குப்பிழான் வீரபத்திரர் ஆலய கும்பாபிசேகம். updated 20-07-2013

 குப்பிழான் வடக்கு வீரபத்திரர் ஆலய கும்பாபிசேகம் 14-07-2013 ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த ஆலயமானது நீண்ட கொடிய போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் இருந்தமையினால் கடந்த 20 வருடங்களாக எந்த விதமான பூசைகளும் நடைபெறவில்லை. அதே நேரம் இந்த கோவிலானது சிதைவடைந்த நிலையில் இருந்தது. இந்த பிரதேச மக்களின் (புலம்பெயர் உறவுகள்) நிதிப் பங்களிப்புடன் புனருத்தானம் செய்யப்பட்டு மீண்டும் புதுப்பொலிவுடன் காட்சி தருகின்றது. 30 ஆண்டுகளுக்கு முதல் இந்த கோவிலில் வருடாந்த திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்று வந்தது. திருவிழா காலங்களில் பெருந்தொகையான அடியார்கள் பங்கு பற்றி சிறப்பிப்பார்கள். இந்த கோயிலின் பின்புறம் இருந்த பகுதியில் அப்பிரதேச சிறுவர்கள், இளைஞர்கள் மாலை நேரங்களில் பல விதமான விளையாட்டுகளை விளையாடுவார்கள். இன்று இந்த பிரதேசம் வெறும் சூனிய பிரதேசம் போன்று காட்சி அளிக்கிறது. கற்கரை கற்பக வேட்டைத்திருவிழா இங்கு தான் நடைபெற்றது. கடந்த 23 வருடங்களாக நடைபெறாமல் இருந்த இந்த வேட்டைத் திருவிழா இம்முறை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

 

3


தனி சைவ கிராமமான குப்பிழான் ஒரு சிறிய கிராமம். ஆனால் இந்த சின்னஞ் சிறிய கிராமத்தில் உள்ள ஆலயங்களின் எண்ணிக்கை 26. வடக்கே உள்ள பெரும்பாலான ஆலயங்கள் போரினால் அழிவுண்டு போயிருந்தன இன்று அவைகள் அனைத்தும் மீள் நிர்மானம் செய்யப்பட்டு வருகின்றது. கடைசியாக மீள் நிர்மானம் செய்யப்படாமல் இருந்த சமாதி கோவிலடி பிரதேசத்தில் அமைந்துள்ள வைரவர் ஆலயமும் இன்று மீள் நிர்மானம் செய்பட்டு கொண்டு இருக்கின்றது. இது தான் எமது மக்கள் எமது மதத்தின் மீது வைத்திருக்கும் ஆழமான பற்றுதல். அன்னிய மதங்கள் நம்ஊரில் தற்போது காலடி எடுத்து வைத்திருந்தாலும் எமது கிராமம் தனிச் சைவ கிராமம் தான். ஒரு சிலர் தமது தனிப்பட்ட தேவைகளுக்காக மதம்மாறினாலும் அவர்கள் மனதளவில் சைவர்கள். மதம் மாறியதால் கிடைத்த சலுகைகள் நிறுத்தப்படும் போது அவர்கள் மீண்டும் தாய் மதம் திரும்புவார்கள். ஒரு சில இந்துக்கள் மட்டும் எம்மதமும் சம்மதம் என்பார்கள். ஆனால் மற்றைய மதத்தவர்கள் ஒருபோதும் தமது மதத்தை விட்டுக்கொடுப்பதில்லை. திருமண பந்தத்தின் போதும் இந்துவானவன் தான் மதம் மாறுகின்றான் மற்றவர்கள் மாறுவது மிகவும் குறைவு. இப்படியான சமூகத்தில் இருந்தாலும் எமது தனித்துவங்களை பாதுகாப்பதில் எமது ஊர் மக்கள் என்றும் சளைத்தவர்கள் அல்ல.