வேலவா ஓடிவா!

[பல ஆண்டுகளின்முன் யாழ்ப்பாணம் நல்லூர் தேரினையொட்டி எழுதப்பட்டு,   ஈழநாடு பத்திரிகையில் வெளிவந்த கவிதை].   


அரக்கர்   குலத்தை   அழித்துப்   பகைவென்று
அச்சம் களைந்தகூர்  வேலவா! -  தேவர்
மெச்சும்   கதிர்வடி   வேலவா!
சுரக்குமுன்   பேரருள்   வேண்டுகி   றோமெமைச்
சூழும்    பகைபொடி   யாக்குவாய்! -  புவி
மூழும்   பயத்தினைப்   போக்குவாய்!
வள்ளிக்   கொடியிடை   வாழ்ந்த   குறத்தியை
வாழ்வில்   கரைசேர்த்த   வேலவா! -  புவி 
வாழ்வைக்   கரைசேர்க்கும்   வேலவா!
உள்ளத்   திருளிடை   ஒன்றிய   என்னுயிர்
உன்னை   யறிந்திடச்   செய்திடாய்! -  நான்
என்னை   யறிந்திடச்   செய்திடாய்!
வையத்தில்    இன்பத்தின்   எல்லையைக்   கண்டுதன்
வாழ்வை   அழிக்க   விழைந்தவன்  -   இன்ப
வாழ்வுபெண்   ணோடென்   றழிந்தவன்
உய்ய   வழிசெய்து   உண்மைப்   பொருளுக்கு
உரியவ   னாக்கினாய்   வேலவா! -  அருண
கிரிக்கருள்   தேக்கினாய்   வேலவா!
பொன்னுக்கும்   மண்ணுக்கும்   பெண்ணுக்கு   மாயிந்தப்
பூதலத்   துள்ளவர்   வாழ்வதா? -   காலம்
போதல்   அறியாது   மாழ்வதா?
பின்னுக்கு   யாதவ   ரோடுதான்   ஏகிடும்?
பேதைமை   போக்கிடு   வேலவா! -  ஆசை
மோதலை   நீக்கிடு   வேலவா!
அரக்கர்   குணத்தை   அழித்திருள்   சூழ்ந்திடும் 
அகத்தினி   லேயொளி   காட்டுவாய்! -   இந்த
இகத்தினி   லேயெழில்   கூட்டுவாய்!
சுரக்குமுன்   பேரரு   லாலெமைச்   சூழ்ந்திடும்
தொல்லை   சிதைந்திட   ஓடிவா! -  அருள்
நல்லைப்   பதியெழுந்   தோடிவா!  

-       

கவிஞர் க. கணேசலிங்கம்