற்கும் நல்லது செய்யும் எண்ணமாக இருத்தல் வேண்டும். எந்தக் கருமத்தைச் செய்யும் பொழுதும் நன்றாகச் சிந்தித்துச் செய்தல் வேண்டும். பதறாது, பதட்டமின்றி ஆய்ந்து, ஓய்ந்து செய்தல் வேண்டும். இதனாலேதான் பதறாத கருமம் சிதறாது என்கிறது பழுமொழி. எண்ணிக் கருமம் செய்தலை வலியுறுத்தியே வள்ளுவரும் எண்ணித் துணிக் கருமம் என்கிறார்.

நல்ல சிந்தனைகள் நல்ல வாழ்வைத் தரும். எண்ணத்தின் அடிப்படையிலேதான் அன்பு ஊற்றெடுக்கிறது. ஊங்கள் உடலும் எண்ணத்தின் அடிப்படையிலே இயங்குகின்றது என்று உடற் பயிற்சி நிபுணர்கள் கூறுகின்றனர். சிவசிந்தனையே கொண்ட திருமூலர் உடம்பின் உறுதியை வேண்டுவதாக அவர் திருமந்திரத்தில் இப்படிக்கூறுகின்றார். முன்னம் உடம்பை இழுக்கென்றிருந்தேன் உடம்பினுக்குள்ளே உறு பொருள் கண்டேன் உடம்பிலே உத்தமன் கோயில் கொண்டானென்று உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே.

நல்ல எண்ணங்கள் நலமே செயற்பட உடலும் நலமுடன் இருக்க வேண்டும். உதாரணமாக ஒருவன் ஒரு குறிக்கோளும் இல்லாமல் நடப்பானாயின் அவனுக்கு உந்தவித பயனும் கிடைக்காது. என்னுடைய கால்கள், உடல் உறுப்புக்கள் வலுவடைய வேண்டும், இரத்த அழுத்தம் இருக்குமாயின் நடப்பதனால் குறையும் என்று எண்ணிக் கொண்டு நடப்பானாயின் நிச்சயம் அவனுக்குப் பலன் உண்டு. இன்னும் இரும்புத் தொழில் செய்யும் ஒருவர் இரும்பை நீட்டியும், அகட்டியும் அடிக்கின்றார். ஆவர் உடல் வலுவிலும் பார்க்க உடல் வலுவடைய எண்ணி எண்ணி எடற்பயிற்சி செய்தால் அவர் உடல் மிகவும் வலிமை அடைகிறது. அச்சம் பற்றிய எண்ணம் இருக்குமாயின் திடீரெனக் கேட்கும் துக்கச் செய்தி கேட்டு தாங்க மாட்டாத வன்மையான எண்ணம் உடல் முழுவதும் ஊடுருவிப் பாய்ந்து அவர் உடல் அமைப்பை நிலை குலையச் செய்து இதயத்தின் செயலை நிறுத்தி மரணத்தை ஏற்படுத்துகின்றது.

எண்ணமே ஒருவன் வாழ்வுக்கும், தாழ்வுக்கும் காரணம் ஆகின்றது. எண்ணுபவை நல்லதாக எண்ணி நல்லதைச் செய்து நல்லபடியாக வாழ்வோமாக.