குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் லண்டன் நடாத்திய செம்மண் இரவு 2011 தொகுப்பு.
குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் நடாத்திய செம்மண் இரவு கடந்த 12-03-2011 சனிக்கிழமை இனிதே நடைபெற்று முடிந்தது. மாலை 7.00 மணிக்கு இந்நிகழ்வானது ஆரம்பமானது. திரு.திருநாவுக்கரசு விக்கினராஜா அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மங்கள விளக்கை பிரதம விருந்தினர்களான திரு திருமதி இரட்ணபாலன் அவர்கள் ஏற்றிவைத்தார்கள். அதனைத்தொடர்ந்து போரில் உயிர் நீத்தவர்களுக்காக
2 நிமிடம் மெளன அஞ்சலி நிகழ்த்தப்பட்டது. அதன் பின்னர் நிகழ்வுகள் ஆரம்பமானது. செல்வி அஜிதா அருந்தவராஜா அவர்கள் கடவுள் வணக்க பாடலுக்கு நாட்டியம் ஆடினார். தொடர்ந்து வரவேற்புரையை
செல்வி அனுசியா அருந்தவராஜா அவர்கள் நிகழ்த்தினார். செல்வி அனுசியா, செல்வி அஜிதா சகோதரிகளின் பரதநாட்டியம் இடம்பெற்றது. அதன் பின்னர் செல்வன் நிதேஸ் மோகனதாஸ் அவர்கள் வெண்மேகம் பெண்ணாக உருவானதோ என்ற பாடலை பாடினார்.


அதனைத் தொடர்ந்து அபிரா சிவலிங்கம், கார்த்திகா சிவலிங்கம், ராகுலன் சிவலிங்கம் சகோதரர்களால் ஒரு சிறிய இன்னிசை நிகழ்வு நிகழ்த்தப்பட்டது. பின்னர் சாருகன் கணேசலிங்கம், திலீபன் கணேசலிங்கம், கரீசன் ரகு,மதுசன் ரகு அவர்களின் காட்டா நிகழ்வு இடம்பெற்றது. அதனை தொடர்ந்து பிரதம விருந்தினர் திரு.இரத்தினபாலன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். அவர் தனது சிறப்புரையில் சகலரும் தமது தனிப்பட்ட பேதங்களை மறந்து இன்றைய காலகட்டத்தில் ஒன்றாக செயல்படுவதன் அவசியத்தை வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து கயிதா சந்திரகுமார் குழுவினரின் திரை இசை நடன நிகழ்ச்சி இடம்பெற்றது. பின்னர் திரு கணேஸ்குமார் சிவபாதம் அவர்களால் குப்பிழான் மக்களின் கலையும் வாழ்வும் என்ற தலைப்பில் சிற்றுரை நிகழ்த்தப்பட்டது. தர்சன் கேதீஸ்வரன் அவர்களால் வயலின் வாசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ராகித் சந்திரகுமார் , நிலேஸ் சச்சிதானந்தன், நிதேஸ் சச்சிதானந்தன் அவர்களால் திரை இசை நடன நிகழ்ச்சி ஒன்று நடாத்தப்பட்டது


தொடர்ந்து திரு நல்லதம்பி மோகனதாஸ் (குப்பிழான் விக்கினேஸ்வரா மன்ற தலைவர்) அவர்கள் விசேட உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் மன்றத்தின் எதிர்கால செயல்பாடுகள் பற்றி விரிவாக விளக்கினார். அதனைத் தொடர்ந்து அன்ஜிதா ஜங்கரலிங்கம், ஆர்த்திகா ராஜ்குமார் அவர்களால் தாயக மக்களின் அவல நிலை தொடர்பான பாடலுக்கு நடனம் ஆடப்பட்டது. பின்னர் ஜீவா சஜீவன், சுஜதா சஜிவன் அவர்களின் திரையிசை நடனம் இடம்பெற்றது. பின்னர் supersonic இன்னிசை மழையில் திரு.இரட்ணபாலன், திருமதி பபி சஜீவன் அவர்களால் பாடல்கள் பாடப்பட்டன. எமது கிராமத்தில் இயங்கும் அமைப்பான குப்பிழான் விக்கினேஸ்வரா கிராம அபிவிருத்தி மன்றம் சார்பில் இந்த நிகழ்வை வாழ்த்தி செய்தி ஒன்று அனுப்பப்பட்டது. இந்த செய்தியை சபையோர் முன்னிலையில் திரு.விக்கினராஜா அவர்கள் எல்லோருக்கும் தெரிவித்தார். திரு ஜங்கரலிங்கம் (குப்பிளான் விக்கினேஸ்வரா மன்ற பொருளாளர்) அவர்களால் நன்றி உரை நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து supersonic இன்னிசை நிகழ்வும், பார்வையாளர் பங்கு பற்றிய ஆடல் நிகழ்வும் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு மண்டபம் நிறைந்த மக்கள் கலந்து கொண்டு எமது இளம் சிறார்களின் கலை நிகழ்வுகளை கண்டு மகிழ்ந்தனர். சகல கலை நிகழ்வுகளும் மிகவும் தரம் வாய்ந்தவையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. நிகழ்வுக்கு வருகை தந்திருந்த எல்லோரிடமும் ஒரு ஆச்சரியம் காணக்கூடியதாக இருந்தது. எமது இளம் சிறார்களிடம் இவ்வளவு திறமைகளா? இவர்கள் ஏன் இந்நிகழ்வுகளை முன்பு நடத்தவில்லை? அது உண்மை தான் 8 வருடங்களுக்கு பிறகு நடைபெறும் முதல் நிகழ்ச்சி இது. பல காலமாக இப்படியான நிகழ்வுகளை நடத்துவதற்கு முயலாதமைக்கு முக்கிய காரணம் இங்கு வாழும் எமது கிராம மக்கள் இப்படியான நிகழ்வுகளுக்கு வருவார்களோ என்ற சந்தேகம் தான். ஆனாலும் ஊர் மக்களின் நிகழ்வில் தாமும் பங்கு பற்றி எமது ஒற்றுமையை காட்ட வேண்டும் என்று பல மைல்கள் தூரம் தாண்டி வந்து பங்கு பற்றியது மிகச்சிறந்த அம்சமாகும். எமக்குள் தனிப்பட்ட முறையில் ஆயிரம் பிரச்சினைகள், கருத்து வேற்றுமை இருக்கலாம் ஆனால் பொது நிகழ்வுகளில் எல்லோரும் சகல வேற்றுமைகளையும் களைந்து ஒன்று சேருவது அவசியமாகும். எமது உறவுகள் பெருமளவு பங்கு பற்றியது எமக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. இனிவரும் காலங்களில் மிகவும் சிறப்பாகவும், இந்நிகழ்வுக்கு வரமுடியாமல் போன எமது மற்றைய உறவுகள் பங்கு பற்றுவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு நிட்சயம் உண்டு.


நிகழ்வை தொகுத்து வழங்கிய திரு.தி.விக்கினராஜா அவர்கள் தமது தகப்பனார் போல் எமது சகல நிகழ்வுகளிலும் பங்கு பற்றி அவரது இனிய குரலால் எல்லோரையும் வசீகரம் செய்வார். அவரது தகப்பனார் திரு.திருநாவுக்கரசு ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் பாராது தானே முன்னின்று சகல நிகழ்வுகளிலும் பங்கு கொள்வார். அவர் அன்னையோ சிறந்த பேச்சாளர். இந்நிகழ்வுக்கு பிரதமவிருந்தினராக வருகை தந்திருந்த திரு.இரட்ணபாலன் எமது மன்றத்தின் ஒரு அச்சாணி. அவர் எமது மன்றத்திற்கு வேண்டிய பொருளாதார உதவிகளையும் செய்யும் ஒரு வள்ளல். சிறப்புரை ஆற்றிய திரு.கணேஸ்குமார் எமது மண்ணில் உதித்த சிறந்த பேச்சாளார். அவர் இந்த இளம் வயதிலேயே பல நூல்களை எழுதி வெளியுட்டும் உள்ளார். அவர் சைவத்துக்கும், தமிழுக்கும் ஆற்றும் உதவி மிகவும் மகத்தானது.


இந்த நிகழ்வுகளை கண்டு களித்த மற்றவர்களும் தமது பிள்ளைகள் அடுத்த நிகழ்ச்சிகளில் நிட்சயம் பங்கு பற்றுவார்கள் என்ற ஆர்வத்தை வெளிப்படுத்தினார்கள். இந்நிகழ்வுகள் மூலம் தங்கள் பிள்ளைகளின் கலைத்திறனை வெளிக்கொண்டு அவர்களை மேலும் ஊக்குவிப்பது மட்டுமல்லாது, எமது தமிழ் கலைகள் அழிந்து விடாமல் அடுத்த சந்ததிக்கும் எடுத்து செல்ல வாய்ப்பாக அமையும். மெல்ல மெல்ல எமது இளம் சமுதாயம் மேற்கத்தைய நாகரிகத்தில் உள்நுளைந்து போதைப் பழக்கங்களிலும், திருமண முறிவுகள் போன்ற சமுதாயசீர்கேடுகளில் ஈடுபட முனையும் இவ்வேளையில் கலை, கலாச்சாரம், மொழி போன்றவையே இந்த மோசமான நிலைகளில் இருந்து வெளிவர ஓரே வழி ஆகும். ஒவ்வொருவரும் உங்கள் பிள்ளைகளுக்கு சேர்த்து வைக்கவேண்டிய சொத்தாக ஒழுக்கமே சிறந்ததாகும்.

இந்நிகழ்வின் முழு ஒளிப்பதிவு விரைவில் வெளிவரும் என்பதை உங்களுக்கு அறியத்தருகிறோம்.

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player