விவாசாயிகளுக்கு கிடைச்ச அமோக விளைச்சல், குப்பிழானுக்கு கிடைத்திருக்கும் இரண்டு அபிவிருத்தி திட்டங்கள் போன்ற செய்திகளுடன் விரிகின்றது இந்த செய்தி தொகுப்பு. updated 09-04-2015

 


புதிய ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கிராமிய அபிவிருத்திக்கென்று குறிப்பிட்டளவு நிதிகள் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் குப்பிழான் கிராமத்திற்கு இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன. இந்த இரண்டு கிராம சேவகர் பிரிவுகளுக்கும் தலா 10 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 10 லட்சத்தை பயன்படுத்தி கிராம மக்கள் விரும்பும் திட்டத்தை நிறைவேற்றலாம். அதற்காக குப்பிழான் வடக்குக்கு உட்பட்ட பகுதியில் என்ன வேலைத் திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பான பொதுக் கூட்டம் இடம்பெற்றது. பல்வேறு திட்டங்கள் ஒவ்வொரு அமைப்பினராலும் முன் வைக்கப்பட்டது. இறுதியில் எமது கிராமத்திற்கென்று ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. எமது கிராமத்திற்கு ஆரம்ப சுகாதார நிலையம் அமைய வேண்டும் என்ற முயற்சி நீண்டகாலத்திற்கு முதலே மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் அதற்கான இடத்தை பெற முடியாமல் போனதால் அந்த எண்ணம் நிறைவேறவில்லை. தற்போது காணியை வழங்க ஒருவர் முன்வந்துள்ளார். இதன் மூலம் நீண்ட நாள் கனவு இன்று நனவாகும் காலம் நெருங்குகின்றது. சமாதி கோவில் பகுதியில் தான் இந்த இடம் கிடைத்துள்ளது.


குப்பிழான் தெற்கு பகுதிக்கு கிடைத்த நிதியில் ஒரு பகுதி இடைநடுவில் நிறுத்தப்பட்டிருக்கும் விவசாய கட்டிடத்தை அமைப்பதற்கும், மிகுதிப் பகுதியை கொண்டு வீரமனைப் பகுதியில் முன்பள்ளி அமைக்கவும் முடிவெடுக்கப்பட்டது. இந்த முன்பள்ளியில் அறநெறிபாடசாலை நடாத்தவும் யோசனை முன்வைக்கப்பட்டது. ஏற்கனவே சிவபூமி ஆச்சிரமம் மற்றும் சொக்கர் வளவு ஆலயத்தில் அறநெறி வகுப்புக்கள் நடாத்தப்பட்டுக் கொண்டு வருகின்றன. இந்த வகுப்புக்களுக்கு தமது பிள்ளைகளை அனுப்புவதற்கு பெற்றோர்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எல்லோரும் ஒன்றிணைந்து ஒரு இடத்தில் அற நெறி வகுப்புக்களை நடாத்த நடவடிக்கை எடுப்பது தற்போதைய கால கட்டத்தில் பலனுள்ளதாக அமையும்.இந்த ஆண்டு சிறப்பான காலநிலை நிலவியதால் விவசாயிகள் சிறந்த அறுவடையை பெற்றார்கள். குப்பிழான் கிராம விசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


குப்பிழான் கிராமத்தில் உள்ள கிணறுகளில் ஓயில் கழிவுகள் காணப்பட்டமையால் பிரதேச சபையினால் வடக்கு தெற்கு மேற்குப் பகுதிகளில் தாங்கிகள் வைக்கப்பட்டு நாள் தோறும் பௌசர்கள் மூலம் நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

 

குப்பிழான் வடக்கு வீதி குரும்பசிட்டி அம்மன் வரை புனரமைக்கப்பட்டுள்ளது.

கற்கரை கற்பக விநாயகர் ஆலயதின் கடந்த ஆண்டு மகோற்சவம் முடிவுற்றதும் வசந்த மண்டப திருப்பணிகள் ஆரம்பமாகி முடிவுறும் தறுவாயில் உள்ளது. ஆனாலும் நிதிப் பிரச்சனை காரணமாக இன்னும் பாலஸ்தானம் செய்யப்பட்டு மற்றைய திருப்பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. வருகின்ற 25ம் திகதி புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்படவுள்ளது. புதிய நிர்வாகத்தை பொறுப்பெடுப்பவர்கள் பாலஸ்தானம் செய்து மற்றைய திருப்பணிகளை முடிக்க வேண்டும் என்பது ஆலய அடியார்களின் எதிர்பார்ப்பாகும். நீண்ட காலம் கும்பாபிசேகம் செய்யப்படாமையினால் கோயிலில் பல குழப்பங்கள் ஏற்படுவதாக அடியார்கள் நம்புகின்றார்கள். ஆகவே தொடர்ந்து திருப்பணிகளை செய்து கும்பாபிசேகத்தை நடாத்துமாறு அடியார்கள் வேண்டி நிற்கின்றார்கள்.

தகவல்கள், படங்கள் - திரிஷாந்தன், சசிதரன், மயூ (G.S)