வாணி நீ அருள்வாய்!
மலரினை மேவிய கலைமகளே! என்
மனதினில் ஏறிய ஒருமகளே!
நிலமிசை யுனதருள் வேண்டி நின்றேன்;!எழில்
நிலவுமெய்ப் பொருள் நிறை கவிபடைப்பேன்!

நீலக் கடலினில் வானினில் நிலவொடு
நின்று சிரித்திடு மீன்களிலே
வாலைக் குமரியின் விழிகளில் இதழ்களில்
வந்துநிற் கும்சந்த நகையினிலே

அன்ற லர்ந்தபுது மலரினி லேதங்க
அழகுக் குழவியின் மழலையிலே
நின்றொ ளிர்ந்துஎழில் நிறைப்ப வளே!என்
நிலையறிந் துளத்தினில் நிலைப்பவளே!

நெஞ்சத் தெழுந்திடு நெட்டுயிர்ப் பும்அங்கு
நீடி நிலைக்கும் இலட்சியமும்
விஞ்சிடும் ஆசைகள் வேதனை ஏக்கங்கள்
வீறிட் டெழும்புநற் கற்பனைகள்

எத்தனை யெத்தனை யெத்தனை யோவுளத்
தெண்ணங்க ளாக மலர்ந்திடுதே!
இத்தனைக் கும்எழில் உடல்படைத் தின்னுயிர்
ஏறிய நற்கவி படைக்கநின்றேன்!

இதயத் தேறிய என்னவ ளே!என்
எண்ணம் அறிந்திடு நாமகளே!
நிதியும் பிறவும் நினைத்துவி டேன்,உன்
நினைவினில் நெஞ்சம் அழிந்துநின்றேன்!

அறிவுடை எழில்மிகு கவிபடைப் பேன்!என்
அகத்தினில் ஆலயம் உனக்கமைத்தேன்!
செறிபுலன் ஒன்றிய நிலையினில் உனதருள்
சேர்ந்துளம் மலர்ந்திடப் போற்றுகிறேன்!

- கவிஞர் கலாநிதி க.கணேசலிங்கம்
குப்பிழான்