யாழ்.குப்பிளான் கிராம உதயப் பொன்விழாவில் மூத்த கிராமத் தொண்டர்கள் பலர் கௌரவிப்பு: கண்கவர் கிராமியக் கலை நிகழ்வுகளும் வெகு விமரிசை யாழ்.குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் குப்பிளான் கிராம உதயப் பொன்விழா நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (16.11.2014) பிற்பகல் 02 மணி முதல் மேற்படி கழகத் தலைவர் வி.செந்தில்குமார் தலைமையில் இடம்பெற்றது.

குப்பிளான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து சிவபூமி ஞான ஆச்சிரம முன்றலில் விருந்தினர்களாகக் கலந்து கொண்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிகத்துறைத் தலைவர் பேராசிரியர் க.தேவராஜா, கொழும்பு பொலிஸ் தலைமையக திட்டமிட்ட குற்றங்களும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளருமான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரும் குப்பிளானைச் சேர்ந்தவருமான த.கணேசநாதன், குப்பிளான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலயத் தலைவர் பேராசிரியர் க.பாலசுப்பிரமணியம், குப்பிளானைச் சேர்ந்த பிரபல சிறுகதை எழுத்தாளர் ஐ.சண்முகன், குப்பிளான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலய அதிபர் த.தவராஜா உட்பட குப்பிளான் கிராமத்தின் மூத்த கிராமத் தொண்டர்கள் பலரும் பொன்னாடைகளும், மாலைகளும் அணிவித்துக் கௌரவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து சிவபூமி ஞான ஆச்சிரமத்திலிருந்து கௌரவிக்கப்பட்ட அனைவரும் ஊர்வலமாக கழக மைதானம் நோக்கி கிராமியக் கலைகளான கரகாட்டம், மயிலாட்டம், குதிரையாட்டம், பொம்மலாட்டம் சகிதமாக கோலாகலமான முறையில் ஊர்ப் பொதுமக்களால் அழைத்து வரப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து கற்கரைக் கற்பக விநாயகர் ஆலயத்திற்கு அண்மையிலுள்ள கழக மைதானத்தில் விருந்தினர்கள் மங்கள விளக்கேற்றும் நிகழ்வு இடம்பெற்றது. தேசியக் கொடியை பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட குப்பிளானைச் சேர்ந்த சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் த.கணேசநாதனும், விளையாட்டுக் கழகத்தின் கொடியை கழகத் தலைவர் வி.செந்தில்குமாரும் ஏற்றி வைத்தனர்.

வரவேற்புரையை குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகப் பொருளாளரும் முதன்மை மாணவனுமான இ.தனுசன் நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட பேராசிரியர் க.தேவராஜா கிராம உதயப் பொன்விழா நிகழ்வைச் சம்பிராதய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து கழக மைதானத்தில் பிரதம விருந்தினரால் மர நடுகை வைபவமும் இடம்பெற்றது.அடுத்து குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம் கிராம உதயப் பொன் விழாவை முன்னிட்டு நடத்திய துடுப்பாட்ட இறுதிப் போட்டி நிகழ்வு ஆரம்பமானது. இப் போட்டியில் கரவெட்டி ஞானம்ஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து கொக்குவில் காமாட்சி விளையாட்டுக் கழக அணி மோதியது. விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டியில் கொக்குவில் காமாட்சி விளையாட்டுக் கழக அணி இறுதியில் இலகுவாக வெற்றி வாகை சூடிக் கொண்டது.

போட்டியின் இடையிடையே கிராமியக் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றமை அங்கு கூடியிருந்த மக்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.தொடர்ந்து தலைமையுரை, விழா ஏற்பாட்டுக் குழுத் தலைவரான இ.நிரூபனின் உரை என்பன இடம்பெற்றதுடன் கிராம புகழ் கவிதைகளை ஊடகவியலாளரும் இளங் கவிஞருமான செ.ரவிசாந், ஓய்வு பெற்ற கிராம சேவகர் இ.சி.தெட்சணாமூர்த்தி ஆகியோர் வழங்கினர். விருந்தினர்கள் உரையைத் தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய பேராசிரியர் க.தேவராஜா,

குப்பிளான் மக்களின் ஒற்றுமைப் பண்பை விதந்து உரையாற்றினார். அவர் தனது உரையில், குப்பிளானில் என்ன விழா நடந்தாலும் ஊரவர்கள் தங்கள் சொந்தங்கள் எங்கிருந்தாலும் தேடிக் கண்டு பிடித்து விழாவிற்கு அழைத்து வருவார்கள்.

இன்று கூட இவ்விழாவிற்கு குப்பிளானைச் சேர்ந்த தற்போது நாட்டின் பல்வேறு இடங்களிலும் தங்களது தொழில் நிமிர்த்தமாக வாழ்ந்து வரும் பலரையும் அழைத்து இந்த விழாவைச் சிறப்பாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். குப்பிளான் மக்களனைவரும் மண் மீது பற்றுக் கொண்ட தனித்துவம் மிக்கவர்களாகத் திகழ்கிறார்கள் என்றார்.உண்மையிலேயே கிராமத்தவர்கள் பலரும் சிறுவர், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என்ற வேறுபாடுகளை மறந்து இவ்விழாவில் நூற்றுக்கணக்கில் கலந்து கொண்டமை எம் கிராம ஒற்றுமைக்குத் தக்க சான்று.

குப்பிளான் கிராமம் தனிக் கிராமமாக உருவாகி ஐம்பதாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் இவ்வேளையில் கிராம இளைஞர்கள் முன்வந்து சிறப்பானதொரு விழாவை ஒழுங்கமைத்து நடத்தியிருப்பது குப்பிளானைச் சேர்ந்த பெரியவர்கள் மத்தியில் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

அத்துடன் கிராமத்திலுள்ள மூத்தோர்களைக் கௌரவித்தமையும் ஏனையவர்களுக்குச் சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளது.பொன்விழா சிறப்புக் கவிதை:

ஈழத்தின் வடதிசையில் அமைந்ததும் எம்மூர்
இயற்கை வளம் தன்னகத்தே கொண்டதும் எம்மூர்
பச்சைப் பசேலென்று பயிர்கள் உண்டு
பார்த்த இடமெல்லாம் பசுமை உண்டு

வாழை வளைந்திங்கே குலை தள்ளும்
பாளை தந்த பனையாலே பல பலன் கிடைக்கும்
மடல் விரிந்த மலர்களில் தேன் குடித்த வண்டுகள்
மயக்கத்திலே ரீங்காரமிடும்

பசுமாடுகள் புற் தரையில் பவனி வரும்
காளையொடு பசு கூடிக் களிக்கும்
கொல்லையில் தாய்க்கோழி குஞ்சுக்கோழிகளுக்கு
அலகால் இரை கௌவி ஊட்டும்
காகத்தின் கூட்டில் முட்டையிட்ட சந்தோசத்தில்
குயில் குக்கூ பாடும்

இவை எம்மூரின் இயற்கை வனப்பின்
ஒரு சில துளிகள் மாத்திரம் தான்…
எம்மூரின் பெருமையை இயம்பிட
ஒரு நாள் போதாது

தனிக் கிராமமாக உருவாகி பொன்விழாக் காணும்..
குப்பிளானின் பெருமை குவலயம் உள்ள வரை வாழிய என வாழ்த்துகிறேன்..
மனதார வாழ்த்துக் கவி சூடுகிறேன்.

செய்திக் கட்டுரையாக்கம் மற்றும் படங்கள்: செ.ரவிசாந்-