குப்பிளான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தால்மூத்த சிவாச்சாரியார் பிரம்மஸ்ரீ தி.வைத்தீஸ்வரக் குருக்கள் உள்ளிட்ட மூத்தோர்கள் கெளரவிப்பு (Photos)

 


யாழ்.குப்பிளான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தின் வாணி விழாவும் முதியோர் விழாவும் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (13-10-2016)  பிற்பகல் -04.30 மணி முதல் ஆச்சிரம மண்டபத்தில் சிவபூமி அறக் கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு. திருமுருகன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.  


இந்த விழாவில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் பிரதம விருந்தினராகவும், உடுவில் பிரதேச செயலர் மு, நந்தகோபாலன், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் உதவிப் பணிப்பாளர் சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம், பலாலி ஆசிரிய கலாசாலையின் விரிவுரையாளர் கு. பாலசண்முகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், குப்பிளான் விவசாயிகள் சம்மேளனத் தலைவர் செ.நவரத்தினராசா(கப்பூர்) ஆகியோர் கெளரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

 


குறித்த விழாவில் விசேட நிகழ்வாக மூத்தோர்கள் கெளரவிப்பு  இடம்பெற்றது. அந்த வகையில் குப்பிளானைச் சேர்ந்த மூத்த சிவாச்சாரியாரும், குப்பிளான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலயப் பிரதம குருவுமான  பிரம்மஸ்ரீ தி.வைத்தீஸ்வரக் குருக்கள் நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளால் பொன்னாடை மற்றும் மாலை அணிவித்துக் கெளரவிக்கப்பட்டார்.


மேலும் சிவபூமி ஞான ஆச்சிரமத்திற்குத் தவறாது தினமும் சென்று வழிபட்டு வரும் ஆச்சிரமத்திற்கு அருகில் வசித்து வரும் சிவனடியார் நகுலேஸ்வரி மாலை அணிவித்தும், சிறப்புப் பரிசில் வழங்கியும் கெளரவிக்கப்பட்டார். அத்துடன் குப்பிளான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தில் ஆச்சிரமப் பணிகள் ஆற்றி வரும் எஸ். கந்தசாமி பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட யாழ். மாவட்ட அரசாங்க அதிபரால் மாலை அணிவித்தும், சிறப்புப் பரிசில் வழங்கியும் கெளரவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து தொல்புரம் சிவபூமி முதியோர் இல்லத்தில் வசித்து வரும் ஓய்வு நிலைப் புகையிரத நிலைய அதிபர் எஸ்.செகராசசிங்கம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் உதவிப் பணிப்பாளர் 
சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கத்தால் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டார். 

 


குப்பிளான் சிவபூமி ஞான ஆச்சிரமம் இவ் வருடம் முதல் எமது சமூகத்தின் அருட் கொடைகளான மூத்தோர்களைக் கெளரவிக்க எடுத்த முடிவு மிகவும் வரவேற்புக்குரியதொன்று மாத்திரமல்லாமல் காலத்தின் அவசிய தேவையாகவுமுள்ளது. நன்னெறி சார்ந்து நாம் வாழ வழிகாட்டிய நடமாடும் பல்கலைக் கழகமான மூத்தோர்களை நாம் பேணிப் பாதுகாக்காமல் முதியோர் இல்லங்களில் கொண்டு சென்று சேர்ப்பது முறையல்ல. மூத்தோர்களுக்கான உரிய கெளரவத்தை வழங்க வேண்டியது எம்மனைவரதும் கடமையாகும். 

செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள் :- செ-ரவிசாந்-