வைரவர் ஆலய புனருத்தானம், இலக்கிய மன்ற நிர்வாகம் போன்ற செய்திகளுடன் செய்தி தொகுப்புக்கள். updated 14-12-2011


போரினால் அழிக்கப்பட்ட வைரவர் ஆலயம் மீண்டும் புனருத்தானம் செய்யப்பட்டு அண்மையில் கும்பாபிசேகம் நடைபெற்றது. 14 நாட்கள் நடைபெற்ற இந்த கும்பாபிசேக நிகழ்வானது இனிதே நிறைவடைந்தது. திரு நடராசா அவர்களின் குடும்ப சொத்தான இந்த ஆலயம் அவர்களின் குடும்பத்தவரினால் புனருத்தானம் செய்து முடிக்கப்பட்டது.

குப்பிழான் விக்கினேஸ்வரா இளைஞர் கலை இலக்கிய மன்றத்தின் நிர்வாகத்தை தெரிவு செய்யும் கூட்டம் கடந்த வாரம் இடம்பெற்றது. அதன் விபரங்கள் வருமாறு.
தலைவர் திரு கணேசலிங்கம் அருள்மகிந்தன்
செயலாளர் திரு திருச்செல்வம் விஜயராஜ்
பொருளாளர் திரு ஆனந்தன் அஜன்

சமாதி கோவில் பகுதியில் குடியேறவிருப்பவர்களுக்கு மீழ் எழுச்சி திட்டத்தின் கீழ் முற்பணமாக 50,000ரூபா கடனாக வழங்கப்பட்டது.

குப்பிழான் சொக்கர்வளவு ஆலயத்தின் கும்பாபிசேக நிகழ்வு எதிர்வரும் தை மாதம் 29ம் திகதி நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

காளி கோவில் நிர்வாக சபையின் விபரங்கள். முன்னைய செய்தியில் சில விபரங்கள் பிழையாக தரப்பட்டது அதற்காக மிகவும் வருந்துகிறோம்.


எமது கிராமத்தில் உள்ள ஆலயங்களில் ஒன்றாகிய காளி கோவில் பல காலங்களாக நிர்வாக சபை இல்லாமல் இயங்கி வருகிறது. இதன் காரணமாக எதுவித அபிவிரத்தி பணிகளும் மேற்கொள்ள படவில்லை. கோயில் சிறப்பாக இயங்கவும், அபிவிருத்தியை மேற்கொள்ளும் நோக்கோடு புதிய நிர்வாக சபை அண்மையில் அமைக்கப்பட்டது. அதன் விபரம் வருமாறு

தலைவர் செல்லையா பரராசசிங்கம் (முருகையா)
உபதலைவர் நாகையா இராமலிங்கம்
செயலாளர் நாகரத்தினம் ஜெகநாதன்
உபசெயலாளர் கணேசலிங்கம் கஜேந்திரன்
பொருளாளர் குணரத்தினம் குகதாசன்

லண்டனில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா பற்றிய விபரம். ஊர்ப்புதினம் updated 08-12-2011


குப்பிழான் மைந்தன் திரு சிவபாதம் கணேஸ்குமார் அவர்களால் எழுதப்பட்ட இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஈழத்து செம்மல்கள் நூலின் முதலாம் பாகம் நூல் வெளியீட்டு விழா கடந்த 19-11-2011 சனிக்கிழமை மாலை ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது. திரு கந்தையா இராஜமனோகரன் (கவிஞர்) தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெருமளவான அறிஞர் பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நூல் ஆய்வுரையை பிரபல அரசியல் விமர்சகரும், அறியஞருமான திரு பற்றிமாகரன் அவர்கள் வழங்கினார். விமர்சனவுரையை திரு மு.நித்தியானந்தன் அவர்கள் வழங்கினார். திரு நித்தியானந்தன் அவர்கள் யாழ் பல்கலைகழக ஓய்வு பெற்ற விரிவுரையாளர் ஆவார். சிறப்புரைகளை திரு தினேஸ்குமார் அவர்கள் வழங்கினார்.


திரு தினேஸ்குமார் அவர்கள் எல்லோராலும் அறியப்பட்ட GTV அறிவிப்பாளர். அவர்கள் தன்னுடைய வேலைப் பழுக்களுக்கு அப்பால் இந்த நிகழ்வில் பங்கு பற்ற வேண்டும் என்ற ஆர்வத்தால் இதில் கலந்து கொண்டார். இதனை விட பல அறிஞர் பெருமக்களின் உரைகள் இடம் பெற்றன. குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியா சார்பில் கெளரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது. மன்ற பொருளாளர் திரு அருந்தவராஜா அவர்கள் திரு கணேஸ்குமார் அவர்களை கெளரவித்தார். இந்த நூலை அவர்களின் தந்தையார் அமரர் திரு சிவபாதம் அவர்களுக்கு சமர்பணம் செய்திருந்தார். திரு சிவபாதம் அவர்கள் கற்கரை கற்பக விநாயகர் ஆலயத்தின் ஒரு தொண்டன். அவர்கள் ஆலய வளர்ச்சிக்காக செய்த அரும் பெரும் சேவை கெளரவிக்கப்பட வேண்டியதொன்றாகும். இந்த நூலில் பல்வேறு ஊர்களில் வாழ்ந்த அறிஞர்களின் வரலாறு இடம்பெற்றது. அந்த வகையில் குப்பிழான் மண்ணில் வாழ்ந்த அறிஞர்களான மகான் காசி வாசி செந்திநாதையர் மற்றும் இசை மேதை செல்லத்துரை அவர்களின் வரலாறுகளும் இடம் பெற்றிருந்தது. திரு கணேஸ்குமார் அவர்களின் நன்றி உரையோடு விழா இனிதே நிறைவு பெற்றது.

மேலதிக படங்கள்


படங்களுடன் செய்திகள்
updated 23-11-2011


குப்பிழான் கற்கரை விநாயகர் அலயத்திற்கு அருகில் இருந்த நெசவு சாலையை எல்லோரும் அறிந்திருப்பீர்கள். சில வேளைகளில் 90 ஆம் ஆண்டிற்கு பிறகு பிறந்தவர்கள் அறிந்து இருக்கமாட்டார்கள். இந்த நெசவுசாலையின் ஆரம்ப வரலாறு தெரியாவிடினும், எமது கிராமத்தின் ஒரு முக்கிய கைத்தொழில் சாலையாக விளங்கியது. எனது அபிப்பிராயப்படி இதன் வரலாறு மிக நீண்டதாக இருக்கலாம். யாரால் எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்ற தகவல் இப்போது இல்லாவிடினும் அந்த தகவல் கிடைத்ததும் நிட்சயம் உங்களுக்கு அறியத்தருவோம். ஆரம்பகாலங்களில் துணிகள் கைத்தறிகளால் வேயப்பட்டன. இப்போது நிலைமை அப்படி அல்ல எல்லாம் இயந்திரமயமாக்கபட்டுள்ளது. அந்த காலங்களில் வேலை கிடைப்பது என்பது மிக அரிது. வசதி உள்ளவர்கள், நன்றாக படித்தவர்கள், செல்வாக்கு உள்ளவர்கள் அரசாங்க வேலை வாய்பை பெற்று விடுவார்கள், ஒன்றுமே படிக்காதவர்கள், அடிமட்ட ஏழை மக்கள் கூலி வேலைக்கு போவார்கள். ஆனால் ஓரளவு படித்து இருந்த யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பது என்பது முயல் கொம்பு. அப்படியானவர்களுக்கு ஒரு தொழிலையும் கொடுத்து வாழ வைத்த சாலை தான் இந்த நெசவு சாலை. உள்நாட்டு யுத்தம் காரணமாக அழிக்கப்பட்ட இந்த நெசவு சாலையை பலநோக்கு மண்டபமாக மாற்றி அமைக்க அரசாங்கத்தால் நிதி உதவி வழங்கப்பட்டது. இந்த கட்டிட அடிக்கல் நாட்டு விழா அண்மையில் நடைபெற்றது. தற்போது கட்டிட வேலைகள் மும்முரமாக நடைபெறும் காட்சிகளையே நீங்கள் காண்கிறீர்கள்.


குப்பிழான் சொக்கர் வளவு ஆலய புனருத்தான வேலைகள் கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வருகிறது. உள்நாட்டு, மற்றும் புலம் பெயர் அடியார்களின் நிதி உதவியுடன் நடைபெறும் இந்த திருப்பணி வேலைகளின் செலவு பல லட்சங்களை தாண்டி விட்டது. குப்பிழான் மத்தியில் அமைந்து எல்லோருக்கும் அருள் பாலிக்கும் எம்பெருமானாகிய சொக்கர் வளவு சோதி விநாயகனின் திருப்பணிக்கு அடியார்கள் தொடர்ந்தும் வாரி வழங்கி கொண்டு வருகிறார்கள். இந்த திருப்பணி காரணமாக இம்முறை வருடாந்த உற்சவம் நடைபெறவில்லை. அடுத்த உற்சவ காலத்திற்கு முதல் இந்த திருப்பணியை முடிக்க ஆலய பரிபாலன சபையினர் முயன்று வருகிறார்கள்.

மேலதிக செய்திகள்
நூல் வெளியீட்டு விழாவோடு இன்றை செய்தி துளிகள். updated 17-11-2011

குப்பிழான் ஐ. சண்முகன் அவர்கள் எழுதிய உதிரிகளும் என்ற சிறுகதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா கடந்த 10-07-2011 வியாழக்கிழமை அன்று அருள்மிகு கன்னிமார் ஆலயத்தில் இடம் பெற்றது. இந்த நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு திரு சோ பரமநாதன் அவர்கள் தலைமை தாங்கினார். பெருமளவு பொது மக்களும், அறிஞர் பெருமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

புன்னாலைக்கட்டுவன் மகா வித்தியாலய அதிபராக கடமையாற்றிய திரு இரா ஜெயக்குமார் அவர்கள் தற்போது இடமாற்றம் பெற்று மைலணி சைவ மகாவித்தியாலயத்தின் அதிபராக கடமை ஏற்றுள்ளார்.

வரலாற்றுப் புகழ் மிக்க குப்பிழான் கற்கரை கற்பக விநாயகர் ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் 23-07-2012 திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்த திருவிழாவுக்கு புலம்பெயர் தேசங்களில் இருந்து வருகை தரும் அடியார் பெருமக்கள் விடுமுறைகளை எடுப்பதற்கு வசதியாக நேரத்தோடு அறியத்தருகிறார்கள்.

கடந்த சில வருடங்களாக குப்பிழான் விக்கினேஸ்வரா வெளி நாட்டவர் அமைப்பின் சார்பில் பாடசாலை மாணவர்களுக்கு நாள் தோறும் சத்துணவு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த சத்துணவு வழங்கும் செயற்பாட்டை இந்த வருடத்தோடு இடைநிறுத்துவதாகவும், இந்த செயற்பாட்டை கனடா மன்றமானது அடுத்த வருடம் ஆரம்பம் முதல் செயற்படுத்தவுள்ளதாக அறியத்தருகிறார்கள்.


ஊர் மக்கள் ஒன்று திரண்டு குறித்த நபரது வர்த்தக நிலையத்தினை இன்று பலாத்காரமாக உடைத்துள்ளனர். updated 26-10-2011

வடக்கில் அண்மைக் காலப் பகுதிகளில் வியாபார நோக்கில் செல்பவர்கள்; தொடர்பில் விழிப்பாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வியாபார நோக்கில் யாழ்ப்பாணத்திற்கு சென்ற நபர் ஒருவர் திட்டமிட்டு நடத்திய பல கோடி ரூபா மோசடியொன்று இப்போது அம்பலத்திற்கு வந்துள்ளது. வலிகாமத்தின் குப்பிளான் பகுதியினில் கடந்த இருவருடங்களுக்கு முன்னர் நபரொருவர் தமது குடும்பம் சகிதம் குடியேறியுள்ளார். அப்பகுதியினில் வர்த்தக நிலையமொன்றினை திறந்து கொண்ட இந்நபர் ஊர் பொதுமக்கள் பலரிடமும் சுமார் இரண்டு கோடி வரை கடன் பெற்றுள்ளார். அத்துடன் பல்வேறு வர்த்தக நிறுவனங்களிடமும் பல கோடி ரூபா பெறுமதியான பொருட்களை வியாபார நோக்கினில் கொள்வனவு செய்துமுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை முதல் இந்நபர் தனது குடும்பத்தடன் காணாமல் போயுள்ளார். அத்துடன் மோசடி செய்த பெரும் தொகை பணத்துடனேயே தப்பித்துமுள்ளார். சம்பவம் தொடர்பாக அப்பகுதி பொலிஸாருக்கு பொதுமக்கள் முறைப்பாடுகளை செய்யச்சென்ற போதும் அவர்கள் அம்முறைப்பாடுகளை ஏற்க மறுப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று ஊர் மக்கள் ஒன்று திரண்டு குறித்த நபரது வர்த்தக விலையத்தினை இன்று பலாத்காரமாக உடைத்துள்ளனர். அங்கிருந்த மீட்டெடுத்த பொருட்களை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்துமுள்ளனர்.


குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியாவின் வருடாந்த பொதுக் குழு கூட்டம் பற்றிய விபரம்.


குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியாவின் வருடாந்த பொதுக் குழு கூட்டம் கடந்த 22-10-2011 சனிக்கிழமை நடைபெற்றது. இதன் போது புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டனர். இந்த மன்றமானது கடந்த 16 வருடங்களுக்கு மேலாக பிரித்தானியா வாழ் குப்பிழான் மக்களின் ஒத்துழைப்போடும், பங்களிப்போடும் இயங்கி வருகின்றது. இதன் பிரதான இலக்குகளாக எமது கிராமத்தை அபிவிருத்தி செய்வது, பிரித்தானியா வாழ் குப்பிழான் மக்களின் கலை, விளையாட்டு துறைகளை வளர்த்தல், மற்றும் நாம் எல்லோரும் ஒரே இடத்தில் ஒன்று கூடி குலாவி எமது மண் பற்றை தக்க வைப்பது. மற்றைய மன்றங்களோடு ஒப்பீடு செய்யும் போது பிரித்தானியா மன்றமானது வேறுபட்டுக் காணப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் புதியவர்கள் தலைவர், செயலாளர், பொருளாளர்களாக தெரிவு செய்யப்படுகிறார்கள். இந்த பொதுக் குழு கூட்டத்தில் புதிய யாப்பு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த யாப்பின் பிரதான நோக்கம் சர்வதிகாரம் இல்லாமல் சகல விடயங்களும் ஜனநாயகப்படி நடைபெற வேண்டும் என்பதாகும்.

புதிய நிர்வாகிகளின் விபரங்கள்

தலைவர் - திரு வை.ஜங்கரலிங்கம்
உப தலைவர் - திரு பொ.கணேசலிங்கம்
செயலாளர் - திரு பா.உபேந்திரன்
உபசெயலாளர் - திரு சு.மணிவண்ணன்
பொருளாளர் - திரு சு.அருந்தவராஜா
உப பொருளாளர் - திரு பா.முகுந்தன்


இன்றைய செய்தி துளிகள். updated 11-10-2011

இந்த வருடம் நடைபெற்ற புலமை பரீட்சையில் எமது கிராமத்தை சேர்ந்த 7 பேர் சித்தி பெற்றனர். அவர்களில் இருவர் குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் ஆவார். எமது கிராமத்தின் மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் திரு பஞ்சாட்சரதேவன் அவர்களால் தனது தாயார் திருமதி திருமேனி தையல்முத்து (அம்மா) அவர்களின் ஞாபகார்த்தமாக விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 2 பேருக்கு ரூபா2500 வீதமும், மற்றையோர்களுக்கு ரூபா 2000 வீதமும் வழங்கப்பட்டு, வங்கியில் வைப்பில் இடப்பட்டது.

மயானத்திற்கு செல்லும் வீதி திருத்தி அமைக்கும் வேலைகள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டு நிறைவடைந்துள்ளது.

குப்பிழான் கற்கரை கற்பக விநாயகர் ஆலயத்திற்கு அருகில் உள்ள பழைய நெசவு சாலையானது போரின் காரணமாக முற்றாக அழிவடைந்துள்ளது. அதே இடத்தில் பல நோக்கு மண்டபமாக அமைக்க அரசாங்கத்தால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் அடிக்கல் நாட்டு விழா கடந்த வாரம் இடம்பெற்றது. இந்த விழாவில் கிராம பிரதேச செயலர் திரு பிரகாஸ் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.