Child college இல் நடைபெற்ற வாணி விழாவின் போது வாசிக்கபட்ட மேலதிக இரு கவிதைகள். கவிதைகள் என்பது உயிர்த்துடிப்புள்ளவை தற்போதைய யதார்த்தை உள்ளபடியே நமது மனத்திரையில் கொண்டு வருபவை. நாம் எங்கே நிற்கின்றோம் நமது கலாச்சாரம் எங்கே போகின்றது !!!!

வாணி விழாவின் கவியரங்கதில் எமது புதுமுக ஆசிரியர் கோகுலன் அவர்களினால் வாசிக்கப்பட்ட முகப்புத்தகம் பற்றிய கவி....

முகம் தெரியா முகங்களும் நட்பு முகம் காட்டும்
நட்பு சந்தை இது!

இடம் மாறிய ஏன் தடம் மாறிய இதயங்களும்
கட்டிதழுவும் களிப்புக்கடை இது!

நட்புக்கு விண்ணப்பம் விற்கும் 
விலையில்லா விடுதி இது!

பாமரரும் ஏன் பரமரும் விரும்பி படிக்கும்
முதல் புத்தகம் இது!

உலகத்தார் அனைவரும் மனக்குமுறல்களை கொட்டும்
குப்பை கூடை இது!

பட்டம் பெற்ற மேதையரும்
அலுவலகங்களில் பேதையராய்
இதனுள்ளே மூழ்கின்றார்
மணிக்கணக்கில்

பள்ளி செல்லும் மாணவரும் பாடம்தனை 
மறந்து படிக்கின்றார்
இதனைத்தான்.

பெற்றார் ஏசுகையில் கைப்பேசியில்
இரகசியமாய் பார்த்திடுவார்
பக்குவமாய்

பிள்ளை தான் அறையினுள்ளே 
படிக்கின்றான் என்றெண்ணி
பெற்றோரும் நுழைகிறார்
அமைதியாக அரைட்டைக்குள்

இனம் தெரியா பெண்ணொருத்தி
செய்திட்ட இடுகைக்கு
இடவேண்டும் முதல் விருப்பம்
என்றிருக்கும் இளைஞர்கள்

மெய்யழகை தான் மறைத்து
மையழகு நடிகையரின்
படம் போட்டு- இங்கு
உலவுகின்றார் பெண்கள் சிலர்

தன்னுடைய புகைப்படத்தை 
அவன் விருப்பம் செய்வதற்காய்
செருகுகின்றார் சுவற்றினிலே
மதிகெட்ட மங்கையவர்.

பார்த்திட்ட புகைப்படத்தை
பதிவிறக்கம் செய்துவிட்டு
மாற்றம் சில செய்து விட்டு
மறுபடியும் ஏற்றுகின்றார் இணையத்தில்
பெண்மையின் மகத்துவம் அறியா மடையர்கள்

கல்வி தனை புகட்டும் 
ஆசான்கள் கூட
பாடநேரம் மறந்துபோய்
பார்க்கின்றார் பேஸ்புக்கை

வெளிநாட்டு பெண்ணைத்தான் 
மணம்முடிக்க வேண்டும் என்று-எம்
கிராமத்து இளைஞர்கள்
பசிமறந்து கிடக்கின்றார் இதனுள்ளே

உண்மையாக அவன் அனுப்பிய
நட்பு வேண்டுகோளை அவள் மறுத்ததால்
எப்படியாவது நட்பாக வேண்டுமென்று
உருவான போலிக்கணக்குகளோ ஏராளம்

நானும் தான் அவனும் தான்
கைகூடாகாதலுக்காய்-பகிர்ந்திட்ட
கவிதைகளும் ஏராளம் 
கவியரசும் தோற்றிடுவான்.

நட்பினை வளர்த்திடவே உருவான நீயே
பிரித்து விட்டாய் நண்பர்களை
காரணம் என்னவென்றால்
அவளும் அவன் நண்பியாம்.

அண்ணன்மார் ஒருபுறமும்
ஐயாமார் மறுபுறமும்
திறந்திட்டார் புதுக்கணக்கு
வந்திட்டுது தேர்தல் என்று

எவ்வளவைத்தான் சொன்னாலும்
நானுந்தான் இருக்கின்றேன் 
இந்த வீணாய் போன
முகப்புத்தகதில்.

வாணி விழா நிகழ்வின் கவியரங்கத்தின் போது எமது கல்வி நிறுவனத்தின் நிர்வாகியும் தமிழ் ஆசானும் ஆன ஜெனா அவர்களால் வாசிக்கப்பட்ட கவி......

எல்லோருக்கும் வாழ்வில் காதல் வரும்
எனக்கு தான் காதலில் வாழ்க்கை வந்தது...

மின்வெட்டு நேரங்களில் குப்பிவிளக்கு கூடவிருப்பதுபோல்
தோல்வியால் நான் துவண்ட போதெல்லாம்
தோளில் நீ சாய்ந்திருந்தாய்....

பல் முளைக்காத குழந்தை தேநீரில் தொட்டு
பிஸ்கட் சாப்பிடுவது போல
வாழ்க்கையின் கடினமான பொழுதுகளை
உன்னில் மூழ்கித்தான் கழித்திருக்கிறேன்....

திருவிழாக்களில் ஐஸ்கிறீம் வண்டியின் அருகில் நிற்கும்
ஏழைச்சிறுவனைப்போல்
அடிக்கடி உன்னருகில் நின்றிருக்கிறேன்....

தோழிகளுடன் நீ தேர்வலம் வருகையில்
எல்லோருக்கும் தரிசனம் கிடைக்கும்
எனக்கு மட்டும் தான்
ஒரு புன்னகை போனஸ் ஆக கிடைக்கும்...

ஊரின் குறுக்காய் ஓடும் ஓடையின் பாலதில் இருந்து
நண்பர்கள் தூண்டிலில் மீன் பிடிப்பார்கள்
நானும் இருந்துகொண்டு தெருமீன்கள் பிடித்திருக்கிறேன்
ஒரு நாளைக்கு இரண்டு மீன்கள் வீதம்...

உன் பாதங்கள் பதிந்த தடத்தில்
புதைந்து புதைந்து இறப்பேனாம்
நீ முத்தமிட்டு முத்தமிட்டு உயிர் கொடுப்பாயாம்
அது நாம் கடற்கரையில் நாம் விளையாடிய காதல் விளையாட்டு......

தற்கொலை செய்துகொண்டிருக்கும் வண்ணத்துபூச்சிகளை கண்டுதான்
நான் தீர்மானிப்பேன்
நீ இந்த வழியால் போயிருக்கவேண்டும் என்று.....

இஞ்சி வாங்கப்போன கடையில் ஓர் இனிப்பான செய்தி
உன் அக்காவுக்கு கலியாணமாமே!
அப்படியானால் அடுத்தது நமக்குதானே?
மீதிப்பணம் வாங்காமல் வந்துவிட்டேனாம்
அப்பா கொதித்துப்போனார்.....

ஈசல்கள் அடுத்தபிறவியில் வண்ணத்துபூச்சிகளாக வேண்டுமாம்
வண்ணத்துபூச்சிகளின் ஆசை என்ன தெரியுமா?
உன்கண்களில் இமைகளாக வேண்டுமாம்...

புகைத்தல்,மதுபானத்திற்கு எதிராக போஸ்டர் தயாரிப்பதில் நான் அன்று அளவுக்கு அதிகமாகவே
பங்களிப்பு செய்திருந்தேன்
எனக்கு எந்தவித கெட்ட பழக்கமும் இல்லையென்பது
உனக்கு தெரியவேண்டும் தானே!!

உன்னை கல்லூரிக்கு கொண்டு செல்வது
உன் அப்பாவின் பொறுப்பு
கல்லூரியில் வாங்கும் காதலை வீடுவரை கொண்டுவருவது என் பொறுப்பு....

எனக்கும் உனக்கும் இடையில் இருந்தது 
உண்மையான காதலா பொய்யான காதலா
ஒருபோதும் நான் ஆராய்ச்சி செய்ததில்லை
அது நண்பர்களின் வேலை-ஆனால்
எனக்கும் உனக்கும் இடையில் கண்ணுக்கு தெரியாத
ஏதோ ஒன்று இருப்பதாய் உணர்ந்தேன்
கண்ணுக்கு தெரியாதவற்றையெல்லாம்
எப்படி அவர்கள் ஆரய்ச்சி செய்யலாம்?

தேனிலும் இனியது தமிழ் அதனிலும் இனியது
உன் இதழ்
தமிழ் படித்தவர்கள் எல்லோரும் இனி உன்
இதழ் படிக்கவேண்டும்...

எதிர்பாராத உன் வருகையால் அடிக்கடி
எனக்கு கோயில் போகும் வழியிலே
அம்மன் தரிசனம் கிட்டும்...

எல்லோரும் கோயிலில் கால் கழுவி விட்டு
உள்ளேசெல்வார்கள்
எனக்கு மட்டும் கூடவே இன்னும் ஒரு வேலை
உன் பாதணிகளும் கழறபட்டிருக்கிறதா என கவனிப்பது!

ஒவ்வொரு நாளும் உறக்கம் விழித்து எழும்போது
மிகப்பெரிய கவலை என்ன தெரியுமா?
உறக்கத்தில் உன்பெயரை
உளறியிருப்பேனோ என்பது...

ஒரேயொரு நாள் தான் ஊரில் என் பெயர் அடிபட்டிருக்கிறது
அதற்கு முதல் நாள் நானும் நீயும் கை கோர்த்ததை
நாலுபேர் தான் பார்த்திருப்பார்கள்...

நம் காதல் வீட்டிற்கு தெரிந்துவிட்டதோ என பயந்து
என் தந்தையும் உன் தந்தையும் என்ன பேசிக்கொள்கிறார்கள் என பலமுறை கவனித்திருக்கிறேன்.....

தெருவெல்லாம் உனக்காய் ஊர்சுற்றி திரிந்தவர்களின்
பெரிய தவறு அவர்கள் உன்னை மட்டும் சுற்றியிருக்கவேண்டும்
என்னைப்போல்....

கதிர்காம யாத்திரைக்கு ஊரில் உள்ள எல்லோரும்
புறப்பட்டு விட்டார்களாம்
முருகன் உனைக்காண 
ஊருக்கு வந்துவிடுவானோ என பயந்தேன்...

நானௌம் புத்திசாலித்தனமாக காதலை சொல்லலாமென நினைத்தேன் 
வேண்டவே வேண்டாம்
உடலுக்கு விபத்து வரலாம் உயிருக்கு வரக்கூடாது
கடிதமுறையே என் கடைசி தெரிவாக இருந்தது...

என் காதலுக்கு நீ சம்மதம் சொன்ன நாளன்று 
பெய்த மழை இனிப்பு மழையா இருந்திருக்கவேண்டும்
ஊருக்கே காதல் தேவன் இனிப்பு பகிர்ந்திர்க்கிறான்
காதல் தேவன்....

அததை ஆண்களுக்கும் ஒரு சவால்
ஒருத்தியை என்னைப்போல் உங்களால்
காதலிக்க முடியுமா?
அத்தனை பெண்களுக்கும் ஒரு சவால்
அருகிலிருப்பவனை அடித்து நொருக்கவேண்டும்
நிபந்தனை இமைகளை மட்டும் அசைக்கவேண்டும்.....

அடுத்த பிறப்பில் நீ நானாகவும் நான் நீயாகவும்
பிறக்கவேண்டும்
இப்போது உன்னை எவ்வாறு காதலித்தேன் என்று
அப்போது நான் அறிந்துகொள்ள வேண்டும்....

நமது காதல் நண்பர்களால் பேசப்பட்டிருக்கிறது
ஊரில் சில இடங்களில் கிசுகிசுக்கப்பட்டிருகிறது
இப்போது தான் ஒருவன் 
கவிதையாய் எழுதி முடித்திருக்கிறான்.