விசுவாம்பா விசாலாட்சி மாதாஜி அம்மையாரின் முத்து விழா சிறப்பு மலர் வெளியீட்டு விழா பற்றிய செய்தி தொகுப்பு. updated 12-02-2012

 குப்பிழான் அன்னை ஈன்று எடுத்த அற்புதம் தான் எங்கள் விசுவாம்பா விசாலாட்சி மாதாஜி அம்மையார். அம்மையாரின் முத்து விழா சிறப்பு மலர் வெளியீட்டு விழா கடந்த 04-02-2012 சனிக்கிழமையன்று குப்பிழான் சொக்கவளவு சோதி விநாயகர் ஆலய மணி மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் தலைவராக ஆலய பரிபாலன சபை தலைவர் திரு சீ.குணலிங்கம் அவர்கள் கலந்து கொண்டார். பல ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற மிகப் பெரிய பொது நிகழ்வாக இது கணிக்கப்படுகிறது. குப்பிழான் மக்கள் மட்டுமல்ல இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலும் இருந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந்த நிகழ்வு, நல்லை திருஞானசம்பந்தர் ஆதின முதல்வர், ஆலய குரு ஆகியோர் ஆசியுரைகளை வழங்கினர். வரவேற்புரையை திரு.செ.ரவிசாந் அவர்களும், தலமையுரையை திரு குணலிங்கம் அவர்களும் வழங்கினர். தெல்லிப்பளை துர்க்காதேவி ஆலய பரிபாலனசபை தலைவர் திரு ஆறு.திருமுருகன், சைவப்பரிபாலன சபை பிராச்சார அமைச்சர் திரு மு.திருஞானசம்பந்தபிள்ளை ஆகியோர்கள் வாழ்த்துரைகளை வழங்கினர். அம்மையார் அவர்கள் அமரர் ஆகிவிட்ட செல்வி தங்கம்மா அப்பா குட்டி அவர்களுடனும் சேர்ந்து பல தொண்டுகளை ஆற்றியுள்ளார். பாராட்டுரைகளை திரு ந.குணரத்தினம், திரு ஏ.அனுசாந்தன் அவர்களும், வெளியீட்டுரையை வைத்திய கலாநிதி திரு நாகேஸ்வரன் அவர்களும், நயப்புரையை திரு சிவமகாலிங்கம் அவர்களும் வழங்கினர்.

வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள்

இந்த விழாவின் சிறப்பம்சம் யாதெனில், வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தது. இவர்கள் தற்போது வன்னி மாவட்ட வைத்திய அதிகாரியாக கடமையாற்றிவருகிறார். எல்லோராலும் நன்கு அறியப்பட்ட உன்னத மனிதன். முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள், வெறும் 4,5 மருத்துவர்கள் மட்டுமே அங்கு இருந்தார்கள். அவர்களால் பல பெறுமதிமிக்க எமது சொந்தங்கள் காப்பாற்றப்பட்டார்கள். அந்த சிலரில் ஒருவர் தான் இந்த வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி. குண்டு மழை மத்தியில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், பகல் இரவு என்று பாராது கடமையாற்றியிருக்கிறார்கள். பலர் இன்றும் உயிரோடு இருப்பதற்கு காரணம் அந்த மனித தெய்வங்கள் தான். அந்த மனித தெய்வம் எங்கள் ஊர் மண்ணில் காலடி வைத்த அன்றைய நிகழ்வு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய நன்நாள் ஆகும். வைத்திய சேவை என்பது உண்மையாகவே சேவை மனப்பான்மையுடன் உயிர்களின் மேல் உள்ள கருணையின் அடிப்படையில் செய்யும் சேவை. ஆனால் இன்றைய உலகம் அப்படியல்ல வைத்தியர்கள் பணத்தை மட்டும் குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறார்கள். நமது யாழ் மண் எத்தனையோ மிகச்சிறந்த வைத்திய நிபுணர்களை உருவாக்கிய மண். ஆனால் யாழ் மண்ணில் வைத்தியர் பற்றாக்குறை இன்றும் நிலவுகிறது. திரு சத்தியமூர்த்தி அவர்கள் எமது அன்னை விசாலாட்சி அவர்களின் மாணவன். இப்போது புரிகிறதா விசாலாட்சி யாரென்று.

மேலும் இந்த நிகழ்வில் தமிழ் நாட்டில் இருந்து விரிவுரையாளர் தியாகலிங்கம் அவர்கள் கலந்து கொண்டார்கள். திரு தியாகலிங்கம் அவர்கள் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற திருவாதுறை ஆதின விரிவுரையாளர். இந்த ஆதினம் தான் அதி உயர் பட்டங்களை வழங்குகிறது. காசி வாசி செந்திநாதையர், ஆறுமுக நாவலர், க.கணேசலிங்கம் ஆகியோர் இங்கு தான் பட்டங்களை பெற்றனர். மற்றும் கிளிநொச்சி ஆச்சிரம கன்னியாஸ்திரிகளும் கலந்து கொண்டனர். ஏற்புரையை அம்மையார் அவர்கள் வழங்கினார். திரு சசிதரன் ஆசிரியரின் நன்றியுரையுடன் இந்த நிகழ்வு இனிதே முற்றுப் பெற்றது. இந்த நிகழ்வுக்கு பூரண அனுசரணை வழங்கியவர் திரு க.தேவராஜா அவர்கள்.