லண்டன் மாநகரில் கோலகலமாக நடைபெற்ற குப்பிழான் கிராம உதய பொன்விழா.. updated 02-12-2014


குப்பிழான் கிராம உதய பொன்விழா லண்டன் மாநகரில் மிகவும் சிறப்பாகவும் விமர்சையாகவும் 29-11-2014 சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. பிரித்தானியாவின் சகல பகுதிகளிலிருந்தும், ஜரோப்பிய நாடுகளிலிருந்தும் பெருமளவு மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தற்போதைய காலகட்டத்தில் பொது நிகழ்வுகளில் பெருமளவு மக்கள் கலந்துகொள்வது மிகவும் அரிதாக உள்ளது. ஆனாலும் இந்த பொன்விழா நிகழ்வில் பெருமளவு மக்கள் கலந்துகொண்டது அவர்களது ஊர் பற்றையும் ஒற்றுமையையும் எடுத்துக் காட்டியது. சில நேரங்களில் மண்டபத்தில் இடநெருக்கடியும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. பெருமளவு எமது கிராம உறவுகள் கலந்து கொண்டது ஊரில் இருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தி எமது ஊரின் கடந்த கால நினைவலைகள் மனதில் மெல்ல வருடிச் சென்றது. குறிப்பிட்ட சிலரை பல வருடங்களின் பின்னர் சந்திக்கும் அரிய சந்தர்ப்பத்தை இந்த நிகழ்வு ஏற்படுத்தியது.இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக திரு முத்தையா தர்மபாலன் சுவிஸ் நாட்டிலிருந்து வந்து கலந்துகொண்டு சிறப்பித்தார். சிறப்பு விருந்தினர்களாக திரு முத்தையா இரட்ணபாலன்(வழக்கறிஞர்), திரு முருகானந்தன்(சமூக சேவகர்), திருமதி சதானந்தரூபி பரம்(மருத்துவர்), திரு கந்தையா கேதீஸ்வரன் (ஆசிரியர்), திரு வைத்திலிங்கம் ஜங்கரலிங்கம் (முன்னாள் மன்ற தலைவர்), திரு திருநாவுக்கரசு விக்கினராஜா (BBC தமிழோசை), திரு சிவபாதம் கணேஸ்குமார்( இந்து இளைஞர் பேரவைத் தலைவர்), திரு குணம்(மருத்துவர்) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


அவைத் தலைவர்களாகவும் நிகழ்ச்சி அறிவிப்பாளர்களாகவும் செயல்பட்ட திரு திருநாவுக்கரசு விக்கினராஜா, திரு தம்பிநாதர் வரதராஜன்(சுவிஸ்) மற்றும் திரு சாதனந்தன் கயாணனன் அவர்கள் விழாவை மிகவும் அழகாகவும், சிறப்பாகவும் வழி நடாத்தியிருந்தனர். ஆரம்ப நிகழ்வாக பேச்சுப் போட்டியின் இறுதிச்சுற்று போட்டி நடாத்தப்பட்டன. மூன்று பேரைக் கொண்ட நடுவர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று பேர் தெரிவு செய்யப்பட்டனர். முதல் பரிசாக தங்க பதக்கம் பதிக்கப்பட்ட கேடயம் வழங்கப்பட்டது. சிறுவர்களின் பேச்சாற்றலைக் கண்டு அனைவரும் பூரித்து போயினர். நடுவர்களில் ஒருவர் குறிப்பிடும் போது யாழ்ப்பாணத்தில் இருப்பது போன்று உணர்கிறேன் என்றார். சிறுவயதிலிருந்து ஆங்கில மொழியில் கல்வி பயிலும் சிறுவர்கள் சரியான உச்சரிப்போடு தமிழில் உரையாற்றியது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.


நிகழ்வுகள் கொடியேற்றலுடன் ஆரம்பமாகியது. திரு தர்மபாலன் அவர்கள் குப்பிழான் கிராம கொடியை ஏற்ற திருமதி தயாழினி மோகனராசா மற்றும் செல்வி அஜித்தா அருந்தவராஜா கிராமிய கீதத்தை இசைத்தனர். அதனைத் தொடர்ந்து குப்பிழான் கிராம உதய பொன்விழா திரை நீக்கம் செய்யப்பட்டு வரவேற்பு நடனம் இடம்பெற்றது.


மன்றத்தின் தலைவர் திரு சுந்தரலிங்கம் அருந்தவராஜா தலைமை உரையை நிகழ்த்தினார். மன்ற செயலாளர் திரு நல்லதம்பி மோகனதாஸ் தனதுரையில் " இன்று நாம் எமது கிராம உதய பொன்விழாவை கொண்டாடுகின்றோம். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் எமது கிராமத்தை தனிக்கிராமமாக உருவாகுவதற்கு பாடுபட்ட அந்த பெருமக்களையும், ஊரின் வளர்ச்சியில் தம்மை அர்ப்பணித்தவர்களையும் நினைவு கூரவேண்டிய தருணம் இது. தனிக்கிராமாக உருவாக எவ்வளவு போராடி இருப்பார்கள் என்பதை உணரமுடிகின்றது. நாம் இன்று தலைநிமிர்ந்து குப்பிழான் என்று சொல்லுகிறோமே இது அவர்கள் அரும்பாடுபட்டு எங்களுக்கு கொடுத்த பரிசு. இதை பாதுகாப்பதும், பாராமரிப்பதும் எமது கடமையாகும். இந்த நன்நாளில் பொன்விழா சிறப்பு மலர் ஒன்றை எமது குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றத்தின் சார்பில் வெளியிடுகின்றோம். இந்த மலரை தனிக்கிராமாக உருவாக பாடுபட்டவர்களுக்கு காணிக்கையாக்குகின்றோம்". அதனைத் தொடர்ந்து திரு மோகனதாஸ் அவர்கள் பொன்விழா மலரை வெளியிட திரு தர்மபாலன் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.


திரு இரத்தினபாலன் அவர்களால் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது. செம்மண் சுடர் விருதுகள் பெறும் பெருமக்களின் பெயர்கள் திரு முருகானந்தம் அவர்களால் மேடையில் வைத்து வாசிக்கப்பட்டது. திரு சின்னத்துரை சிவகுமாரினால் பொன்விழா கவிதை வாசிக்கப்பட்டது. செல்வி சங்கிதா பாக்கியநாதன் அவர்களால் பொன்விழா சிற்றுரை நிகழ்த்தப்பட்டது. கௌரவ விருந்தினர்கள் மற்றும் பேச்சுப் போட்டி நடுவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.


தொடர்ந்து மற்றைய கலைநிகழ்வுகள் இடம்பெற்றது. எல்லா நிகழ்ச்சிகளும் சிறப்பாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நாட்டில் பிறந்து வளர்ந்த இளையோர்களுக்கும் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வந்த பெரியோர்களுக்கும் இடையில் வாதப்பிரதிவாதங்களுடன் கருத்தரங்கம் திரு கணேஸ்குமார் தலைமையில் இடம்பெற்றது. திரு இராமநாதன் சச்சிதானந்தன் அவர்களின் நன்றி உரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.

 

இந்த இனிய பொன்னாளில் விக்கினேஸ்வரா மன்றத்தினரின் ஆதரவில் குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கற்றலுக்கு தேவையான உபகரணங்கள் அன்பளிப்பு செய்யும் நிகழ்வும் இடம்பெற்றது.
புலம்பெயர் தமிழ் மாணவர்களின் தமிழ் மொழி சார்ந்த ஆற்றலைப் பெருக்குவதற்கும் ஊரின் கல்வி வளர்ச்சியிலும் குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் தொடர்ந்து தமது பங்களிப்பை செலுத்தி வருகின்றது. ஏற்கனவே விக்கினேஸ்வரா மன்றம் பல லட்சம் செலவில் பாடசாலையின் பிரதான மண்டபத்தை அமைத்து கொடுத்தது குறிப்பிடத்தக்கது.