வாகை சூடி வா மன்மத சித்திரைப் புத்தாண்டே!மன்மத புதுவருடமே உன்னை
மலர் தூவி வரவேற்கிறோம்
பின்னடைவை எதிர்நோக்கும் எம் சமூக வாழ்வில்
எதிர்பாராத முன்னேற்றங்கள் காண
பிறக்கும் தமிழ் சிங்களப் புத்தாண்டே!
உன்னை இரு கரம் கூப்பி வரவேற்கிறோம்

புத்தாடை புனைந்து
புனிதத்தைக் கடைப்பிடித்து
மத்தாப்பு வெடித்து மனதாரப் புத்தாண்டை
வாசல்தோறும் கோலமிட்டு வரவேற்போம்
ஊர் தழைக்க உழைப்புப் பெருக
அன்பு பொங்க அமைதி பெருக
வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று வாழ
வாகை சூடி வா சித்திரைப் புத்தாண்டே!

கல்வி கலை கலாசாரத்துக்குப் பெயர் போன
யாழ் மீட்டும் யாழ்.மண்
பாழ்பட்டுப் போவதைப் பார்த்திருக்காமல்
எம்மால் முடிந்த வரை
எமது மண்ணின் பெருமை காக்க
இன்றே சபதமெடுப்போம்
இனியொரு விதி செய்வோம்

இனங்களிடையே இருக்கின்ற பேதமை இருளகற்றி
எம்மிடமுள்ள அறியாமை அறவே நீங்கி
எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற
உயரிய எண்ணம் ஓங்கிட
சித்திரைப் புத்தாண்டே எத்தி உனைப் போற்றுகின்றோம்
மனிதனுக்கெதிராக மனிதன் புரியும் வன்மம் ஒழிந்து
பெண்களுக்கெதிரான அநீதிகள் நீங்கி
மனித வாழ்வியல் நெறி மாறாது காத்திட
வாகை சூடி வா சித்திரைப் புத்தாண்டே!


கவியாக்கம்:-குறிஞ்சிக்கவி செ.ரவிசாந்,
(இளங்கவிஞன்)
வீரமனை,குப்பிளான்.