9

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மிக அழகாக புலம் பெயர் குப்பிழான் மக்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அவர்களோ அவர்களது பிள்ளைகளோ வந்து படிப்பதற்காக அல்ல உங்கள் பிள்ளைகள் படிப்பதற்காகவே. ஆரம்ப கல்வியையாதல் உங்கள் பிள்ளைகள் இங்கு படிப்பதற்கு அனுமதியுங்கள். கலியாணம் தொடக்கம் எல்லாம் வெளியூர் என்றால் இந்த ஊர் எதற்கு.
இப்படிக்கு பாடசாலை

 

ஒரு காலத்தில் எவ்வளவு பேர் வந்து தங்கி வெளிநாடு எல்லாம் சென்றீர்கள். ஊத்தைப் பாயென்றோ அல்லது வருடக்கணக்கில் தோய்க்காத தலைகணியென்றோ பார்க்கவில்லை, உயிர் தப்பினால் போதும் என்று இது தான் சொர்க்கம் என்று படுத்து எழும்பினீர்கள். நானும் கோடீஸ்வரன் ஆனேன். சண்டையும் நின்று விட்டது. இன்று ஒரு தரும் இங்கு வாறங்கள் இல்லை. புலம் பெயர் தமிழர்கள் அண்ணன் மீண்டும் வருவான் என்கிறர்கள். அவர் எப்ப வாறது என் பிள்ளைகளும் எப்ப கோடீஸ்வரர் ஆகுவது. ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் பிச்சை வேண்டாம் நாயைப் பிடி போதும் என்கிறார்கள்.
இப்படிக்கு Island Lodge நிர்வாகம்

முந்தி வருசத்திற்கு ஒரு தரம் தான் அன்னதானம் செய்வார்கள். இப்ப வெளிநாட்டுக் காரரின் புண்ணியத்தால் அடிக்கடி எல்லா கோயில்களிலும் செய்கிறார்கள். இப்ப விளையாட்டுப் போட்டிக்கு கூட சாப்பாடு தாறங்கள்.
இப்படிக்கு பொதுஜனம்

முந்தி போட்டி போட்டுக் கொண்டு எத்தனை பேர் 3 போகமும் தோட்டம் செய்தார்கள்.பேந்து ஆமிக்காரன் தோட்டம் செய்யாமல் தடுத்தான். ஆமி விட்டு 2 வருடம் ஆய்ச்சு ஒருவரும் திரும்பி பார்க்கிறாங்கள் இல்லை. இப்ப வெளிநாட்டு காசு வருகுது யார் குனிந்து வளைந்து வேலை செய்ய போறாங்கள். இப்படியே காணி எல்லாம் சும்மாய் கிடந்தால் சிங்களவன் தான் வந்து குடியேற போறான்.
இப்படிக்கு பலட்டன் தோட்டம்எவ்வளவு நாளாச்சு பேசி. ஆசை தீரும் மட்டும் பேசுவோம். இனி எத்தனை காலத்தக்கு பிறகு சந்திப்போமோ. நாட்டு பிரச்சனையாலை எல்லாரும் ஒவ்வொரு திசையிலை இருக்கிறோம். ஒன்றாய் பிறந்தோம் ஒன்றாய் வளர்ந்தோம் அனால் இன்று திசை மாறிய பறவைகள் நாம்.
இப்படிக்கு அன்பு நண்பன்

அடப்பாவிங்களா உங்கடை சொந்த தேவைக்கும், தேவையானவர்களை காக்கா பிடிப்பதற்கும் , உங்கடை புகழைப் பாடுவதற்கும் புத்தகம் அடித்தீர்கள். அதில் என்ரை வரலாற்றை மாற்றி, என்னையும் அசிங்கப்படுத்திடீங்களே. உங்களுக்கு என்னடா துரோகம் செய்தேன். என்ரை பெயரை சொல்லி வாறவங்கள் போறவங்களட்டையெல்லாம் காசு வாங்றீங்கள். இது போதாதா.
இப்படிக்கு குப்பிழான் விளையாட்டுத்துறை


முந்தி இந்த மதகிலிருந்து தான் பெட்டையளை சைட் அடிப்பாங்கள். எத்தனை பெடியங்கள் இருப்பாங்கள் போறவர்களுக்கு விசில் அடிப்பாங்கள். றோட்டாலை போகைக்கை அவளவைக்கும் சந்தோசமாக இருக்கும். இப்ப மதகையும் காணோம் பெடியங்களையும் காணோம். பெடியங்கள் திருந்தி விட்டாங்களோ. வீட்டை விட்டே வெளியிலை வாறங்கள் இல்லை. இப்பத்தையான் பிள்ளைகள் நல்ல பிள்ளைகள் தான். இன்னுமொண்டையும் சொல்லுறாங்கள் ஏதோ கொம்பியூட்டர் பேஸ்புக்கென்று என்ன இழவோ யான் அறியேன்.
இப்படிக்கு குப்பிழான் சந்தி

அப்பாடியோ!!!! எவ்வளவு காலமாச்சு இதில் இருந்து, இந்த காத்தோட்டம், நண்பர்கள், நான் பிறந்த ஊர். இதில் இருப்பது எவ்வளவு சுகமாய் இருக்கு. சொர்க்கமே என்றாலும் நம்முரை போல வருமா. வெளிநாடு என்று வந்து உடம்பிலுள்ள ஒவ்வொரு பாட்சுகளும் பழுதானது தான் மிச்சம். வேலை விட்டு வந்தால் செற்றி செற்றியை விட்டால் வேலை இது தான் வெளிநாட்டு வாழ்க்கை உவங்களுக்கு இதை சொன்னால் விளங்கவா போகிறது. யாரேன் சிலதுகள் கள்ள மட்டையை போட்டுட்டு காசை இங்கு கொண்டு வந்து விசுக்கிறாங்கள். இங்குள்ளதுகள் வெளிநாட்டை சொர்க்கம் என்று யோசிக்குதுகள்.
இப்படிக்கு புலம் பெயர் தமிழன்

வெளிநாட்டு காசு வருகுதோ வரவில்லையோ எனது உழைப்பை கைவிடேன். உவங்களை மாதிரி வேலை வெட்டி இல்லாமல் வீட்டில் இருந்து வருத்தத்தை தேட சொல்லுறீங்களா. உழைச்சு சாப்பிட்டால் தான் சாப்பிடுற சாப்பாடு கூட செமிக்கும்.
இப்படிக்கு உழைப்பாளி

எடே ஆனந்தா இவங்கள் எல்லாம் ஊரை விட்டு ஓடிவிட்டாங்கள் இவங்களை மாதிரி நாங்களும் போய் இருந்தால் ஊர் கலகலப்பில்லாமல் போயிருக்கும். வெளிநாட்டில் இருந்து வாறங்கள் காசுகளை தூக்கி எறியிறாங்கள். எங்களுக்கும் தண்ணி வாங்கி தாறங்கள் நாங்களும் இரவிரவாய் றோட்டிலை கல கலப்பாக நிக்கிறோம். ஆனால் சிலதுகள் இந்த சின்னப் பெடியங்களுக்கும் தண்ணியை வாங்கிக் கொடுத்து அவங்களையும் எங்களை மாதிரி ஆக்குகின்றாங்கள். இத தாண்டா உவங்களிலை எனக்கு பிடிக்காத விசயம்.
இப்படிக்கு குப்பிழான் குடிமகன்

 

முந்தி ஆட்டை வெட்டினாங்கள் மனிசனை வெட்டினாங்கள். இப்ப கோயில் கட்டி ஒழுங்காக கும்பிடுறாங்கள்.
இப்படிக்கு முனியப்பர் கோவில்