விளையாட்டு கழகத்தை கவுரவிக்குமுகமாக நடாத்தப்பட்ட தேநீர் விருந்து மற்றும் செந்திநாதையர் சிலையை பாதுகாப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சி. updated 04-06-2012


எமது குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டு கழகத்தினால் டாக்டர். பொ. மகாலிங்கம் ஞாபகர்த்தமாக உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியினை யாழ் மாவட்ட ரீதியில் 28 கழகங்களுக்கிடையில் குப்பிளான் வரலாற்றிலும் ஓர் தடம்பதித்த நிகழ்வாகவும் வெகுசிறப்பாக நடாத்தி முடித்தனையினை முன்னிட்டு இவ் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியினை வெகுசிறப்பாக நடாத்துவதற்கு ஊக்கத்தினை வழங்கிய எமது கிராம சேவகர் திரு.செ.ஞானசபேசன் அவர்களால் இன்று விளையாட்டு கழக உறுப்பினர்களிற்கு விருந்துபசாரமும் பாராட்டு நிகழ்வினையும் ஏற்பாடு செய்து வழங்கியமைக்கு எமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் கிராம சேவகர் அவர்களால் இன்று 10,000 ரூபா பணமும் அன்பளிப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தகவல்
இ.நிரூபன்

 கடந்த 4 மாதங்களுக்கு முன்பு எமது இணையத்தளத்தில் எங்கள் ஊர் பெரியார் செந்திநாதையர் அவர்களின் சிலை காக்கைகளின் கழிவிடமாக மாறிவிட்டதாக குறிப்பிட்டு அந்த சிலையை பாதுகாப்பதற்கு எமது மக்களிடம் உதவி கோரியிருந்தோம். அந்த செய்தியை படித்தவுடன் கனடாவில் வதியும் திரு வைத்திலிங்கம் சிவசுப்பிரமணியம் அவர்கள் உடனடியாக சொக்கர்வளவு நிர்வாகத்தோடு தொடர்பு கொண்டு அந்த சிலையை சுற்றி அரை மதில் சுவர் கட்டவும், அதைச்சுற்றி கம்பி அடிப்பதற்கும் தேவையான உதவிகளை வழங்கினார். அவர்களுக்கு எமது ஊரின் சார்பிலும், எமது இணையத்தின் சார்பிலும் எமது மனமார்ந்த நன்றிகள்.

 சொக்கர்வளவு விநாயகர் ஆலய வருடாந்த உற்சவம் பற்றிய விபரங்கள், மற்றும் சமாதி கோவில் கும்பாபிசேகம் பற்றிய விபரங்களுடன் தொடர்கிறது இன்றைய செய்திகள். updated 01-06-2012
சொக்கர்வளவு சோதி விநாயகர் ஆலய வருடாந்த உற்சவம் 08-06-2012 வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் அரம்பமாகிறது. இம்முறை 12 நாட்கள் நடைபெறும் ஆலய உற்சவமானது, மிகவும் சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 18-06-2012 திங்கட்கிழமை தேரும், 19-06-2012 தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளது. மாலையில் சைவப்பிரசங்கங்களும் இடம்பெறவுள்ளது.

கனடா மொன்றியல் கலைவாணி மன்றத்தால் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கான மாணவர்களுக்கு மதியபோசன உணவு வழங்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே உலக உணவுத்திட்டத்தினால் நாளந்தம் உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு மேலதிகமாக காய்கறிகள் போன்ற சத்துணவுகளுக்கு இந்த மன்றத்தால் ரூபா 550 வழங்கப்பட்டு வருகிறது.

குப்பிழான் வடக்கு சமாதி கோவில் பிரதேசம் உயர் பாதுகாப்பு வலயத்தில் நீண்ட காலமாக இருந்து வந்தது. பற்றைகளும் மண் மேடும் நிறைந்த அந்த இடத்தை கனடாவில் இருந்து வந்த இறையருள் நிறைந்த காந்தி அம்மா என்ற மூதாட்டியினால் 1000 அடிச்சுற்றுமதில் உட்பட கட்டிட செலவுக்கு 50 லட்சத்திற்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ளது. 1 வருடத்துக்கு முன்னர் இது திரும்பவும் பழைய நிலைக்கு வரும் என்று யாரும் கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள். ஆனாலும் 80 வயதை தாண்டிய அந்த மூதாட்டி சாதித்து காட்டிவிட்டர். 04-06-2012 திங்கட்கிழமை அன்று கும்பாபிசேகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


குப்பிழான் வீரபத்திரர் ஆலயம் கடந்த 20 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து வந்தது. இந்த ஆலயத்தை புனரமைப்பு செய்து மீண்டும் பூசைகளை ஆரம்பிக்கும் நோக்கோடு 19-05-2012 சனிக்கிழமை புதிய நிர்வாக சபை அமைக்கப்பட்டது.
அதன் விபரங்கள் வருமாறு
தலைவர் - திரு நல்லதம்பி சிவலிங்கம்
செயலாளர் - திரு வைத்திலிங்கம் குமாரசாமி
பொருளாளர்- திரு வீரவாகு கிருஸ்ணராஜா
நிர்வாக உறுப்பினர்கள்
திரு நாகலிங்கம் செல்வரத்தினம்
திரு தில்லையம்பலம் சசிதரன்
திரு சின்னப்பு இராஜகுலேந்திரன்
திரு ரவீந்திரன் நிலக்க்ஷன்.

குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் கனடா அமைப்பின் புதிய நிர்வாகிகள் தெரிவு பற்றிய விபரங்கள். updated 12-05-2012


குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் கனடா அமைப்பின் புதிய நிர்வாகிகள் தெரிவு 29-04-2012 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. நீண்ட காலத்திற்கு பிறகு இடம் பெற்ற இந்த நிர்வாகிகள் தெரிவில் புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டனர். அதன் விபரங்கள் வருமாறு.

தலைவர்-திரு.நாகையா அப்பன்.

உபதலைவர்– திரு.பொ.சிவாமாஸ்டர்.

செயலாளர்-திரு.செ.சற்சொரூபன்.

உபசெயலாளர்-திரு.செ .பரமானந்தன்..

பொருளாளர்-திரு.சி.விக்கினேஸ்வரன்.

உபபொருளாளர்-திரு.கணேசலிங்கம்,தேவன்.

அங்கத்தவர்கள்-மதி, சக்திவேல், ஞானரூபன், ஜெயக்குமார், இளங்கோ, தீபன், குகதாசன், பகீரதன், மேகவர்ணன், திருமால்.இந்த புதிய நிர்வாகமானது கனடா வாழ் குப்பிழான் மக்களோடு இன்னும் ஆழமாக உறவுகளை பேணுவதோடு, நாம் எப்படி எமது கிராமத்தில் வாழ்ந்த போது ஒன்று சேர்ந்து பல நிகழ்வு நடத்தினோமோ அதே போல புலம்பெயர் தேசத்திலும் அது சாத்தியமாக உங்களால் முடிந்த பங்களிப்பை நல்குமாறு வேண்டிக்கொள்கின்றோம். திரு நாகையா அப்பன் அவர்களின் தலைமையில் அமையப் பெற்ற இந்த நிர்வாகம் ஆனது எமது கிராமத்திற்கென்று ஒரு நூலகம் அமைக்க உத்தேசித்துள்ளனர். வெறும் வெட்டி பேச்சிலும், போட்டி, பொறாமையிலுமே காலத்தை கடத்தும் இன்றைய உலகத்திலே திரு அப்பன் அவர்கள் செயலால் செய்து காட்டியவர், எமது கிராமத்திற்கென்று ஒரு விளையாட்டு மைதானம் கிடைப்பதற்கு காரணமானவர்களில் ஒருவர், அதை விட தனது சொந்த செலவில் விளையாட்டு வீரர்களின் பாவனைக்கு ஒரு மண்டபத்தையும் அமைத்துக் கொடுத்தவர். அதே போல் இம்முறை புதிதாக நிர்வாக சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர்களில் பலர் ஊரின் வளர்ச்சியில் மிகவும் அக்கறை உடையவர்கள். ஆகவே அவர்களின் நிர்வாகத்தில் எமது கிராமத்திற்கென்று சகல வசதியும் உள்ள ஒரு நூலகம் அமையப்பெறும் என்பது எமது அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும். அவர்கள் தமது இலக்கை அடைய வேண்டும் என்று நாமும் வாழ்த்துகின்றோம்.அருள்மிகு கன்னிமார் ஆலய உற்சவம் மற்றும் மாணவியின் சாதனை உட்பட பல செய்திகளுடன் விரிகிறது. updated 13-04-2012
அருள்மிகு கன்னிமார் ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் 26-04-2012 வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் என்று kuppilanweb இணையத்தளத்திற்கு அறியத்தருகிறார்கள் ஆலய நிர்வாகத்தினர். மேலும் தெரிவிக்கையில் சில விசேட நிகழ்வுகளைத் தவிர மற்றவைகள் எவ்வித மாறுதல்களும் இன்றி இடம்பெறும் என்றும், வழமைபோல் 10 நாட்களும் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். வருடாந்த உற்சவம் முடிவுற்றதும் பாலஸ்தானம் செய்யப்படடு, ஆலய சுவர்களுக்கு வர்ணம் தீட்டப்பட்டு மகா கும்பாபிசேகம் மிகவும் சிறப்பாக மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஆலய கும்பாபிசேக நிகழ்வுகளில் பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

குப்பிழான் விக்கினேஸ்வரா அனைத்துலக உதவும் கரங்களின் உதவியுடன் வறுமைக் கோட்டுக்குட்பட்ட மாணவர்களுக்கான கற்பதற்கான உதவிகள் மாதாந்தம் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த அமைப்பின் உதவியுடன் கல்வி கற்ற மாணவி ஒருவர் சாதாரண தர (O/L) பரீட்சையில் அதி கூடிய சித்தியை பெற்றுள்ளார். இவர் வசாவிளான் மத்திய மகாவித்தியாலத்தில் கற்று வருகிறார். பெறுபேற்றின் அடிப்படையில் பாசாலையில் முதலாம் இடத்தை தனதாக்கி கொண்டார். அதே நேரம் குப்பிழான் கிராமத்திலும் இவரே ஆகக் கூடிய சித்தியை பெற்றுள்ளார். செல்வி இராசதுரை திவாஜினி ஆகிய அந்த மாணவி 8A, 1C பெறுபேற்றை பெற்றுள்ளார். அவர்களுக்கு kuppilanweb சார்பில் எமது வாழ்த்துக்கள்.


குப்பிழான் வடக்கு கிராம சேவகரால் வழங்கப்பட்ட தகவல்கள்


குப்பிழான் வடக்கு பகுதியில் மீழ் குடியேறிய மக்களுக்கு வீட்டுத் தோட்டத்தை ஊக்குவிக்குமுகமாக பயிர்களுக்கான விதைகள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சால் வழங்கப்பட்டது. 6 பேருக்கு கால்நடை அமைச்சால் பசு மாடுகள் வழங்கப்பட்டது. மேலம் திவிநெகுமா என்ற அமைப்பினால் 25 பேருக்கு பழ மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

உலக வங்கியின் உதவியுடன் குப்பிழான் வடக்கு பகுதி மக்களுக்கு 3 லட்சத்தி ஜம்பதினாயிரம் பெறுமதியான வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றது. இதில் 4 பேர் அவர்கள் கொடுக்கப்பட்ட கால எல்லைக்குள் வீட்டை கட்டி முடித்துள்ளார்கள். அவர்களுக்கு 15,000 பெறுமதியான பொருட்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன.

உலக உணவுத்திட்டத்தால் மீள குடியேறியுள்ள 50 பேருக்கு உணவில்லா பண்டங்கள் வழங்கப்பட்டன.
ஒரு நாள் கோழிக் குஞ்சு 5 குடும்பத்திற்கும், நல்லின ஆடுகள் 4 குடும்பத்திற்கும் வழங்கப்படன.

தொண்டையில் மீன்முள் சிக்கியதால் மூச்சுத் திணறல்! குடும்பஸ்தர் பலி updated 29-02-2012

யாழ்.குப்பிளான் வாரியப்புலத்தை சேர்ந்த குடும்பஸ்தர் மீன்கூழ் குடித்த போது, அதிலிருந்த மீன்முள் தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்

கற்பன் கிருஸ்ணகுமார் என்பவர் காலையில் வேலை செய்துவிட்டு மீன்கூழ் குடித்துக் கொண்டு இருக்கும் போது தொண்டையில் திரளி மீன் முள் சிக்கிக் கொண்டது.

அதனால், அவர் சுவாசிப்பதற்கு சிரமப்பட்டதால் உடனடியாக அவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அவரது மனைவி கி.சத்தியசீலி அழைத்துச் சென்றுள்ளார்.

ஆனால், அவர் வழியிலேயே உயிரிழந்து விட்டார் என்று யாழ். வைத்தியசாலை நிபுணர் சி.சிவரூபன் தெரிவித்துள்ளார்.

இம் மரணம் தொடர்பாக யாழ்.சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

குப்பிழான் பொது பொது நூலகத்தில் வைக்கப்பட்ட கணணிகள் திருட்டு. updted12-01-2012அண்மையில் பிரித்தானியாவில் இருந்து நலன் விரும்பிகளால் 10 கணனிகள் குப்பிழான் கல்வி வளர்ச்சிக்கு அனுப்பப்பட்டன.அந்த கணனிகளில் இரண்டை பாடசாலைக்கும், 8 கணனிகளை புதிதாக கட்டப்படும் பலநோக்கு கட்டிடத்தில் வைத்து மாணவர்களுக்கான கணனி வகுப்புக்களை ஆரம்பிப்தற்கான ஆக்கபூர்வமான வேலைகளை குப்பிழான் விக்கினேஸ்வரா அனைத்துலக உதவும் கரங்கள் அமைப்பு மேற்கொண்டு இருந்தது. பலநோக்கு கட்டிடம் கட்டி முடிக்கபடாமையால் தற்காலிகமாக பொது நூலகத்தில் இந்த கணணிகள் வைக்கப்பட்டிருந்தன. மூன்று இலட்சம் பெருமதியான ஆறு கணணிகள் புதன்கிழமை இரவு இனந்தெரியாத காட்டுவாசிகளால் களவாடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுன்னாகம் பொலிசில் முறையிடப்பட்டுள்ளது.


சின்னம் சிறு பாலகனின் மரணத்தால் சோகத்தில் ஆழ்ந்துள்ள குப்பிளான் கிராமம்! updated 11-01-2012

குப்பிழானை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சின்னம் சிறு பாலகனான மகேஸ்வரராஜ் விஸ்னுராஜ் இன்று 11-01-2012 புதன்கிழமை அகால மரணமடைந்துள்ளார்.

இவர் மகேஸ்வரராஜ் (செல்வம்) அவர்களின் பாசத்துக்குரிய புதல்வனும் காலஞ் சென்ற கந்தலிங்கம் அவர்களின் பேரனும் ஆவார்.

வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த ஒன்றரை வயதுக் குழந்தை தண்ணீர் நிரப்பப்பட்ட பாத்திரத்தினுள் தவறுதலாக வீழ்ந்து மூழ்கியதனால் பரிதாபமாக உயிரிழந்தது.

குப்பிளான் தெற்கில் நேற்று முற்பகல் 9.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் மகேஸ்வரராஜ் விஷ்ணுராஜ் என்ற குழந்தையே இவ்வாறு மரணமானது.


இது குறித்து மேலும் தெரியவருவதாவது:


குறித்த குழந்தையின் ஆடைகளைக் கழுவுவதற்காகப் பாத்திரமொன்றில் தண்ணீர் நிரப்பப்பட்டிருந்தது. அந்த இடத்தில் நின்ற குழந்தை பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரோடு விளையாடிக்கொண்டிருந்தது, பிறவேலைகள் காரணமாக அவ்விடத்தை விட்டு அகன்றுசென்ற குழந்தையின் தாய் திரும்பி வந்து பார்த்தபோது, குழந்தை பாத்திரத்தினுள் வீழ்ந்து மூச்சையுற்றுக் கிடந்தது. உடனடியாகக் குழந்தையை மீட்டுத் தெல்லிப்பழை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோதும் அதனைக் காப்பாற்ற முடியவில்லை. குழந்தை இறந்து விட்டதை வைத்தியர்கள் உறுதிப்படுத்தினார்கள். இது பற்றி சுன்னாகம் பொலிஸாரும் மல்லாகம் நீதிமன்ற நீதிவானும் விசாரணைகளை மேற்கொண்டனர். குழந்தையின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனை செய்யப்பட்டபின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

துயரச் செய்தி கேட்டு குப்பிளானில் உள்ள சின்னம் சிறு பாலகனின் வீட்டில் ஏராளமான மக்கள் குவிந்த வண்ணம் உள்ளார்கள்.

பாலகனை இழந்த சோகம் தாங்காது அங்கு வரும் எல்லோரும் கதறி அழுதவண்ணம் உள்ளார்கள்.

பாலகனின் மரணச் செய்தியை ஏற்க முடியாமல் குப்பிளான் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

 

குப்பிழான் விவசாயிகள் சம்மேளனத்தின் பாராட்டு விழா மற்றும் சமாதி கோவிலடி மீழ் குடியேற்றம் ஆகிய செய்திகளுடன் செய்தி தொகுப்பு விரிகின்றது. updated 01-01-2012

குப்பிழான் விவசாயிகள் சம்மேளனத்தினால் அண்மையில் பாராட்டு விழா ஒன்று நடாத்தப்பட்டது. இந்த விவசாயிகள் சம்மேளனத்தின் ஸ்தாபகராகிய திரு சண்முகம் வைத்தீஸ்வரன் (ஓயா அண்ணை)அவர்களை கெளரவிக்கும் நோக்கோடு இந்த பாராட்டு விழா இடம்பெற்றது. விவசாய சங்கம் ஆனது குப்பிழான் விவசாயிகளுக்கு தேவையான பல உதவிகளை செய்து வருகின்றது. மேலும் இந்த சங்கத்தின் மூலம் இலங்கை வங்கியால் 75 லட்சம் பெறுமதியான கடன்கள் 70 பயனாளிகளுக்கு கடந்த வாரம் வழங்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இயங்கும் விவசாய சம்மேளனங்களில் முதலாவதாக அச்சுவேலி விவசாய சங்கமும், இரண்டாவதாக குப்பிழான் விவசாயிகள் சங்கமும் சிறப்பாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இதன் தற்போதைய தலைவராக திரு நவரத்தினராசா அவர்கள் செயல்படுகிறார்.

குப்பிழான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகத்தின் புதிய நிர்வாக சபை அண்மையில் தெிவு செய்யப்பட்டது. இதன் நிர்வாக சபை விபரங்கள் பின்வருமாறு
தலைவர் - திரு இராசையா நீரூபன்
செயலாளர் - திரு கந்தசாமி கவாஸ்கர்
பொருளாளர் - திரு வைரவநாதன் தமிழ்ச்செல்வன்.

அண்மையில் பாதுகாப்பு வலயத்தில் இருந்து நீக்கப்பட்ட சமாதி கோவில் பகுதியில் UNCHER அமைப்பின் மூலம் ரூபா 125,000 செலவில் 5 தற்காலிக வீடுகள் அமைக்கப்பட்டு 5 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. எதிர்காலத்தில் இவர்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரியத்தருகின்றன. இதன் பயனாளிகள் விபரங்கள் வருமாறு ந.நேசராணி, சி.அருளானந்தசிங்கம், சி.விதுசனன், சி.ராதை, க.சுபத்திரா.
பொருளாதாரா அபிவிருத்தி அமைச்சின் மீள் எழுச்சி திட்டத்தின் கீழ் 9 பேர்களுக்கு ரூபா 50,000 கடனாக வழங்கப்பட்டது.

சிவத்தமிழ் வித்தகர் திரு சிவ மகாலிங்கம் அவர்களுக்கு சைவசமய வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்புக்காக இலங்கை அரசினால் கலாபூசனம் விருது வழங்கப்பட்டது. இலங்கை அரசினால் வருடாவருடம் ஒவ்வொரு துறைக்கும் விருதுகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் உள்ள வறிய மக்களுக்கு மாதமாதம் பிச்சை சம்பளம் வழங்கப்பட்டு வருகின்றது. கடந்த பல காலங்களாக மாதம் 100 ருபா மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு முதல் இந்த தொகையை ரூபா 500 ஆக உயர்த்தியுள்ளதாக அறியத்தருகிறார்கள்.


வருகிற சனிக்கிழமை கிராம சேவையாளர் திரு சபேசன் அவர்களுக்கும் சமாதிகோவில் மக்களுக்குமான கலந்துரையாடல் ஒன்று நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இந்த கலந்துரையாடலில் குடியயேறிய மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தெரிவிக்கவும் அவர்களுக்கான உதவிகளை வழங்கவும் இந்த கலந்துரையாடல் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. வீடுகள், ஆலயங்கள், வாசிகசாலை என்பன முற்றாக தரைமட்டமாக்கப்பட்டு வனாந்தர பிரதேசமாகவும், முள்ளு பற்றைகள் வளர்ந்து குடியேறுவதற்கு பொருத்தமில்லாத பிரதேசமாக காணப்படுகிறது. ஆனாலும் எவ்வளவு ஆண்டுகள் சென்றாலும் இப்படியே இருந்துவிடுமோ என்ற அச்சம் காணப்படுகிறது. மக்களும் குடியேற பின்னடிக்கிறார்கள். யாருடைய காணி எங்கே என்று அடையாளம் காண்பதே மிகவும் கடினமாகவுள்ளது. சிலர் தம்முடைய காணி இது தான் என்று முள்ளு கம்பி அடித்து உரிமை கொண்டாடும் போது பிரச்சினைகளும் உருவாகின்றது.

அங்குள்ளவர்கள் தமது காணியை துப்பரவு செய்தாலும் புலம்பெயாந்தவர்களின் காணிகளை துப்பரவாக்குவதற்கு ஒருவரும் இல்லை. எல்லா காணிகளும் துப்பரவாக்கும் பொழுது தான் மக்கள் எவ்வித பிரச்சினை இன்றி குடியேறி விவசாயம் போன்ற தொழில்களை செய்ய முடியும் மற்றையது டெங்கு காய்ச்சல் போன்ற நோய்களில் இருந்தும், பாம்பு போன்றவற்றில் இருந்தும் தம்மை பாதுகாத்து தங்கள் வாழ்க்கையை பிரச்சினைகள் இன்றி கொண்டு செல்ல முடியும். அண்மையில் தான் சமாதி கோவிலுக்கு செல்லும் வீதி புனரமைக்கப்பட்டது. ஆகவே சமாதிகோவில் பிரதேசம் பழைய நிலையை ஆடைய நீண்ட காலம் காத்திருக்க வேண்டும்.

சுண்ணாகம் பிரதேச சபையால் குப்பிழான் கிராமத்திற்கென்று 7 focus lightக்கள் வழங்கப்பட்டன. இதன் மூலம் முக்கிய பகுதிகள் இரவில் ஒளிர்படவுள்ளது. அவையாவன குப்பிழான் சந்தி, பழைய லோன்றியடி, குருந்தடி மூலை, பிள்ளையார் கோவிலடி போன்ற பகுதிகள் ஆகும்.