யாழ். புத்தூர் எவரெஸ்ட் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் குப்பிளான் விக்னேஸ்வரா அணி சம்பியன்

யாழ். புத்தூர் எவரெஸ்ட் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட யாழ் குடாநாடு முழுவதிலிருந்தும் 42 அணிகள்

பங்குபற்றிய மாபெரும் வெற்றிக் கிண்ணத்திற்கான கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் குப்பிளான் விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகம் அதனை எதிர்த்து விளையாடிய உடுப்பிட்டி இமையாணன் விளையாட்டுக் கழகத்தை மிகச் சிறப்பாகத் தோற்கடித்து வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.

புத்தூர் எவரெஸ்ட் விளையாட்டுக் கழக மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது 13/06/2010 அன்று விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் முதலில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற விக்னேஸ்வரா விளையாட்டுக்கழக அணியின் தலைவர் தி. சிவசங்கர் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தார்.

முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய உடுப்பிட்டி இமையாணன் விளையாட்டுக் கழகத்தினர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்களை இழந்து 79 ஓட்டங்களைப் பெற்றனர். இதில் இமையாணன் அணியின் சார்பாக கவிதரன் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 30 ஓட்டங்களை தனது அணிக்காக பெற்றுக் கொடுத்தார்.

விக்கினேஸ்வரா அணியின் ஜீ.ரஜீவ் அவர்களின் சிறப்பான பந்துவீச்சால் 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். 80 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம் 18.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 79 ஓட்டங்களைப் பெற்றனர்.

இதன் காரணமாகப் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து நடுவரால் இவ்விரு அணிகளுக்கும் சுப்பர் ஓவர் முறையில் விளையாட அனுமதி வழங்கப்பட்டது. இதில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற விக்கினேஸ்வரா அணியினர் முதலில் களத் தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தனர்.

இந்நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இமையாணன் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட ஒரு ஓவரில் எந்த ஒரு ஓட்டத்தையும் பெறாத நிலையில் ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து ஒரு ஓட்டம் பெற்றால் வெற்றி பெற்றுவிடலாம். என்கின்ற நிலையில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய விக்கினேஸ்வரா அணியினர் முதலாவது பந்துப் பரிமாற்றத்திலேயே தனது வெற்றி இலக்கை அடைந்தனர்.

விக்கினேஸ்வரா அணியின் சார்பாக மிகச் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய ஜீ. ரஜீவ் 20 ஓட்டங்களையும் இறுதி நேரத்தில் தனது அணிக்கு வலுச்சேர்க்கும் வகையில் களமிறங்கிய க. அருளரசன் 18 ஓட்டங்களையும் தனது அணிக்காகப் பெற்றுக் கொடுத்தனர். விக்கினேஸ்வரா விளையாட்டுக்கழகம் சார்பாக விளையாடிய ஜீ. ரஜீவ் போட்டியின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவு செய்யப்பட்டார்.

இறுதியாக அங்கு குழுமியிருந்த ரசிகர்களினது பலத்த கரகோசங்களுக்கு மத்தியில் விக்கினேஸ்வரா விளையாட்டுக்கழகத்தினர் தமக்கான வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டனர்.

இந்த வரலாற்று வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் விக்கினேஸ்வரா அணியினர் ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் வெற்றிக் கிண்ணத்தை ஏந்தியவாறு குப்பிளானின் வீதிகள் அனைத்திலும் வலம் வந்தனர்.

Thanks Tamil cnn