குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியா வழங்கிய செம்மண் இரவு நிகழ்வு 2011 பற்றிய செய்தி தொகுப்பு.


குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியா வழங்கிய செம்மண் இரவு நிகழ்வு கடந்த 18-12-2011 ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மேற்கு லண்டனில் உள்ள நோத்தோல் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வை காண பெருமளவு மக்கள் வருகை தந்திருந்தனர். மறுநாள் வேலை என்றும் பாராது உணர்வுள்ள மக்கள் கூட்டம் என்று நிரூபித்து காட்டினர். இந்த நிகழ்வை திரு திருநாவுக்கரசு விக்கினராஜா அவர்கள் தொகுத்து வழங்கினார். அவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பாணியே தனி தான். நிகழ்வை எவ்வித சோர்வுமின்றி கொண்டு செல்லக் கூடிய திறமை அவரிடம் உள்ளது அதை செய்தும் காட்டினார்.


இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக திரு திருமதி மகாலிங்கம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். திரு மகாலிங்கம் அவர்கள் இராசையா பரியாரியார் அவர்களின் மகனவார். வைத்தியர் இராசையா அவர்கள் இயற்கை மூலிகை மருத்துவத்தில் திறமை சாலி. அவர்கள் எமது கிராமத்தில் உள்ள ஏழை எளிய மக்களின் நோய்களை குறைந்த செலவோடு குணமாக்கி எமது மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்ற சிறந்த வைத்தியன். திரு மகாலிங்கம் அவர்கள் எமது நிதி சேகரிப்பின் போது என்றுமே இல்லை என்று சொல்லாமல் சிறிய தொகையாதல் வழங்குவார். திருமதி மகாலிங்கம் அவர்கள் மங்கள விழக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து 2 நிமிட மெளன அஞ்சலியோடு கலை நிகழ்வுகள் ஆரம்பமானது. முதல் நிகழ்ச்சியாக செல்வி அனுசியா அருந்தவராஜா அஜிதா அருந்தவராஜா அவர்களின் பரதநாட்டியம் இடம்பெற்றது.


அதனைத் தொடர்ந்து விக்கினேஸ்வரா மன்ற தலைவர் திரு வை.ஜங்கரலிங்கம் அவர்களின் தலைமை உரை இடம் பெற்றது. அவர் தனது உரையில் விக்கினேஸ்வரா மன்றம் தற்போது செய்யும் வேலைத் திட்டங்களையும் எதிர் காலத்தில் செய்யப்போகும் வேலைத்திட்டங்களையும் விளக்கினார். அண்மையில் நடைபெற்ற மன்ற நிர்வாக குழு கூட்டத்தில் குப்பிழான் விக்கினேஸ்வரா பாடசாலை மண்டபத்தை விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியா பொறுப்பெடுத்து செய்வது என்று தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்த முக்கியமான முடிவை பொது மக்கள் முன்னிலையில் உத்தியோர்வபூர்வமாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பாடல்கள், நாட்டியம், இசைக் கருவிகளால் இசை மீட்டல், கராட்டே போன்ற நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. அதனைத் தொடர்ந்து பிரதம விருந்தினராக கலந்து கொண்ட திரு மகாலிங்கம் அவர்கள் உரையாற்றினார். அவர் தனதுரையில் விக்கினேஸ்வரா மன்ற செயல்பாடுகளை பாராட்டினார். அதுமட்டுமன்றி பாடசாலை கட்டிடத்துக்கான நிதிசேகரிப்பு திட்டத்தையும் தனது பங்களிப்போடு ஆரம்பித்து வைத்தார்.இம்முறை விசேட நிகழ்ச்சியாக பட்டி மன்றம் இடம் பெற்றது. பட்டி மன்றத்தின் தலைப்பு நமது புதிய சந்ததி தமிழ் கலாச்சாரத்தை காப்பாற்றுவார்கள் என்று ஒரு பகுதியினரும் காப்பாற்ற மாட்டார்கள் என்று இன்னொரு பகுதியினரும் கடுமையான விவாதத்தில் ஈடுபட்டார்கள். பார்வையாளர்கள் எவ்வித சலனமுமின்றி விவாதத்தை இரசித்து செவிமடுத்தார்கள்.


மன்ற செயலாளர் திரு பா.உபேந்திரன் அவர்களால் நன்றி உரை நிகழ்த்தப்பட்து. அவர் தனது உரையில் உதவும் கரங்கள் அமைப்பின் செயல்பாடுகள் மற்றும் பாடசாலை கட்டிடத்தை விரைவில் கட்டி முடிக்க வேண்டிய காரணத்தை தெளிவுபடுத்தினார். அதோடு இப்படியான செயல்பாடுகளுக்கு நிதி உதவி வழங்கிய சுவிஸ் வாழ் எமது உறவுகளுக்கு நன்றியை தெரிவித்து கொண்டார். திரு உபேந்திரன் அவர்கள் கடந்த வருடம் எமது கிராமத்துக்கு நேரடியாக சென்று போரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்கள் படும் அவலங்களை எமக்கு தெரியப்படுத்தினார். இரவு 10.30 மணியளவில் நிகழ்வுகள் இனிதே நிவைடைந்தது. ஒவ்வொரு நிகழ்ச்சியும் மிகவும் தரம் வாய்ந்ததாகவும் இரசிக்க கூடியதாகவும் இருந்தது. நிகழ்ச்சிகளில் பங்கு பற்றிய எமது கிராமத்து இளம் சந்ததியினர் தமது திறமைகளை நிரூபித்து காட்டினார்கள் அதற்காக கடுமையாக உழைத்தார்கள்.ஒவ்வொரு கிராமத்து உறவும் நிட்சயமாக இப்படியான நிகழ்ச்சிகளில் பங்கு பற்றுவதன் மூலம் நாம் ஒன்றுபட்ட மக்கள் கூட்டம் என்று மற்றவர்களுக்கு நிரூபித்து காட்ட முடியும். அதோடு உங்கள் பிள்ளைகளை சிறிய வயது முதல் இப்படியான நிகழ்வுகளுக்கு அழைத்து செல்வதன் மூலம் கலைகளில் ஆர்வத்தை உருவாக்க முடியும். கலைகளால் ஒரு மனிதன் தீய வழியில் போவதை தடுக்கும் சக்தி உள்ளது.இன்று எம்மவருடையே உள்ள பிரச்சினைகளில் ஒன்று வளர்ந்த இளம் பிள்ளைகள் தாய் தந்தையோடு சேர்ந்து போவதை கவுர குறைவாக நினைக்கிறார்கள். இதற்கு பிள்ளைகளில் குறை சொல்வதில் எந்தவொரு பிரயோசனமும் இல்லை. பெற்றோர்களை தாழ்வு நிலைக்கு கொண்டு வந்த நிலைக்கு பெற்றோர்கள் தான் காரணம். ஏனென்றால் சிறுவயது முதல் வேலை பழு காரணமாக பிள்ளைகளை சமூக நிகழ்வுகளுக்கு கூட்டிச் செல்வதில்லை. வயது வந்ததும் ஒவ்வொரு பெற்றோரும் செய்ய நினைக்கும் போது அது சாத்தியமில்லாமல் போகுது. சிறு வயது முதல் எமது சமுகத்தோடு விலகி இருந்தவர்களை வயதாகும் போது இணைப்பது மிக கடினம்.ஆகவே மற்றவர்கள் விட்ட தவறை நீங்கள் விடாதீர்கள். இனிவரும் நிகழ்வுகளில் அனைவரும் பங்கு பற்றி நமது இளம் சந்ததியினர் ஆரோக்கியமான சமுதாயமாக உருவாக இடமளியுங்கள். காலம் சென்ற ஞானம் எதற்கும் உதவாது.
 

படப்பிடிப்பு - பொ.கணேசலிங்கம்