சொக்கர்வளவு சோதி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் 2012 பற்றிய செய்தித் தொகுப்பு. updated 01-07-2012


தனிச் சைவ தமிழ் கிராமமான குப்பிழானில் சொக்கர்வளவு பதியில் நடுநயமாக வீற்றிருந்து எல்லோருக்கும் அருள்பாலிப்பவர் சோதி விநாயகன். எம்பெருமானுக்கு ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் மாகோற்சவ விஞ்ஞாபனம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. புனரமைப்பு வேலைகள் காரணமாக கடந்த வருடம் மகோற்சவ விஞ்ஞாபனம் நடைபெறவில்லை. இம்முறை சிறப்பாக இடம்பெற்ற இந்த நிகழ்வு வழமைக்கு மாறாக 12 நாட்கள் இடம்பெற்றது.

கடந்த 08-06-2012 வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. இந்த உற்சவ காலங்களில் சமய சொற்பொழிவுகள் சிறந்த பேச்சாளர்களால் நிழத்தப்பட்டன. காலையும் மாலையும் திருவிழாக்கள் மிகவும் உற்சாகமாக இடம்பெற்றது. சப்பர திருவிழாவன்று எம்பெருமான் மின் விழக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் பவனி வந்த காட்சி கண்கொள்ளா காட்சியாக இருந்தது. அந்த அற்புத காட்சியை கண்ட அடியார் பெருமக்கள் ஆனந்த களிப்பால் நெஞ்சுருகி பாடி மகிழ்ந்தனர்.

18-06-2012 திங்கட்கிழமை இரதோற்சவ நிகழ்வு இடம்பெற்றது. அதிகாலை 5.00 மணியளவில் திருப்பள்ளி பூசையுடன் ஆரம்பமானது அன்றைய நிகழ்வு, தம்ப பூஜையை தொடர்ந்து வசந்த மண்டப பூஜை இடம்பெற்றது. அதன் பின்னர் எம்பெருமான் அடியார்களின் தோழ்களில் ஆடி அசைந்து வர, பூமாரி பொழிந்த அந்த அற்புத காட்சி பார்ப்பவர்களை பரவசப்படுத்தியது. இந்த நிகழ்வில் ஆலய கணக்கறிக்கையை பொதுமக்களிடம் வெளியிட்டனர் ஆலய நிர்வாகத்தினர். அதோடு எதிர்காலத்தில் ஆலய கோபுர திருப்பணிகள் ஆரம்பிக்கவுள்ளதான சமிக்கையை அடியார்களுக்கு தெரியப்படுத்தினர். எம்பெருமான் அழகிய தேரில் ஏறி வெளிவீதியில் பவனிவர அடியார்கள் அங்க பிரதட்சனம், கற்புர சட்டி எடுத்து தமது வேண்டுதல்களை நிறைவேற்றினர். தேர் பவனி நிறைவடைந்ததும் அடியார்கள் அர்ச்சனைகள் செய்தனர். மாலை 3 மணியளவில் எம்பெருமான் தேரிலிருந்து இறங்கி தமது இருப்பிடம் நோக்கி மெல்ல நகர்ந்தார். அபிசேக அராதனைகளோடு தேர்த்திருவிழா இனிது நிறைவு பெற்றது.

அதனைத் தொடர்ந்து தீர்த்த உற்சவம், திருக்கலியாணம் ஆகிய நிகழ்வோடு இவ்வருட உற்சவம் இனிதே நிறைவு பெற்றது. இந்த மகோற்சவ நிகழ்வுக்கு ஆலயத்தோடு தொடர்புபட்ட 10க்கு மேற்றபட்ட குடும்பங்கள் புலம்பெயர் தேசங்களில் இருந்து பங்கு பற்றி சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அமரர் காசிப்பிள்ளை இராசா அவர்களின் ஞாபகார்த்தமாக சுவிஸில் வதியும் அவர்களின் புதல்வர்களின் நிதி உதவியுடன் புதிதாக அமைக்கப்பட்ட கட்டிடத்தில் அடியார்களுக்கு 12 நாட்களும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.