குப்பிளானில் ஏழாலையைச் சேர்ந்த காடையர் குழு அட்டகாசம்: வேலை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த இளம் குடும்பஸ்தரைத் தாக்கியதில் காதுச் சவ்வு வெடித்து வைத்தியசாலையில் அனுமதி. updated 23-03-2015

 


ஏழாலையைச் சேர்ந்த காடையர் குழுவொன்று வேலை முடித்து வீடு நோக்கி வந்து கொண்டிருந்த இளம் குடும்பஸ்தரை இன்று திங்கட்கிழமை குப்பிளான் பகுதியில் வைத்து இடைமறித்துத் தாக்கியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,நெல்லியடியைச் சொந்த இடமாகக் கொண்ட குறித்த இளைஞர் அண்மையில் குப்பிளான் வடக்கு சமாதி கோயிலடியைச் சேர்ந்த பெண்ணொருவரைத் திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். இவர் நெல்லியடியில் சைக்கிள் கடை திருத்துனராகக் கடமையாற்றி வரும் நிலையில் தினமும் அதிகாலை 05.30 மணிக்கு நெல்லியடிக்குச் சைக்கிளில் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இன்றைய தினமும் வழமை போன்று தனது வேலைகளை முடித்து விட்டுச் சைக்கிளில் வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த போது மாலை 06 மணியளவில் குப்பிளான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கருகில் இடை மறித்த ஏழாலையைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட காடையர் குழு பலமாகத் தாக்கியதில் இளைஞரின் காதுச் சவ்வு வெடித்துச் சம்பவ இடத்திலேயே அவர் மயங்கிச் சரிந்தார். இதனையடுத்து இளைஞரைத் தாக்கிய குழு அவ்விடத்தை விட்டுத் தப்பிச் சென்றது. குடும்பஸ்தரைத் தாக்கியவர்கள் மதுபோதையிலிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.தற்செயலாக அவ்விடத்திற்கு வந்த ஆட்டோ செலுத்துனரொருவர் குறித்த இளைஞரை ஏற்றிச் சென்றதுடன்,மனைவிக்கும் தெரியப்படுத்திய பின் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதித்தனர். இதனையடுத்து அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக உடனடியாக அம்புலன்ஸ் மூலம் யாழ்,போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


குறித்த இளைஞர் அமைதியானவராக, யாருடனும் முரண்படாத ஒருவராகக் காணப்படும் நிலையில் அவரைத் தாக்கியதற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.


இச் சம்பவத்தில் குப்பிளான் சமாதி கோயிலடியில் வசித்து வரும் சிவசரணம் அருட்செல்வன்(வயது-36) என்ற இளம் குடும்பஸ்தரே படுகாயமடைந்தவராவார்.


இளைஞரைத் தாக்கிய குழு குப்பிளானிலுள்ள ஒரு சில இளைஞர்களுடன் சேர்ந்து தினம் தோறும் மாலை வேளையில் குடித்து விட்டு மேற்படி பகுதியிலுள்ள வீதியில் தினமும் நின்று போக்குவரத்துக்கு இடைஞ்சலை ஏற்படுத்துவதுடன், வீதியால் செல்லும் பெண்களுடனும் சேஷ்டை புரிவதாகவும் அப் பகுதிப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறித்த இளைஞர்களுக்கெதிராக ஏற்கனவே சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பல்வேறு முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதும் பொலிஸார் பாராமுகமாகச் செயற்படுவதுடன்,அந்த இளைஞர் குழுவுக்குச் சார்பாகச் செயற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பொலிஸார் தம் கடமையைச் சரிவரச் செய்ய முன்வராவிட்டால் நாம் யாரிடம் தான் சென்று முறையிடுவது?எனவும் பொதுமக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.


செய்தி:-ரவி.