குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியா வழங்கிய செம்மண் இரவு 2013 பற்றிய செய்திதொகுப்பு. updated 18-11-2013

குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியா நடாத்திய செம்மண் இரவு 16-11-2013 சனிக்கிழமையன்று கிழக்கு லண்டனில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இந்த நிகழ்வுக்கு வைத்திய கலாநிதி தம்பிராசா குணசுந்தரம் அவர்களும் அவரின் பாரியார் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன் கலை நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. திரு தம்பிநாதர் வரதராஜன் அவர்கள் சுவிஸ் நாட்டில் இருந்து வந்து இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மனதை கவர்ந்த பாடல்களை பாடி எல்லோரையும் பரவசபடுத்தினார். நிகழ்வுகள் மாலை 5.30 மணிக்கு என்று அறிவிக்கப்பட்ட போதிலும் தாமதமாகவே ஆரம்பமாகியது. இதற்கு பிரதான காரணம் எம்மவர்கள் என்றுமே நேரத்திற்கு வருவதில்லை என்பதாகும். பல நிகழ்ச்சிகள் இடம்பெற்றமையினால் நிகழ்வுகள் 11.30 மணிக்கே முடிவுற்றது குறிப்பிடத்தக்கது. திருமதி ரஜனி குணசுந்தரம் அவர்கள் மங்கல விழக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். பாடல்கள், நடனங்கள், பரத நாட்டியங்கள், பட்டி மன்றங்கள் எல்லோரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

செல்வி அஞ்சிதா ஜங்கரலிங்கம், திரு தம்பிநாதர் வரதராஜன், திரு சதானந்தன் கஜயனன் நிகழ்ச்சி தொகுப்பாளர்களாக செயல்பட்டு நிகழ்வுகளை சிறப்பாக கொண்டு சென்றனர். தலைமை உரையை திரு அருந்தவராஜா அவர்களும், சிறப்புரையை வைத்திய கலாநிதி தம்பிராசா குணசுந்தரம் அவர்களும், நன்றி உரையை திரு மோகனதாஸ் அவர்களும் நிகழ்த்தினார்கள். குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலய பிரதான மண்டப திறப்பு விழா மலர் உத்தியோகபூர்வமாக வெளியீடு செய்யப்பட்டது. இதன் சிறப்பு பிரதியை பிரதமவிருந்தினர் அவர்கள் பெற்றுக்கொள்ள மன்ற தலைவர் வெளியிட்டு வைத்தார்.

வருகை தந்திருந்த அனைவருக்கும் இராப் போசனம் வழங்கப்பட்டது. சிறந்த நிகழ்ச்சிகளை பார்த்தோம் என்ற மனநிறைவுடன் எல்லா நிகழ்வுகளும் நிறைவடைந்தன,