குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் (பிரித்தானியா) நடாத்திய விளையாட்டு விழா 2011 பற்றிய செய்திக் குறிப்பு updated 03-08-2011


குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் 3 வது வருடமாக நடாத்திய விளையாட்டு விழா கடந்த 24-07-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று இனிதே நடைபெற்று நிறைவடைந்தது. இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக திரு கந்தையா சண்முகம் ஆசிரியர் அவர்கள் கனடாவில் இருந்து வருகை தந்து சிறப்பித்தார். இவர்கள் எமது கிராமத்தின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்புக்கு வழங்கிய கெளவரவமாக இது பார்க்கப்படவேண்டும். திரு கந்தையா சண்முகம் ஆசிரியர் அவர்கள் முன்னாள் குப்பிழான் விக்கினேஸ்வரா அதிபர். குப்பிழான் விக்கினேஸ்வரா வித்தியாசாலையாக இருந்த எமது பள்ளியை விக்கினேஸ்வரா மகா வித்தியாலயமாக தரம் உயர்த்துவதற்கு காரணகர்த்தாக்களில் இவரும் ஒருவர். அவர்கள் வாழும் போதே அவர்களின் சேவையை கெளரவிப்பது மிகவும் சிறப்பாக அமையுமென்பதில் ஜயமில்லை.

கடந்த ஒருமாத காலமாக பிரித்தானியாவின் கால நிலை மழை குளிர் என்று மிகவும் மோசமாக இருந்தது. ஆனால் கடந்த 24ம் திகதி சூரிய பகவான் மிகவும் உற்சாகமாக காலையில் இருந்து சிரித்த முகத்துடன் இருந்தார். அதன் காரணம் எங்கள் விளையாட்டு விழாவை காண வேண்டும் என்ற ஆவலாக இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.


இம்முறை எமது விளையாட்டு நிகழ்வுக்கு வழக்கத்தை விட பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். குறிப்பாக லண்டனுக்கு வெளியில் இருந்து பெருமளவான எமது உறவுகள் கலந்து கொண்டு இருந்தனர். மேலும் ஜரோப்பா நாடுகளான சுவிற்சலாந்து, ஜேர்மனி, நோர்வே, பிரான்ஸ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்தும் இந்நிகழ்வுக்கு வந்திருந்தனர். லண்டன் பகுதியில் இருந்தும் பெருமளவான மக்கள் கலந்து கொண்டனர். எதிர்காலத்தில் இந்நிகழ்வானது எல்லா நாட்டு மக்களின் நிகழ்வாக நடைபெற்றால் மிகவும் சிறப்பானதாக அமையும்.இம்முறை பாராட்டு பெற்ற முதலாவது பகுதி எமது உணவகம். இம்முறை கூழ்,கொத்து ரொட்டி, கொத்து இடியப்பம், நெல்லிகிரஸ், சர்பத், ஜஸ்கிரீம், றோள்ஸ், வடை போன்ற பல வகையான உணவுகள் விற்பனை செய்யப்பட்டன. குறிப்பாக கூழ் மிகவும் சுவையாக இருந்தது. எல்லோரும் கூழை சுவைத்து சுவைத்து பருகினார்கள். அந்த நிகழ்வுக்கு வந்த ஒருவர் குறிப்பிடும் போது கடந்த 20 வருடங்களுக்கு பிறகு அந்த அற்புமான எமது பாரம்பரியம் மிக்க அந்த கூளை அருந்துகிறேன் என்றும், அருந்தும் போது நான் எமது கிராமத்தில் நிற்பதாக உணர்வதாக குறிப்பிட்டார். அந்த இனிமையான கூழை தயாரித்தவர்களுக்கு தமது பாராட்டுக்களையும் தெரிவித்தார்.


அடுத்தது சிறுவர்களை கவர்ந்த பகுதி bouncy castle. இந்த பகுதியானது இம்முறை புதிதாக சேர்க்கப்பட்டது. பெருமளவான சிறுவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவித்தார்கள். ஆரம்ப நிகழ்வாக மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. மங்கல விளக்கை திரு கந்தையா சண்முகம் அவர்கள் ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து சிறார்களின் அணி வகுப்புடன், ஜேர்மனியில் இருந்து வருகை தந்த திரு வைத்தியநாதன், திரு மோகன், திரு மணிவண்ணன் அவர்கள் முன்னே செல்ல சிறுவர்கள் மற்றும் மற்றையோர்கள் பின்னே செம்மண், மஞ்சள் நிற றிபன்களை அணிந்து அணிவகுத்த அந்த காட்சி மிகவும் சிறப்பாக இருந்தது. அணி வகுப்பின் பின் செல்வி அனுசியா, செல்வி அஜிதா அவர்கள் குப்பிழான் கீதம் பாட பிரதமவிருந்தினர் குப்பிழான் கிராமிய கொடியை ஏற்றினார். அதனைத் தொடர்ந்து விளையாட்டு நிகழ்வு ஆரம்பமானது. 100 மீற்றர், 200மீற்றர், நீளம் பாய்தல், குண்டு எறிதல், மற்றும் சிறுவர்களுக்கான நிகழ்வுகள் இனிதே நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து சிறுவர் பெரியோர்களுக்கான தடை தாண்டி ஓட்டம் நடைபெற்றது. இந்த தடை தாண்டும் ஒட்டம் ஆனது எல்லோரையும் மிகவும் கவர்ந்தது. இந்த வேடிக்கை நிகழ்வில் முதலில் போட்டியாளர் மாவுக்குள் இருக்கும் காசை வாயல் ஊதி எடுக்க வேண்டும் அதன் பின்னர் சாக்கினுள் உள்நுளைந்து ஓடவேண்டும், பின்னர் சிறிய போத்தலினுள் தண்ணீர் நிரப்ப வேண்டும் அதன் பின்னர் வைக்கப்பட்ட உணவை கையால் தொடாமல் எடுத்து சாப்பிட வேண்டும். சாப்பிட்டு முடித்தவுடன் பலூனை உடைத்து, முடிவிடத்தை யார் சென்று அடைகிறார்களோ அவர்கள் வெற்றி பெற்றவர்களாக கருதப்படுகிறார்கள்.


இந் நிகழ்வை தொடர்ந்து ஜரோப்பா வாழ் குப்பிழான் மக்களுக்கும் பிரிதானியா வாழ் குப்பிழான் மக்களுக்கும் இடையில் சினேகபூர்வ உதைபந்தாட்டம் நடைபெற்றது. நேரம் போதாமையால் 20 நிமிடங்கள் நடைபெற்ற இப் போட்டியில் ஜரோப்பிய அணி வெற்றியை தனதாக்கி கொண்டது. நேரம் போதாமையால் 20 நிமிடம் நடைபெற்ற இந் நிகழ்வானது இன்னும் நேரம் கூட ஒதுக்கியிருந்தால் மிகவும் நல்லாய் இருக்கும் என்று பார்வையாளர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். அதனைத் தொடர்ந்து ஆண்கள், பெண்கள் அவர்களுக்கு இடையிலான கயிறு இழுவை போட்டி நடை பெற்றது.


எமது கிராமத்தை சேர்ந்த திரு பாலசுப்பு அவர்களின் பேரப்பிள்ளைகளால் face painting செய்யப்பட்டது. சிறுவர்கள் மிகவும் ஆவலாக தங்களுக்கு பிடித்த படங்களை தமது முகத்தில் பதிந்து கொண்டனர். இதில் கிடைத்த வருமானம் முழுவதும் குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றத்துக்கு வழங்கப்பட்டது.
இறுதி நிகழ்வாக உரைகளும், பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது. முதலில் குப்பிழான் விக்கினேஸ்வரா மன்ற தலைவர் திரு மோகனதாஸ் அவர்களின் உரையுடன் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து பிரதம விருந்தினர் திரு கந்தையா சண்முகம் அவர்கள் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து மருத்துவர் திருமதி சதானந்தரூபி அவர்கள், மன்ற பொருளாளர் திரு ஜங்கரலிங்கம் அவர்கள், திரு சக்தி அவர்கள், திரு வைத்தியநாதன் அவர்கள், திரு கந்தையா(RDO) அவர்கள், திரு செந்தூர் அவர்கள் உரையாற்றினார்கள். மன்ற செயலாளர் திரு சச்சிதானந்தன் அவர்கள் தனது நன்றி உரையை நிகழ்த்தினார்.


உரையை தொடர்ந்து இந்த நிகழ்வுக்காக வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து பரிசளிப்பு விழா இடம் பெற்றது. பரிசளிப்பு நிகழ்வுடன் இந்த விளையாட்டு நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.