வெகு விமர்சையாக நடந்து கொண்டிருக்கும் காளி அம்பாள் ஆலய மகா கும்பாபிஷேக முதலாம் நாள் நிகழ்வுகள். updated 08-04-2015

**குப்பிளான் காளி அம்பாள் ஆலய மஹா கும்பாபிஷேகப் பெருஞ்சாந்தி விழா இன்று வெகுவிமரிசை: ஆன்மீகப் பெரியோர்கள் உட்படப் பெருமளவான அடியார்கள் பங்கேற்பு**

யாழ்.குப்பிளான் காளி அம்பாள் ஆலய புனாரவர்த்தன மஹா கும்பாபிஷேகப் பெருஞ்சாந்தி விழா இன்று செவ்வாய்க்கிழமை (08.04.2015) அமிர்த சித்தமும், சங்கடஹர சதுர்த்தியும், இடபலக்கினமும் கூடிய காலை 09 மணி முதல் 10 மணி வரையுள்ள சுப வேளையில் இடம்பெற்றது.

விநாயகர் வழிபாடு இடம்பெற்றதைத் தொடர்ந்து பிரதான கும்பம் உட்பட ஏனைய கும்பங்கள் மங்கல வாத்தியங்கள் முழங்க ஆலயத்தைச் சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அதனைத் தொடர்ந்து அகிலாண்ட நாயகியான காளிகாம்பாளுக்கும், பிள்ளையார், முருகன், வைரவர் ஆகிய மூர்த்திகளுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து அடியார்களால் நிறைகுடங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விசேட அபிஷேக பூசைகள் இடம்பெற்றது. கும்பாபிஷேகக் கிரியைகள் யாவும் ஆலயப் பிரதம குரு சிவஸ்ரீ.சி.கிருஷ்ணசாமிக் குருக்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றன.

அதனைத் தொடர்ந்து அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த விழாவில் நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம், யாழ்.சின்மயா மிஷன் தலைவர் பிரம்மச்சாரி ஜாக்ரத சைதன்ய சுவாமிகள், குப்பிளானின் முதிர்ந்த ஆன்மீக வாதி சைவப்புலவர் விசுவாம்பா விசாலாட்சி மாதாஜி அம்மையார் ஆகிய ஆன்மீகப் பெரியோர்கள் உட்படப் பெருமளவான அடியார்களும் கலந்து கொண்டனர்.

கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து எதிர்வரும் 12 தினங்கள் மண்டாலாபிஷேகமும் நடைபெறும். தினமும் மாலை 06 மணிக்கு மண்டலாபிபிஷேகக் கிரியைகள் ஆரம்பமாகும்.

12 ஆம் நாளான எதிர்வரும் 20 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 08 மணி முதல் சங்காபிஷேகமும் அதனைத் தொடர்ந்து சக்தி மகத்துவம் - கும்பாபிஷேக மலர் வெளியீடும், அன்னதானமும் இடம்பெறுமென ஆலய பரிபாலன சபையினர் அறிவித்துள்ளனர்.

 

 

 

ஒளிப்பதிவு, நிழல்படங்கள்
ரவிசாந்த்