ஒரு நாள் - எழுத்தாக்கம் குப்பிழான் தங்கம்

இன்பமும் துன்பமும் இயைந்ததே வாழ்வென
எடுத்துக் காட்டிப் பாடம் புகட்டி
தொடர்வாய் மனிதா எழுவாய் என்று
இயற்கை அன்னை இனிதே தந்தாள்

பகலும் இரவும் பற்றிவரும் நாள்
ஒருநாளது காலத்தை விழுங்கிக்
கடந்து செல்வதைச் சிந்தித்த மனிதன்
அந்தொரு நாளைப் பொன்னாளாக்கினான்

காடுவெட்டிக் களனியாக்கிப்
பாடுபட்டுப் பஞ்சாய்ப் பறந்தவன்
சிந்திய வியர்வை நென்மணியாய்
வீடு திரும்பும் நாள் ஒருநாள்

லட்சியப் பாதையில் வெற்றி நடைபோட
காற்றுத்தேறிப் பட்டம் பெற்று
பதவி ஏற்கும் நாள்
மாணவனுக்கு ஒருநாள்

ஆரா அன்புடன் அறிவைப் புகட்டி
பேரார்வத்துடன் அவன் பெறுபேறு கண்டு
உள்ளம் பூரித்து உளமாரப் போற்றும்
ஆசிரியர்க்கொரு நாள்

விழிகள் கெளவ வாய் மெளனிக்க
உளங்கள் ஒன்றி உரை தடுமாறி
இதயம் இரண்டும் இடம் மாறித்துடித்துடித்து
காதல் உணர்த்தும் காதலர்க்கொருநாள்

எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து
திருமணப் பந்தலில் இணைந்து இன்புறும்
திருமணத் திருநாளில் மங்கல ஞாண்பூட்டி
மகிழும் தம்பதியர்க் கொருநாள்

வையத்துள் மைந்தன் முந்தி இருக்கச்
செய்யத்தக்கன செய்த இவன்
என்னோற்றான் என்று இயம்பக் கேட்கும்
தந்தைக்கு ஒருநாள்

பெற்ற பொழுதில் பெரிதுவந்ததாய்
தன் மகன் சான்றோன் எனக் கேட்டு
இன்பம் பொங்கிட இதயம் பூரிக்கும்
தாய்க்கு ஒருநாள் பொன்நாள்

உள்ள உணர்வில் எழுந்த கருத்தை
தெள்ளு தமிழில் அள்ளித் தந்து - கவிதை
ஆற்றுப் படுத்தும் எழுத்தாளர் நூல்
அரங்கேற்றிப் பொற்றப்படும் நாளொருநாள்

நாள் ஒன்று போலக் காட்டி
வாழ் நாளை விழுங்கும் அந்த நாள்
ஒருநாள் அதைப் பொன்னாளாக்கி
பூரித்து வாழ்ந்து வழிகாட்டி நிற்போம்.


ஒரு அழகிய கவிதை - - எழுத்தாக்கம் குப்பிழான் தங்கம்


வாழ்க்கை ஒரு அழகிய கவிதை
வாழும் வரை வாசித்துப் பார்ப்போம்
இல்லக் கிழவன் கிழத்தி இருவரும்
இல்லற வாழ்வில் இணைந்து வாழின்

வெல்லமாய் வாழ்க்கை இனித்திடுமல்லவா?
வாழ்க்கைவேர் கவிதையின் ஊற்று
அங்கு தோன்றிடும் இன்ப வாரிசு
பொங்கிடும் இன்பம் தங்கிடும்

இன்பமும் துன்பமும் இணைந்த வாழ்க்கையில்
உள்ள உணர்வைத் தட்டி எழுப்பி
பள்ளத்திற் கிடக்கும் பாமரமனிதனை
தட்டி எழப்பும் தண்டமிட் கவிதை

இன்பத்தைக் கண்டு இறுமாப்படையாமல்
துன்பத்தைக் கண்டு துவண்டு போகாது
ஓடும் நதிபோல் ஓடும் வாழ்க்கையில்
அண்டிய உறவை அணைத்துக் காத்து

இனிய பூங்காவாய் நறுமணம் பரப்பி
கனி தருமரங்களாய் நிழல் பரப்பி
வாழ்வில் ஒடிந்து வருந்தி வீழாமல்
அரிய பிறப்பை எடுத்த மனிதனே!

எண்ணமே வாழ்வாய் அமையும் அதலால்
கண்ணியம் மிக்க கனிவான நினைவுடன்
உள்ளுவதெல்லாம் உயர்வாய் உள்ளி
தென்னிதாய்க் கருமம் சோந்த ஆற்றிடு

உதித்த கதிரவன் சாய்கிறான் அல்லவா?
சாய்ந்த அவன் எழுவது கண்டும்
ஏன் ஏங்குகிறாய் எண்ணிப்பார் நீ
பகல் உண்டேல் இரவும் உண்டு

இயற்கை காட்டும் இயல்பும் இதுவே
துன்பம் என்றும் தொடர்வது இல்லையே
இன்பம் என்றும் நிலைப்பது இல்லையே
இவற்றைப் பார்த்து ஒடியா தெழுந்திடு

ஓடும் செம்பொனும் ஒக்கநோக்கும்
ஆசையற்ற அற்புத மனத்துடன்
வாழ்க்கைப் பாதையில் வழுக்காது நடந்தால்
நேசித்து வாசிக்கும் அற்புதக் கவிதை

உணர்வில் எழுந்து உழுது தாளில்
அணியுடன் சுவையும் பொருளுங்கொண்டு -பிறர்
உளங்களைத் தொட்டு உயிர்கொடுத்து
வாழ்வாழ்கு வாழச் செய்த வாழும்

கன்னித் தமிழ்க் கவிதைபோல்
இனியன நினைந்து
இனியன செய்து வாழின்.