தனது 93வது வயதிலும் மனம் தளராது எமது மனச்சாட்சியை தட்டி எழுப்ப முயலும் குப்பிழான் அன்னை பெற்றெடுத்த மூத்த தமிழ் மகன் கிருஸ்ணன் எழுதிய கடிதம்

அன்புமிக்க திரு.மோகனதாஸ் அவர்களுக்கும், குடும்பத்திற்கும் எழுதிக் கொள்வது நாங்கள் அனைவரும் இவ்விடம் சுகம் அப்படியே உங்கள் அனைவரையும் எல்லாம் வல்ல கற்கரை கற்பக விநாயகர் காப்பாற்றுவராக.

என் பெயர் க.கிருஸ்னன். நான் குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாசாலையில் முன் ஆசிரியாய் பணி புரிந்த திருமதி அழகம்மாவின் மூத்த அண்ணர். திரு ஜயாத்துரை (சங்கிலி)யின் மைத்துணர். நீரோ அல்லது உமது தாய் தந்தையர்கள் பிறப்பதற்கு முன்பே 1938 ஆண்டில் சிங்கப்பூர் வந்துள்ளேன். 72 வருசம் ஆயிற்று. நான்கு முறை குப்பிழான் போய் வந்தேன். இப்போ எனக்கு 93 வயது ஆகிறது. கடைசியாக ஊர் சென்றது 1982 இல். இக் கடிதத்தின் நோக்கம் குப்பிழான் விக்கினேஸ்வரா தலைமை ஆசிரியர் வெளிநாட்டில் வசிக்கும் மூத்த முன் பள்ளி மாணவன் என்ற முறையில் பள்ளியின் அவல நிலையை விளக்கி எழுதியிருந்தார். பள்ளியின் அவல நிலையால் மாணவர் தொகை 750 இல் இருந்து 250 க்கு குறைந்து விட்டதாகவும், வசதி உள்ள குடும்பத்தின் மாணவர்கள் அடுத்த கிராமம் ஏழாலைப் பள்ளிக்கு போய் விட்டார்கள் என்றும் மற்ற மாணவர்கள் வழி தெரியாது கிராமத்துள் அலைந்து திரிகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்கள். வீட்டுப் பாடங்களை பிரதி எடுத்தக் கொடுக்கவே தங்களால் முடியவில்லை என்கிறார்.பழைய கட்டிடம் முற்றாய் உள் நாட்டு போரினால் இடிந்து போய் விட்டதாகவும் இதை முன் கட்டிடம் போல கட்ட ஏறக்குயை 40,45 லட்சம் ரூபா தேவை என்றும் மற்ற குப்பிழான் மக்களிடம் என்னையும் சேர்த்து பண உதவி செய்யுமாறு கேட்கிறார்கள். இதை அறிந்து ஒரு லட்சத்தி ஜம்பதினாயிரம் செலவில் பிரதி எடுக்கும் இயந்திரத்தை அன்பளிப்பாக கொடுத்திருக்கிறேன்.

கட்டிட நிதிக்கு 6 லட்சம் ரூபா இவ்விரண்டு லட்சமாக சண்முகலிங்கம், ரவீந்திரநாதன்,சசிதரன் ஆகியோரிடம் அனுப்பி போன வருட முற்பகுதியில் வங்கியில் போட்டிருக்கிறேன். கட்டிடம் தொடங்கியதும் இத்தொகை நன் கொடையாக கொடுக்கப்படும். மேற்கொண்டு சிங்கப்பூர் வெள்ளி 200,000 இலங்கையில் உள்ள நேர்மையான வருவாயை பெருக்க கூடிய அறக்கட்டளை ஒன்றில் ஒப்படைத்து அதில் இருந்து வரும் வருமானத்தை உள் நாட்டில் சாதி மதமற்ற விவேகமான ஏழை மாணவர்களின் மேற்படிப்பிற்கும் மற்ற மாணவர்கள் விரும்பிய கைத்தொழில் கற்கவும் scholarship மூலம் வருடம் தோறும் கொடுத்து உதவ என் மரண சாசனத்தில் இத் தொகையை விட்டிருக்கிறேன்.

நீங்களும் குப்பிழான் உறவுகள் என்ற முறையில் உங்களால் இயன்ற உதவிகளை செய்யுமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன். தனிப்பட்டவர் எவருக்கும் (என்னையும் சேர்த்து) பணம் அனுப்பாதீர்கள். அங்குள்ளவர்கள் ஓரு அமைப்பை அமைத்து உதவி கேட்டால் அவர்களுக்கு அனுப்புங்கள். நீரும் உமது குடும்பமும் வெளிநாட்டில் வசிக்கலாம் ஆனால் உமது அண்ணை, தம்பி, அக்கா, தங்கைச்சியின் பிள்ளைகள் நல்வாழ்வுக்கும் நாங்கள் பிறந்த கிராமத்தையும், அ ,ஆ கற்ற கோயிலையும் மறந்திடாதீர்கள்.நமது கடமையை செய்வோமாக, பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்று அல்லாமல் இனிமேல் வரும் நம்ம சந்ததிக்கு ஏதேனும் நல்லதொன்றை விட்டு செல்வோம்.

வணக்கம்

இப்படிக்கு
மூத்த குப்பிழான் உறவினர்
க.கிருஸ்ணன்

மற்றயை கடிதம்

மதிப்புக்குரிய தலைவர் அவர்களுக்கு
குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம்
இலண்டன்

விபரம் எல்லாம் இக்கடிதத்தில் உள்ள காகிதத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வயதிலும் நமது கிராம பற்றினாலும், நான் முதற் சொல் !அ, ஆ ! கற்ற குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம் அறிவுட்டிய கோயிலுக்கு இவ்வளவு செய்திருக்கிறாரே, நான் பிறந்த மண்ணிற்கும், படித்த பாடசாலைக்கும் இதுவரை என்ன செய்தேன் என்ர கிராமம்,பாடசாலை என்ற பற்றுணர்வை தட்டி எழப்புவது என் நோக்கம். நான் இதையிட்டு பெருமிதம் அடைவதற்கு ஒன்றும் இல்லை. வயது 93 நாளைக்கு வாழ்வேன் என்பது கேள்விக் குறி.

உவ்விடம் யாரையும் தெரியாது. ஆகையால் இலண்டனில் வசிக்கும் குப்பிளான் உறவுகளின் விபரங்களை அனுப்பி வைக்குமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்.நான் அவர்களுக்கு தனித்தனி கடிதம் எழுதி அவர்களின் உணர்வுகளை தட்டி எழுப்பலாம்.

இது அவர்கள் எழுதிய கடிதத்தின் சுருக்கம்.