குப்பிழான் சொக்கர் வளவு சோதி விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் தொடர்பான சிறப்பு கட்டுரை.updated 29-01-2012


ஈழ மணித்திரு நாட்டின் வடபால் அமைந்துள்ள யாழ் மாவட்டத்தில் வலிகாமம் தெற்கில் தெய்வ மணம் கமழும் புண்ணிய இடமாக விளங்குவது குப்பிழான் பதியாகும். சஞ்சீவிகளில் ஒன்றான குப்பிளாய் என்னும் ஒரு வகைப்பூண்டு இவ்விடத்தில் அடர்த்தியாய் வளர்ந்தமை குப்பிழான் என்னும் நாமம் வரக்காரணமாயிற்று. இவ்வழகிய கிராமத்தின் மத்தியில் இருதயம் போல் விளங்குகிறது சொக்கவளவு. இங்கு வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவர்களின் விக்கினங்களைத் தீர்க்கும் விநாயகப் பெருமான் கோயில் கொண்டருளி அருள் பாலிக்கும் தலம் குப்பிழான் சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலயமாகும்.இந்த ஆலயத்தின் நவகுண்ட பட்ச மகா கும்பாபிசேகம் 2000 ஆண்டு நடைபெற்றது.இந்த ஆலயத்திற்கு பல்வேறு திருப்பணி வேலைகள் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் நிமிர்த்தம் திருப்பணி வேலைகள் 2011ம் ஆண்டு தைப்பூசத்திலன்று தொடக்கப்பட்டு கடந்த 22ம் திகதி வரை வேலைகள் நடைபெற்று வந்தன. இந்த ஆலயத்தின் மொத்த திருப்பணிச் செலவு 50 லட்சங்கள் ஆகும். இதில் 44 லட்சங்கள் அடியார்களிடமிருந்தும் மிகுதி 6 லட்சங்கள் உயர்ந்த வட்டிக்குக்கு கடனாகவும் பெறப்பட்டு இந்த வேலைகள் இனிதே முடிவுற்றது. மகா மண்டபம், மணிக்கூட்டு கோபுரம், வைரவர் கோவில் போன்றன புனரமைக்கப்பட்டது. மகாலட்சுமி கோவில், தெட்சணா மூர்த்தி, நாக தம்பிரான் மடைகள் பதிதாக அமைக்கப்பட்டது. முருகன், சண்டேஸ்வரர் மடைகளின் மேல் தூபிகள் புதிதாக அமைக்கப்பட்டது. உள் மண்டபத்திற்கு முற்று முழுவதுமாக மாபிள் பதிக்கப்பட்டது.


வெளியில் உள்ள செந்திநாதர் ஜயர் அவர்களின் சிலைக்கு வர்ணம் பூசப்பட்டது. கடந்த 23-01-2012 திங்கட்கிழமை ஆலய கும்பாபிசேகம் ஆரம்பமானது. இந்த ஆலய கும்பாபிசேக நிகழ்வில் பெருமளவு குருக்கள், சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். குறிப்பாக கற்கரை ஆலய முன்னாள் பிரதம குரு குமார் ஜயா அவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றார். 28-01-2012 சனிக்கிழமை எண்ணெய் காப்பு நிகழ்வு இடம் பெற்றது. இந்த நிகழ்வில் நல்லை ஆதீனம் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார். 29-01-2012 ஞாயிற்றுக்கிழமை முதல் காலை 9.00 மணி தொடக்கம் மதியம் 12.00 மணி வரை எதிர்வரும் 48 நாட்களுக்கு மண்டல அபிசேகம் நடைபெறும்.உலகமே போற்றப்படும் காசிவாசி செந்திநாதையர் அவர்கள் பிறந்த மண்ணாம் குப்பிழானில் அவருக்கென்று 1983 ஆம் ஆண்டு சிலை ஒன்று அமைக்கப்பட்டது. ஆனாலும் நீண்ட காலமாக இந்த சிலையானது காக்கைளின் கழிப்பிடமாக இருந்து வந்தது. எமது மண்ணில் பிறந்து எமது கிராமத்துக்கு பெருமை தேடித் தந்த ஒரு அறிஞனுக்கு நாம் கொடுக்கும் கவரவம் இதா. செந்திநாதையர் பேரவை என்று வெளிநாடுகளில் இருந்தும் இந்த சிலை கவனிப்பார் அற்றே கடந்த காலங்களில் இருந்து வந்தது. தற்போது வர்ணம் பூசப்பட்டாலும் அதனை காக்கைகளில் இருந்து பாது காப்பதற்கு அரை மட்ட சுவர் கட்டி கம்பி அடிக்கப்படவேண்டும். இதற்கு 50,000 ரூபா தேவைப்படுகிறது.


ஆலயத்தின் கடனை அடைப்பதற்கு 6 லட்சம் தேவைப்படுகிறது. ஆகவே சமூக ஆர்வலர்கள், அடியார்கள் போன்றோர் தம்மோடு தொடர்பு கொண்டு நிதி உதவிகளை வழங்குமாறு வேண்டுகிறார்கள் ஆலய நிர்வாக சபையினர்.

தொடர்புகளுக்கு

ஆனந்தன் (பொருளாளர்) - 0094214903225