தமது சமூகத்தை நேசித்த சமூக சேவகர் திரு சின்னத்துரை நடராசா அவர்களின் வாழ்க்கை குறிப்பு. updated 26-11-2011


குரும்பசிட்டியை பிறப்பிடமாகவும், உரும்பிராயை வதிவிடமாகவும் கொண்ட திரு சின்னத்துரை நடராசா (ஆசிரியர்) அவர்கள் 21-11-2011 திங்கட்கிழமை அன்று காலமானர். அவர்களின் மறைவு ஆனது தமிழ் சமுதாயத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு ஆகும். அன்னார் சிறந்த விளையாட்டு வீரராகவும், ஆசிரியராகவும், அதிபராகவும், தினக்குரல் பத்திரிகையின் யாழ் பதிப்பு நிர்வாகியாகவும், மிகச் சிறந்த சமூக சேவையாளருமாகவும், சிறந்த எழுத்தாளருமாகவும் விளங்கினார். கருணைப் பாலம் என்ற தலைப்பில் 80 க்கு மேற்பட்ட தொடர் கட்டுரைகளை தினக்குரல் நாளேட்டில் எழுதினார். இதன் மூலம் கிடைத்த ஒரு கோடி நிதியை போரினால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களின் நல்வாழ்வுக்கு வழங்கினார். இடதுசாரிக் கொள்கை உடைய அவர்கள் இளமை காலம் தொட்டு தனது கிராம மக்களின் கல்வி, சமூக வளர்ச்சிக்கு தன்னாலான உதவிகளை செய்து வந்தார். வசாவிளான் மகாவித்தியாலயத்தில் அதிபராக கடமை ஆற்றிய காலத்தில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்தார்.


இந்த பாடசாலை போரின் காரணமாக பல இடப்பெயர்வுகளை சந்தித்தது. ஒவ்வொரு இடத்திலும் மிக வசதி குறைந்த சிறிய கட்டிடங்களிலேயே பாடசாலையை நடாத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஆனாலும் மாணவர்களுக்கு தரம் குறையாமல் கல்வி கிடைப்பதற்கு மிகவும் கடுமையாக உழைத்தார். பொதுத் தேர்விலும் மாணவர்கள் சிறந்த பெறுபேறை பெற்றனர். இடம் பெயர்ந்த வலி வடக்கு கிராம மக்களின் உரிமைகளுக்காக அயராது குரல் கொடுத்து வந்தார். திரு நடராசா அவர்கள் குப்பிழான் மக்களால் நன்று அறியப்பட்ட ஒரு நபர். 70 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து 1985 ஆம் ஆண்டு வரை அவர்களால் குரும்பசிட்டி பகுதியில் தனியார் கல்வி நிலையம் மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டது. குப்பிழான் பகுதியில் இருந்தும் கணிசமான அளவு மாணவர்கள் இந்த கல்வி நிலையத்தில் கல்வி பயின்று வந்தனர். திரு நடராசா ஆசிரியர் சமூகவியல் பாடத்தை மாணவர்களுக்கு கற்பித்தார். அந்த பாடத்தை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் போது syllabalsக்குள் மட்டும் நின்று விடாது அதற்கு அப்பாலும் சென்று சிறந்த கல்வியை போதிப்பார். சிறு வயதில் நாங்கள் செய்யும் குறும்புகள், நளினங்கள் அதிகம். ஆனாலும் என்றுமே கோவப்பட்டதில்லை. சிறிய புன்னுறுவலோடு எல்லாவற்றையும் மன்னிக்கும் குணம் அவரிடம் இருந்தது. நான் பெரிய ஆசிரியர் என்ற கர்வம் அவரிம் இருந்ததில்லை. நாம் சிறுவர்களாய் இருந்தும் நாம் சொல்லும் கருத்துக்களை செவிமடுப்பார்.


சரியான விடயங்களுக்கு எப்போதும் அவரின் ஆதரவு உண்டு. அதற்கு ஒரு உதாரணம் நான் யாழ் இந்துக் கல்லூரியில் படிக்கும் போது 1989 ஆண்டு காலப்பகுதியில் ஆயுதக் குழுவால் எமது பாடசாலை ஆசிரியர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எமது மாணவர்களால் பகிஸ்கரிப்பு போராட்டம் நடாத்தப்பட்டது. குறிப்பிட்ட மாணவர்கள் சிலர் சேர்ந்து ஒவ்வொரு பாடசாலையாக சென்று ஆதரவு கேட்டோம். அந்த வகையில் நான் மட்டும் வசாவிளான் பாடசாலைக்கு சென்று திரு நடராசா அதிபரிடம் சொன்னேன் சேர் நாங்கள் காலவரையற்ற பாடசாலை புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளோம் நீங்கள் எப்படி பாடசாலை நடத்தலாம் என்று. அதற்கு அவர் சொன்ன பதில் தம்பி உங்கள் போராட்டம் நியாமானது, ஆனால் நான் அரசாங்க ஊழியன் என்னால் மாணவர்களை வீட்டுக்கு அனுப்ப முடியாது. நீங்கள் நேரடியாக மாணவர்களிடம் சென்று இதை கூறுங்கள். நான் பின்னால் நின்று ஆதரவு தருவேன் என்றார். இப்படியே அவரது தனிப்பட்ட குணவியல்புகளை கூறிக்கொண்டு போகலாம்.


எமது கிராம மக்களின் குறிப்பிட்டளவு மாணவர்கள் அவரிடம் கல்வி பயின்றிருக்கிறார்கள். சுருங்க சொல்லப் போனால் எமது கிராம கல்வி வளாச்சிக்கு அவரும் ஒரு காரணம். இறுதியாக அவர் கடும் புற்று நோயால் பாதிக்கப்பட்டு, வைத்தியர்களால் அவர் இறக்கும் காலமும் கொடுக்கப்பட்ட போதிலும் அவர் துவண்டு விடவில்லை. அவர் தனது இறுதிக் கணங்களிலும் தாம் பிறந்த மண்ணாம் குரும்பசிட்டி மக்களின் மீள் குடியேற்றத்துக்கும், வன்னி மக்களின் புனர்வாழ்வுக்கும் அயராது உழைத்தார். இப்படியான உத்தமர்கள் நம்மண்ணில் இருப்பதனால் தான் எமது சமுதாயம் இன்றும் அழியால் இருக்கிறது.

அன்னாரின் ஆத்ம சாந்தி அடைய நாம் எல்லோரும் பிரார்த்திப்போமாக.

எழுத்துருவாக்கம் ந.மோகனதாஸ்


பூச்சியத்துக்குள் இராச்சியம் அமைத்த சேவையாளன்!

குரும்பையூர் பெற்றெடுத்த குணம் குன்றா
குவலயம் போற்றும்
வசாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தின்
உயர் சொத்து
எம்மை விட்டு பிரிந்த செய்தி கேட்டு
ஏங்கித் தவிக்கிறது
எம் உள்ளங்கள்...

நிமிர்ந்த நடை
நேர்கொண்ட பார்வை
ஆக்கம், ஆளுமை, அன்பு, அறிவுடைமை
அத்தனையும் ஒருங்கு சேரப் பெற்ற
கல்வி உலகின் கலங்கரை விளக்கே...

உயிருள்ள காலம் வரை
ஆ. சி நடராஜா என்ற உங்கள் அழகிய
நாமத்துக்கு எம் நெஞ்சம் தலை வணங்கும்...

உங்கள் மேல் நாம் வைத்த
உண்மை அன்பின் மீது ஆணை ஐயா
அதிபர் என்ற சொல்லுக்கு அகராதியில் அர்த்தம் தேடினோம்
கண்டு பிடிக்க முடியவில்லை...

இவரிடம் கண்டு கொண்டோம் அதனால் அக மகிழ்ந்தோம்...
பதவி என்ற அந்தஸ்தைப் பாவித்து
பல அராஜகங்களை அரங்கேற்றும்
இத்தேசத்தில் பண்பு நெறி தவறாமல்
பாங்குடனே சேவையாற்றிய வித்தகரே...

பத்திரிகைத் துறை வளர்ச்சியில்
பல்திசையும் போற்ற
நீங்கள் பெற்ற பக்குவமோ
சொல்லில் அடங்காதது...

ஆதரவற்ற ஏழை மக்களை அரவணைத்து
கருணைப்பாலம் மூலம் கரங் கொடுத்து
எத்தனை இடர் வந்தபோதும்

இடப்பெயர்வால் அடுத்தடுத்து
இடம் மாறிச் சென்ற போதும்

கல்லூரியின் தனித்துவத்தை
கட்டிக் காத்த பெருந்தகையாளனின்
காலை மாலை நேரம் பாராது
கல்வி, சமூச சேவையில்
முன்மாதிரியாகத் திகழ்ந்த
ஒப்பற்ற மனத்தினனை
சத்தமில்லாமல் தழுவிச் சென்ற
அந்தக் காலனும் ஓர் சதிகாரனோ...

நாடகத்தில் நல்ல நடிகனாய்
விளையாட்டில் யாவரும் மெச்சிடும் வீரனாய்
கடமை தவறாத கண்ணியவனாய்
நீண்டதோர் சரித்திரம் படைத்த
காவிய நாயகனே...

இருவிழிகள் நீர் ததும்ப விடை தந்தோம்
பூச்சியத்துக்குள் இராச்சியம் அமைத்த
உங்களின் ஆன்மா
இறைவனின் பொற்பாதங்களில்
சாந்தியடைய பெற பிரார்த்திக்கிறோம்...

குறிஞ்சிக்கவி செ. ரவிசாந் (வயாவிளான் மத்திய மகா வித்தியாலய பழைய மாணவன்)