மாதாஜி அம்மா ஒரு தீர்கதரிசன வாதி : என் அனுபவம் சொல்லும் உண்மை. updated 10-03-2016


நேற்று -09 ஆம் திகதி  "ஆன்மீகவாதியின் மறைவும் சமூகம் சார்ந்த பொது அமைப்புக்களின் பங்களிப்பும் சில அமைப்புக்களின் பொய் முகங்களும்" எனும் தலைப்பில் குப்பிளான் வெப் தளத்தில் எழுதப்பட்டுள்ள கட்டுரைக்கு மேலதிகமாக நானும் சில விடயங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 

நாம் எவ்வளவு காலம் வாழ்ந்தோம் என்பது முக்கியமல்ல. வாழும் காலப் பகுதியில் எப்படி வாழ்ந்தோம் என்பதே முக்கியமானது. அண்மையில் சிவபேறடைந்த ஈழத்தின்  மூத்த ஆன்மீக வாதியும், குப்பிளான் தந்த பெண் புலவருமான புலவர் மணி விசுவாம்பா விசாலாட்சி மாதாஜி அம்மையார் நடமாடும் ஆன்மீக நூல் நிலையம்மட்டுமல்ல அவர் ஒரு ஆன்மீக ஞானி. இத்தகைய பல சிறப்பியல்புகளுடன் வாழ்ந்திருந்த  அம்மையாரை எமது இளம் சமூகம் சரிவரப் பயன்படுத்தவில்லை எனவே நான் கருதுகிறேன். அம்மையாருடன் நெருங்கிப் பழகிய ஒருவன் என்ற நிலையில் அம்மையார் என்னுடன் கதைக்கும் போது இந்த விடயம் சம்பந்தமாகப் பல தடவைகள் என்னிடம் கூறிக் கவலைப்படுவார்.இளையவர்கள் மாத்திரமன்றி ஊருக்குள் அவரது பெருமைகள் பற்றியெல்லாம் பேசுகின்ற பெரியவர்கள் கூட அவர் வாழ்ந்த காலத்தில் திரும்பிக் கூடப் பார்த்ததில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. அதேவேளை, அவருக்கு வெளியிடங்களில் இருந்த மதிப்பும் ,மரியாதையும் எனக்கு நன்கு தெரியும். 

அம்மையாரது இறுதி நிகழ்வில் அஞ்சலிப் பிரசுரங்கள் வெளியிடப்படுவது என்பதை விட அவரது இறுதி அஞ்சலி நிகழ்வில் எம்மூரைச் சேர்ந்த எத்தனை பேர் கலந்து கொண்டார்கள் என்பதை எண்ணும்  போது மிகுந்த கவலையளிக்கிறது. அவரது இறுதிக் கிரியைகள் நடைபெற்ற  கடந்த திங்கட்கிழமையன்று மஹா சிவராத்திரி விரதம் என்பதால் பல பேர் கலந்து கொள்ளவில்லை எனக் காரணம் சொல்லப்பட்டாலும் இந்தக் காரணத்தை ஏற்க முடியாது. எனினும் வெளியூரைச் சேர்ந்த அவரிடம் கல்வி பயின்று  முக்கிய பதவிகளை வகிக்கும் பலரும் அவரது இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டமை சற்று ஆறுதலளிக்கிறது.  

சைவத் தமிழுக்காகத் தனது வாழ்நாளேயே அர்ப்பணித்துத் இறுதி வரை தூய துறவறம் பூண்டு வாழ்ந்த அம்மையார் எங்கள் கிராமத்தின் ஆன்மீக ஒளி விளக்கு.   'அன்னை ஒரு ஆலயம்'  என்பார்கள் .ஆனால், நெற்றியில் திருநீறும், கழுத்தில் உருத்திராக்கமும் தரித்து முப்போதும் சிவபூசை செய்து வாழ்ந்த அம்மையாரோ அந்த ஆலயத்தில் உறைகின்ற தெய்வம் என்றால் அதில் மிகையில்லை. அவருக்குச் செலுத்துகின்ற இதய பூர்வமான  அஞ்சலி தெய்வத்தை நாங்கள் பூசிப்பதற்குச் சமன்.

அவரது இறுதி ஊர்வலத்தில் குறைந்த எண்ணிக்கையானவர்கள் கலந்து கொண்டமையைப் பார்த்து விட்டு எமது ஊரைச் சேர்ந்த ஒரு கல்வியியலாளர் 'அம்மாவை  மஹாசிவராத்திரி நன்னாளில் தனது திருவடியில் சேர்க்க வேண்டுமென்பது கடவுளின் விருப்பம் '  இது அவருக்கு வழங்கப்பட்டுள்ள  கடவுளின் அழைப்பு என்பதால் மக்கள் தொகை குறைந்ததைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை என்றார். இந்தச் சந்தர்ப்பத்தில் "எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது"  எனக்  கீதையில் சொல்லப்பட்ட அமுத வாக்கு என் ஞாபகத்துக்கு வருகிறது.

என்னைப் பொறுத்த வரை அம்மையாரை  ஒரு கடவுளின் அவதாரமாகவே நான் எண்ணுகிறேன். அவர் எனக்குச் சொன்ன பல விடயங்கள் தெய்வ வாக்காக  நின்று என் வாழ்வை வளப்படுத்தின. நெறிப்படுத்தின. அவரால் எனக்கு வழங்கப்பட்ட ஆத்மாத்தமான ஆசிர்வாதங்களை  நான் கடவுளின் ஆசிர்வாதங்களாகவே  எண்ணுகிறேன். 

அதுமட்டுமன்றி நான் அவரை ஒரு தீர்க்கதரிசன வாதியாகவும் பார்க்கிறேன். அவரை நான் என் ஆத்மீகக் குருவாக ஏற்ற பின்னர்  என் வாழ்வில் நடக்கப் போகும் பல விடயங்களை முன் கூட்டியே கூறியமை எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

அவர் கடந்த வருடம் பல சந்தர்ப்பங்களில் நிலத்தில் விழுந்து சிரசில் வெடிப்புக்கள்  உட்பட உடலிலும் காயங்கள் ஏற்பட்ட போதும் கூட தான் உயிருடன் வாழ்வதற்கு எல்லாம் வல்ல சொக்கவளவு சோதி விநாயகர் திருவருளே காரணம் என அடிக்கடி கூறுவார். அவர் சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலய மணிமண்டபத்திலே வேறு உதவிகள் பெரிதுமின்றி கடந்த பல வருட காலமாக  ஒரு முதிர்ந்த பெண்மணியாகத் துறவு வாழ்க்கை வாழ்ந்திருப்பது என்பது அவ்வளவு எளிதான விடயமல்ல. இரவு வேளைகளில் அவர் உறங்கும் போது பல தடவைகள் விஷப் பாம்புகள் கூட வந்து போயிருக்கின்றன. அவர் அதற்காக ஒரு பொழுதும் அச்சப்பட்டத்தில்லை. தனது தவ வலிமையால் விஷப் பாம்புகள் எதுவும் அவரைத் தீண்டியதில்லை. எப்போதும் அவரது வாயிலிருந்து அடிக்கடி ஒலிக்கும் 'சிவாயநம'  என்ற ஐந்தெழுத்து மந்திரம் இன்றும் என் காதில் ஒலித்த வண்ணம் உள்ளது.  தான் என்ன தான்   வேலைகள் செய்தாலும் அவர் மனதார இந்த மந்திரத்தை எப்போதும் உச்சரித்துக் கொண்டேயிருப்பேன் என்று சொல்லுவார். அவரது இடைவிடாத மந்திர உச்சரிப்பு மாத்திரமன்றி தியானம், இறை சிந்தனை என்பனவும் அவரை இறுதிவரை வழிநடாத்தியது  என்பது  நான் அனுபவ ரீதியாகக் கண்ட உண்மை. 

அவர் வசித்த  இருப்பிடத்திற்கு அருகில் வாழ்ந்த ஒரு இளம் பெண்மணிக்கு திருமணமாகி நீண்ட காலத்திற்குப் பின்னர் பிறக்கவிருந்த  குழந்தை ஆண் குழந்தை தான் என முன்னரே  தெரிவித்து அவரையும், அவர் சார்ந்த குடும்பத்தையும் ஆச்சரியப்பட வைத்தவர். அம்மாவின் வாக்கால் அதிசயித்துப் போன குறிப்பிட்ட பெண்மணி தனக்குக் குழந்தை பிறந்த பின்னர் அம்மையாரிடம் வந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டு சென்றதுடன், தனது எல்லையில்லாத மகிழ்ச்சியையும் வெளிப்படுத்திச் சென்றார். இது போன்று அவரது வாயிலிருந்து வெளிப்பட்ட பல வாக்குகள் பலருக்கு வாழ்வளித்தன. வழிகாட்டின. 

இதனை விட ஆச்சரியம் என்னவெனில் நான் 2016 ஆம் ஆண்டான இந்த வருடம் உயிருடன் இருக்க மாட்டேன் என அவர் கடந்த வருடமே  தெரிவித்து விட்டார்.  இதற்கு அவரது பெறாமகளான நந்தினி அக்கா அவர்களும், நானும் சாட்சி. இப்போதாவது  மூத்த ஆன்மீக வாதியும், புலவருமான விசுவாம்பா விசாலாட்சி மாதாஜி அம்மா ஒரு  தெய்வத் தாய் தான் என்பதை ஏற்றுக் கொள்வீர்களா?  எல்லாம் அவரவர் மனப் பக்குவத்தைப் பொறுத்தது. நம்பினால் நம்புங்கள்.

தூரத்துப் பச்சை தான் கண்ணுக்குக் குளிர்ச்சியாகவிருக்கும். அதனால் தான் நாங்கள் எமது இல்லங்களுக்கு அருகில் காணப்படுகின்ற சைவ ஆலயங்களை விட்டுவிட்டு பிரபலமான ஆலயங்களுக்குச் சென்று வழிபட விரும்புகின்றோம்.பக்கத்திலிருக்கும் உறவுகளை விடத் தூரத்திலுள்ள  உறவுகளின் நலன் தொடர்பில் அதிக கரிசனை கொள்கிறோம். அதேபோல் தான் புலவர் மணி மாதாஜி அம்மா எம்மருகில் இருந்த காரணத்தாலும், நான் என்ற ஆணவமும் எனது என்ற மமதையாலும் நாம் அவரிடமிருந்து சரியான ஆன்மீக வழிகாட்டலைப் பெறத் தவறி விட்டோம். ஆனால், ஈழத்துப் பெண் புலவர்களில் முக்கியமான மூத்த ஆளுமையை நாங்கள் இழந்து விட்டோம்.ஆன்மீகத்தில்  இவ்வாறானதொரு பெண் ஆளுமையை எதிர்வரும் காலங்களில் காண்பது மிக மிக அபூர்வம் என்பதை என்னால் அறுதியிட்டுக் கூற முடியும்.

கட்டுரையாக்கம் :- செல்வநாயகம் ரவிசாந்.