முதன் முதலாக சுவிஸ் மண்ணில் சிறப்பாக நடைபெற்ற செம்மண் இரவு 2015. updated 09-01-2015

கடந்த 2ஆம் திகதி தை மாதம் 2016 ஆம் ஆண்டு முதன் முதலாக சுவிற்சர்லாந்தில் குப்பிளான் விக்னேஸ்வரா மன்றத்தின் இளம் தலைமுறையினரால் குப்பிளான் கிராமத்தின் மக்களின் ஆதரவுடன் குப்பிளான் செம்மண் நிகழ்வு பெருந்திரளான சுவிஸ் வாழ் குப்பிளான் மக்களின் மத்தியில் கொண்டாடப்பட்டது.

குப்பிளான் கிராமம் மற்றும் அக் கிராமிய வாழ்வு குறித்த பேச்சுகள், கவிதைகள், கலை நிகழ்வுகள் சிறப்புற நடைபெற்றன. குப்பிளானில் ஆசிரியர்களாகப் பணியாற்றி அக்கிராமத்தின் கல்வி வளர்ச்சியில் பெரும் பங்காற்றியிருந்த தற்போது ஜேர்மனியில் வசித்துவரும் திரு திருமதி இரத்தினசிங்கம் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு இந் நிகழ்வைச் சிறப்பித்திருந்தனர்.

வரவேற்பு கூட விளக்கினை திரு திருமதி ஐயாத்துரை கிருஸ்ணமூர்த்தி ஏற்றிவைக்க கடவுள் வாழ்த்துடன்  சிவலிங்கம் சிவகுமார் நிகழ்வை ஆரம்பித்துவைக்க சிறப்பு விருந்தினர் இரத்தினசிங்கம் தம்பதியினர் மங்கள விளக்கேற்றினர். பாஸ்கரன் பானுகா, பாஸ்கரன் பாதுகா, சசிகுமார் சதுஜா குப்பிளான் கிராமிய கீதத்தை மிகவும் இனிமையாகப் பாடி குப்பிளான் செம்மண் நினைவுகளை ஒரு கணம் நினைவுக்கு கொண்டுவந்தனர். விடுதலைப்போரில் தமது இன்னுயிர்களை ஈர்ந்தவர்களுக்கு அகவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

வரவேற்புரையை திரு முத்துச்சாமி கணேசலிங்கம் நிகழ்த்த அதனைத் தொடர்ந்து குப்பிளான் கிராமத்தைச் சேர்ந்த அண்மையில் இறையடிசேர்ந்த மூன்று சமூக சேவையாளர்களும் கிராமப்பற்றாளர்களுமான அமரர் இராமநாதன் சிவசோதி, அமரர் கந்தையா செல்வகுமார், அமரர் பொன்னம்பலம் ஜெகநாதன் மூவர்களுக்கு அவர்களின் உறவுகள் விளக்கேற்றி நினைவு கூர்ந்தார்கள். அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களுக்கான மதிப்பளிப்பு இடம்பெற்றது.

பக்திப்பாடல்கள், பரத நாட்டியம், பாரதியார் பாடல் நடனம், வயலின், சிறுவர்களின் தமிழ் மொழி பேச்சு என பல்வேறு கலை நிகழ்வுகளுடன் எல்லாவற்றிற்கும் மகுடம் சேர்த்தாற் போல் குப்பிளான் கிராமத்தைச் சேர்ந்த மூத்த தலைமுறையைச் சேர்ந்த பெரியோர்கள் அரங்கிற்கழைக்கப்பட்டு பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கப்பட்டனர். கலை நிகழ்வுகள் அனைத்தும் குப்பிளானைச் சேர்ந்த மக்களின் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த குழந்தைகளாகவும்  இளையோர்களாகவும் இருந்தமை நிகழ்வுக்குச் சிறப்புச் சேர்த்திருந்தது.

குப்பிளான் குறித்து தனது நினைவுகளையும் அம்மண்ணின் சிறப்புகளையும் எமது தற்போதைய கிரமியப் பண்பாட்டு வாழ்நெறி குறித்தும் திருமதி சிவாஜினி ராஐகண்ணா அவர்கள் உரையாற்றியிருந்தார். குப்பிளான் குறித்து பேசுகையில் அவர், ஈரமான செம்மண்ணில் செழித்து வளர்ந்து நிற்கும் குப்பிளாய் எனும் செடியின் பெயரே காலவோட்டத்தில் மருவி குப்பிளான் என வழங்கலாயிற்று என குப்பிளான் குறித்து எழுதியுள்ள அறிஞரும் சிறந்த சமூக சேவையாளருமான கலாநிதி கணேசலிங்கம் எழுதியிருந்தமையை சுட்டிக்காட்டினார். குப்பிளான் கிராமத்தின் கிராமிய வாழ்வைக் குறிப்பிடுகையில்,

விவசாயத்தை தலையாய தொழிலாகக் கொண்டு விளங்கிய குப்பிளானில் பொழுது புலரும் முன்பே துலா மிதிப்பவரும் பட்டை பிடித்து நீர் பாய்ச்சுபவரும் பயிருக்கு நீர் கட்டுபவரும் துலாமிதிப்போரின் பாடல்களும் என காணற்கரிய காட்சிகளை விபரித்தார்.

மேலும் குறிப்பிடுகையில், இன்று சுவிற்சர்லாந்தில் வாழும் நாம் இந்நாட்டு பாரம்பரிய கிராமிய வாழ்வியல் முறைமை எவ்வாறு இன்றும் இம்மக்களாலும் அரசினாலும் பேணிக்காக்கப்படுகிறது என்பதை கண்கூடு காண்கின்றோம். பசுக்களும், சீசும், தோட்டங்களும் சுவிஸ் கிராமங்களின் தனிச்சிறப்பு. ஆனால் நாமோ எம்முடைய புலப்பெயர்வுடன் அனைத்தையும் இழந்து ஏதிலிகளானது மட்டுமின்றி எமது கிராமிய வாழ்வியல் நெறிகளையும் பேணத் தவறவிட்டுள்ளமை மிகவும் வருத்தத்துக்குரியதொன்று என தற்போதைய எமது புலம்பெயர் வாழ்நெறியுடன் ஒப்பிட்டு அழிந்து வரும் ஈழத்தமிழர்களது கிராமிய வாழ்நெறியை சுட்டிக்காட்டியிருந்தார்.

சிறப்பு விருந்தினராக வருகைதந்திருந்த முன்னாள் ஆசிரியரும் அதிபருமான திரு. இரத்தினசிங்கம் அவர்கள் தனது சிறப்புரையுடன் தற்போது சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் 98 அகவை கொண்ட குப்பிளான் மண்ணின் மூத்த குடிமகன் திரு கந்தையா கிருஸ்ணர் அவர்கள் தமது கைப்பட எழுதியனுப்பிருந்த விரிவான வாழ்த்துச் செய்தியை வாசித்தார்.

கந்தையா கிருஸ்ணர் அவர்களின் வாழ்த்துச் செய்தி இற்றைக்கு ஐந்து தசாப்தங்கள் பின்னோக்கிய குப்பிளான் கிராமத்தை அக்கிராம மக்களின் வாழ்க்கையை மிகவும் அழகாகவும் ஆழமாகவும் மனக் கண்முன்னே கொண்டுவந்தது. குப்பிளான் கிராமத்தின் ஐந்து தசாப்தங்களுக்கு முன்னிருந்த மக்களின் பண்பாட்டு வாழ் நெறி, சமூகக் கட்டமைப்புகள், கல்வி, அயல் ஊர்களுடனான உறவு என பல விடயங்களையும் சுவையாக எடுத்து விளம்பியிருந்தார். தனது 98 ஆவது அகவையிலும் குப்பிளான் மண் குறித்து மிகவும் துல்லியமாக வரைந்திருந்த அவருடைய உரை அனைவரையும் வியக்க வைத்ததுடன் ஒருகணம் அனைவரையும் காலச்சக்கரத்தில் பின்னோக்கி இழுத்துச்சென்றிருந்தது.

இந்நிகழ்வில் நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளும் அனைவரதும் கவனத்தையும் ஈர்த்திருந்ததுடன் அனைவரும் புத்தாண்டு மறுதினம் இரவு 11 மணி வரை நிகழ்வில் பெருமகிழ்வுடனும் உற்சாகத்துடனும் பங்குபற்றி தமது கிராமத்து நிகழ்வுகளை மிகவும் களிப்புடன் கொண்டாடி மகிந்திருந்தனர். இறுதியில் கலைநிகழ்வுளில் பங்குபற்றியோருக்கான பரிசளிப்பு நன்றியுரையுடன் செம்மண் நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.